சர்வதேச தீவிரவாதம் நுழைவதை தடுக்க விஷேட பாதுகாப்பு பொறிமுறை | தினகரன்

சர்வதேச தீவிரவாதம் நுழைவதை தடுக்க விஷேட பாதுகாப்பு பொறிமுறை

சர்வதேச தீவிரவாதிகள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்க விஷேட பாதுகாப்பு பொறிமுறையை செயற்படுத்தியுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச பொலிஸாரின் (இண்டர்போல்) ஒத்துழைப்புடன், இலங்கையில் சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஆகியன தொடர்பு கொண்டு இதனை செயற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்டபோல் எனப்படும் சர்வதேச பொலிஸார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் எமது நாட்டுக்கு நேரடியாக இல்லாதிருப்பினும், தெற்காசிய, ஆசியாவின் ஏனைய வலயங்களில் மேற்கொள்ளப்படும் தீவிரவாதத் தாக்குதல்களை, கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாதென அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தான் இந்த நடவடிக்கையை முன்கூட்டியே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் சர்வதேச பொலிஸாரின் தரவுத் தளக் கட்டமைப்புடன் தற்போது இலங்கையின் குடிவரவு குடியகல்வு கட்டமைப்பு தொடர்புபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் சாகல ரத்நாயக்க, இன்டபோலினால் சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள எவரும் நாட்டுக்குள் நுழைய முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு எவரேனும் வர முற்படுவார்களாயின், இலங்கை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 


Add new comment

Or log in with...