ஒருநாள் தாமதித்த சிரிய அரச தரப்பு அமைதி பேச்சில் பங்கேற்பு | தினகரன்

ஒருநாள் தாமதித்த சிரிய அரச தரப்பு அமைதி பேச்சில் பங்கேற்பு

ஜெனீவாவில் நடைபெறும் எட்டாவது சுற்று சிரிய அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை ஒருநாள் தாமதித்த அரச பிரிதிநிதிகள் புதன்கிழமை அங்கு சென்றடைந்தனர்.

சிரிய அரச தரப்பு பிரதிநிதிகளின் தலைவர் பஷர் ஜபாரி, ஐ.நா சிறப்பு தூதுவர் ஸ்டபன் டி மிஸ்டுராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து, ஆக்கபூர்வமான மற்றும் முறையான சந்திப்புக்கான சூழல் இருப்பதாக டி மிஸ்டுரா ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பஷர் அல் அஸாத் வெளியேறுவது குறித்த அரச எதிர்ப்பாளர்களின் நிலைப்பாட்டை எதிர்த்தே சிரிய அரச தரப்பு இந்த மாநாட்டில் பங்கேற்பதை உறுதி செய்யாமல் இருந்தது. இந்நிலையில் டி மிஸ்டுராவுடனான சந்திப்பில் அஸாத் வெளியேறுவது குறித்த விவகாரத்தை பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்வதில்லை என்ற உறுதிப்பாட்டை அடுத்தே அரச தரப்பு பேச்சுவார்த்தைக்கு இணங்கியதாக கூறப்படுகிறது.

முந்தைய ஏழு சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் புதிய சுற்று பேச்சுவார்த்தை அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்று டி மிஸ்டுரா குறிப்பிட்டுள்ளார்.

அரச எதிர்ப்பு பிரிதிநிகள் கடந்த செவ்வாய்க்கிழமை டி மிஸ்டுராவுடன் சந்திப்பை நிகழ்த்தினர். இதன்போது அரச தரப்போடு நேருக்கு நேர் சந்திப்புக்கு தயாரென அவர்கள் குறிப்பிட்டனர். எனினும் அரச தரப்பு அவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்றுக்கு தயாரில்லையென கூறப்பட்டுள்ளது.

340,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சிரியாவின் ஆறு ஆண்டு யுத்தத்திற்கு முடிவுகாண சாத்தியமான உடன்பாடொன்றை எட்டுவதற்கு உண்மையான பேச்சுவார்த்தை எதிர்வரும் சுற்றில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக டி மிஸ்டுரா நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ரஷ்யா உதவியுடன் சிரிய அரசு நாட்டின் 55 வீத நிலத்தை மீட்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. எஞ்சிய பகுதிகள் கிளர்ச்சியாளர்கள், ஜிஹாதிக்கள் மற்றும் குர்திஷ் படைகளிடம் பிரிந்து காணப்படுகிறது. 


Add new comment

Or log in with...