காசாவை பத்தாவிடம் கையளிக்கும் ஹமாஸ் சமரச திட்டம் ஒத்திவைப்பு | தினகரன்

காசாவை பத்தாவிடம் கையளிக்கும் ஹமாஸ் சமரச திட்டம் ஒத்திவைப்பு

 

பலஸ்தீனின் காசா பகுதியை தனது போட்டி அமைப்பான பத்தாவுக்கு கையளிக்கும் ஹமாஸின் திட்டம் டிசம்பர் 10ஆம் திகதிக்கு 10 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

காசா அதிகாரத்தை பத்தா அமைப்பு இன்று டிசம்பர் முதலாம் திகதி கையேற்க இருந்தபோதும், ஏற்பாடுகளை பூர்த்தி செய்வதற்காகவே இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காசா நிர்வாகத்தை கையளிக்க ஹமாஸ் முன்வந்ததை அடுத்து பத்தா மற்றும் ஹமாஸுக்கு இடையில் எகிப்து தலைநகரில் கடந்த மாதம் சமரச உடன்படிக்கை கையெழுத்தானது.

இந்நிலையில் காசாவில் எகிப்து பாதுகாப்பு பிரிதிநிதிகளுடன் இரு தரப்பும் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் சந்திப்பொன்றை நிகழ்த்தினர். இதனை அடுத்தே காசாவில் ஆட்சியை கையளிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான சமரச செயற்பாடுகளுக்கு காலதாமதம் தேவைப்படுவதாக பத்தா பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சமரச உடன்படிக்கை தொடர்பில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பத்தா மற்றும் ஹமாஸுக்கு இடையில் தொடர்ந்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக காசாவில் உள்ள அரச ஊழியர்களின் எதிர்காலம் மற்றும் ஹமாஸ் ஆயுதப் பிரிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மேற்குக் கரையை தளமாகக் கொண்ட சர்வதேச ஆதரவு பெற்ற பலஸ்தீன அதிகார சபையிடம் காசாவின் பல அமைச்சு பொறுப்புகளை கையளித்தபோதும் சில அமைச்சுகளை ஹமாஸ் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மூன்று அமைச்சுகளுக்கு பலஸ்தீன அதிகார சபை ஊழியர்கள் நுழைவதை ஹமாஸ் தடுத்தது கடந்த புதன்கிழமை பரபரப்பை எற்படுத்தியது. சமரச உடன்படிக்கையின்படி நடந்துகொள்ளவில்லை என்று இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டின.

காசாவில் 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு ஆட்சிக்கு வந்தது தொடக்கம் ஹமாஸ் மற்றும் பத்தாவுக்கு இடையில் இதற்கு முன்னர் பல சமரச முயற்சிகள் இடம்பெற்றபோதும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. 


Add new comment

Or log in with...