நபிகளின் வாழ்வியல் தத்துவம் போதிக்கும் இனநல்லிணக்கம் | தினகரன்

நபிகளின் வாழ்வியல் தத்துவம் போதிக்கும் இனநல்லிணக்கம்

இஸ்லாத்தின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் உதித்த பொன்னான நாளை நினைவுபடுத்தும் இன்றைய தினத்தில் மனித சமுதாயத்தின் வாழ்வியல் போக்குகள் குறித்து மீளாய்வு மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும். இன்றைய உலகின் போக்கு எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கின்றது என்பதை கவனத்தில் எடுத்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்குள் உலகம் இருக்கின்றது.

நபிகள் நாயகம் அவர்கள் அவரது காலத்திற்கு மாத்திரமான ஒரு மனிதராகத் திகழவில்லை. அன்னார் பிறந்து இறைவனது இறுதித் தூதராக அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்றைய நாள்வரை 1500 ஆண்டுகளை உலகம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அன்று அல்லாஹ்வால் அவருக்கு அருளப்பெற்ற குர்ஆனும் அண்ணலாரால் போதிக்கப்பட்ட போதனைகளும் இன்றளவும் துளியளவேனும் பிசகின்றி அப்படியே காணப்படுகின்றன. அவற்றில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறவில்லை. இடம்பெறவும் முடியாது.

நபிகள் நாயகம் அராபியர்களுக்கு மட்டுமோ அல்லது முஸ்லிம்களுக்கு மாத்திரமோ உரியவரல்லர். எல்லாக் காலத்துக்கும் எல்லா மக்களுக்கும் இன, நிற பேதமின்றி அனைவருக்குமாக இறைவனால் அனுப்பப்பட்ட திருத்தூதராகவே திகழ்கின்றார்கள். முழு மனித சமுதாயத்துக்கும் அழகிய முன்மாதிரியாகவே அன்னார் விளங்குகின்றார். அன்று ஏழாவது நூற்றாண்டுக்கு இணையற்ற தூதராக காணப்பட்டது போன்றே இன்று 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித கூட்டத்துக்கும் பொருத்தமானவராகவே காணப்படுகின்றார்.

அண்ணலார் காலத்திலும் கோத்திர முரண்பாடுகள் மதமுரண்பாடுகள் இருக்கவே செய்தன. அதுவும் அண்ணலாரை கொலை செய்யும் அளவுக்கு அவர்களது செயற்பாடுகள் தலைவிரித்தாடின. அவற்றையெல்லாம் தனது சகிப்புத்தன்மை மூலமும் புத்திக்கூர்மையோடும் சமாளித்து அந்தக கால மக்களின் மனங்களை வென்றெடுத்து அனைத்து மக்களையும் ஒரே குடையின் கீழ் அணிதிரட்டுவதில் அவர் பெருவெற்றி கண்டார்.

தனது 63 வருட வாழ்க்கைப் பயணத்தில் சின்னாபின்னாப்பட்டு அராஜகத்துக்குள் சிக்கியிருந்த 'ஜாஹிலிய்யா' காலத்து மக்களை சீர்திருத்தி பஞ்சமா பாதகங்களை விட்டொழித்து மனிதப்புனிதர்களாக அந்த மக்களை நல்வழிப்படுத்திய பெருமானார் தனது வாழ்க்கைப் பாடத்தை உலகம் உள்ளளவும் மக்களுக்காக விட்டுச் சென்றார்கள்.

மதம், இனம், மொழி எம்மிடையே வேறுபட்டுக் காணப்படுகின்ற போதிலும் அன்பு, கருணை, நல்லிணக்கம் உள்ளிட்ட நபிகளாரின் போதனைகள் சகலருக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றன. எந்தவொரு மதத்திலும் பொறாமை உட்பட தீயனவற்றுக்கு இடமே கிடையாது.

எல்லா மதங்களும் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றுதான் போதிக்கின்றன. ஆனால் அந்தப் போதனைகள் ஒவ்வொரு தரப்பினராலும் தவறான புரிதலாகக் கொள்ளப்படுவதன் காரணமாக உலகம் தவறான பாதைக்குள் இட்டுச் செல்லப்பட்டுக் கொண்டிருப்பதையே காணக்கூடியதாக உள்ளது. நட்புறவு, பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு, மனிதாபிமானம் என்பன பற்றி கூக்குரல் இடுகின்றோம். ஆனால் அவற்றின் பெறுமானத்தைப் புரிந்து கொள்ளாமல் உலகம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எங்கு பார்த்தாலும் மண் ஆசையும், பொன் ஆசையும், பெண்ணாசையுமே ஒங்கிக் காணப்படுகின்றன. இதில் மண்ணாசை இந்த உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. மதத் தலைவர்களின் போதனைகள் மேடை அலங்காரமாக மாறிப்போயுள்ளன. ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது அதன் அதிகார பலத்தைக் காட்டுவதில் தீவிரம் காட்டி வருகின்றது. இனங்களுக்கிடையேயும் அதுதான் நடக்கின்றது. ஒரு இனம் மற்றைய இனங்களை நசுக்கி அடக்கியாள முனைகின்றது.

உயர் தாழ்வு பார்க்காதே, பேசாதே என்ற போதனைகள் இன்று செல்லாக்காசாகிப் போயுள்ளன. சாதி, மத பேதங்கள் மீண்டும்மீண்டும் தலைதூக்கிய வண்ணமே உள்ளன. இந்த நிலைமைக்கான காரணிகள் கண்டறியப்பட வேண்டும். இந்த உலகம் மீண்டும் ஏழாம் நூற்றாண்டுக்கு முந்திய காலகட்டதுக்கு பின்னோக்கிச் செல்ல வேண்டுமா? அல்லது மத விழுமியங்கள், கோட்பாடுகளை மீளாய்வு செய்து அதன் வழி பயணிப்பதா என்பது குறித்து ஒவ்வொருவரும் சிந்திக்க முன்வர வேண்டும்.

இன்றைய எமது தலைவர்களின், வழிகாட்டிகளின் செயற்பாடுகள் குறித்து எந்த விதத்திலும் திருப்தி கொள்ள முடியாதுள்ளது. அவர்களது செயற்பாடுகள் வழிகாட்டல்கள் திசைமாறிப் போய்க் கொண்டிருப்பதையே காண முடிகிறது. ஆத்மிக போதனைகள் பணத்துக்கு விலைபோய்க் கொண்டிருக்கின்றன. அவற்றில் நிறையவே ஏற்றத்தாழ்வும், புறந்தள்ளல்களும் ஊடுருவி உலகம் வேறு திசையின் பக்கம் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்தத் தவறான புரிதல்கள் காரணமாக எங்கு பார்த்தாலும் இனமுரண்பாடுகளும், மதக் கலவரங்களும், போர் மேகங்களையுமே காணக்கூடியதாக உள்ளது. மதக் கோட்பாடுகள் கூட தவறான புரிதல்களுக்குள் சிக்கியுள்ளன. நபிகளாரின் ஜனனதினமான இன்றைய நாளில் உலக மக்கள் கடந்த காலத்தை பின்னோக்கிச் பார்த்து சரியான பாதையில் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும். மனித குலம் சீர்பெற வேண்டும். மனித சமுதாயத்தின் வாழ்வியல் வளமாக வேண்டும். அதற்கு நபிகளாரின் போதனைகளும், குர்ஆன் வழியும் எமக்கு பாதைகாட்டி நிற்கின்றதை உணர்ந்து சரியான திசையில் பயணிப்போமாக!


Add new comment

Or log in with...