மக்களவைக்கு முதல்முறை பெண் தலைமை செயலாளர் | தினகரன்

மக்களவைக்கு முதல்முறை பெண் தலைமை செயலாளர்

மக்களவையின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்நேகலதா ஸ்ரீவாஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று பொறுப்பேற்க உள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 15-ம் திகதி கூடுகிறது. இந்நிலையில் மக்களவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்களவை தலைமைச் செயலாளராக உள்ள அனுப் மிஸ்ரா ஓய்வு பெறவுள்ளதையடுத்து, புதிய தலைமைச் செயலாளராக ஸ்நேகலதா ஸ்ரீவாஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண் ஆவார்.

இன்று பொறுப்பேற்க உள்ள இவர், 2018-ம் ஆண்டு நவம்பர் 30-ம் திகதி வரை இப்பதவியில் நீடிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1982-ல் மத்திய பிரதேச மாநில பிரிவில் ஐஏஎஸ் முடித்த, ஸ்நேகலதா இப்போது நீதித் துறை செயலாளராக பதவி வகிக்கிறார். இவர் இதற்கு முன்பு நீதித் துறை இணை செயலாளராகவும் நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை கூடுதல் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

மாநிலங்களவையின் முதல் பெண் தலைமைச் செயலாளராக ரமா தேவி ஏற்கெனவே பதவி வகித்துள்ளார். இரு அவைகளின் தலைமைச் செயலாளர்களும் மத்திய அமைச்சர்களுக்கு நிகரான அதிகாரம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 


Add new comment

Or log in with...