முடிவுக்கு வந்தது இழுபறி: ஆர்.கே நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்; மீண்டும் வாய்ப்பு | தினகரன்

முடிவுக்கு வந்தது இழுபறி: ஆர்.கே நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்; மீண்டும் வாய்ப்பு

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிட மதுசூதனனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆட்சிமன்றக் குழு கூடி வேட்பாளரை முடிவு செய்யும் என ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் நேற்று காலை கூடிய ஆட்சிமன்றக்குழு மதுசூதனனை வேட்பாளராக அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஓபிஎஸ் அணியில் வேட்பாளராக போட்டியிட்டவர் மதுசூதனன், ஈபிஎஸ் அணியில் தினகரன் போட்டியிட்டார். தேர்தல் ரத்து செய்யப்பட்டவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. ஓபிஎஸ் அணிகள் இணைந்தாலும் உடனிருப்பவர்கள் யாருக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பது அனைவரின் குறைபாடாக இருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஆர்.கே.நகர் இடைதேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திமுக, நாம் தமிழர் கட்சியினர் அவர்களது முந்தைய வேட்பாளர்களையே அறிவித்து விட்டனர். அதிமுகவில் முந்தைய வேட்பாளர்களில் தினகரன் எதிரணிக்குச் சென்று விட்டார். மதுசூதனன் தற்போது எடப்பாடி அணியில் இருப்பதால் அவர் அதே தொகுதியை சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

மதுசூதனனும் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடத் தயார் என்று அறிவித்திருந்தார். ஆனால் வேட்பாளரை அறிவிப்பதாக சொன்ன திகதியில் அறிவிக்க முடியாமல் எதிர்ப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

விருப்ப மனு பெற்று ஆட்சிமன்றக்குழு தேர்வு செய்யும் என்று அறிவித்தனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் 24 பேர் விருப்பமனுவை பெற்றுச்சென்றனர்.

இதில் மதுசூதனன், கோகுல இந்திரா, ஆதிராஜாராம், பாலகங்கா உள்ளிட்ட பிரபலங்களும் விருப்பமனுவை பெற்றுச்சென்றனர். இதனால் மதுசூதனனுக்கு போட்டி கடுமையாகி இருந்தது.

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) காலை எடப்பாடி, ஓபிஎஸ், மதுசூதனன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், ஜஸ்டின் செல்வராஜ், தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி, உள்ளிட்ட 8 ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் தலைமை அலுவலகத்தில் கூடினர். விருப்ப மனு அளித்தவர்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டது. இதில் பாலகங்கா, கோகுல இந்திரா உள்ளிட்டோர் அதே தொகுதியை சேர்ந்தவர்கள் அல்ல, மேலும் மதுசூதனன் ஜெயலலிதாவால் 1991-லேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வென்று அமைச்சராகவும் இருந்தவர், தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் அவர் நின்றால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும், ஒருசிலர் எதிர்ப்பை விட கட்சி வெற்றிப்பெறுவதே முக்கியம் என்ற அடிப்படையில் மதுசூதனனையே மீண்டும் வேட்பாளராக அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் மனுத்தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது. 


Add new comment

Or log in with...