Thursday, March 28, 2024
Home » இலங்கை உட்பட பல நாடுகளுடன் தொடர்பு கொண்ட சவுதி வெளிவிவகார அமைச்சர்

இலங்கை உட்பட பல நாடுகளுடன் தொடர்பு கொண்ட சவுதி வெளிவிவகார அமைச்சர்

by mahesh
November 1, 2023 12:19 pm 0 comment

சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா, காஸாவின் தற்போதைய கவலைக்கிடமான நிலைமை தொடர்பாக தம்மாலான உதவிகளை செய்யும் நோக்கில் நட்பு நாடுகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் பிரெஞ்சு குடியரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின் கொலோனாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் அவசர மனிதாபிமான போர்நிறுத்தம், சர்வதேச சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடைப்பிடித்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு கடந்த ஒக்டோபர் 27 வெளியிடப்பட்ட ஐ.நா தீர்மானத்திற்கு பிரெஞ்சு குடியரசு ஆதரவு தெரிவித்ததை சவுதி வெளியுறவு அமைச்சர் பாராட்டினார்.

இரு அமைச்சர்களும் காசா பகுதியில் இராணுவ விரிவாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள், காசா பகுதியில் உள்ள மக்களுக்குத் தேவையான உதவிகள், அவசரத் தேவைகளை வழங்க மனிதாபிமான மற்றும் நிவாரண அமைப்புகளை செயல்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்புடைய சர்வதேச தீர்மானங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் குறித்து விவாதித்தனர்.

இத்தொடரில் சவுதி வெளிவிவகார அமைச்சர், ஸ்பெயின் இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் மனுவல் அல்பரேஸ் உடனும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். அவருடனான அழைப்பின் போது, ​​கடந்த ஒக்டோபர் 27 காஸாவில் உடனடி போர்நிறுத்தத்தையும் காசா பகுதியில் அவசர மனிதாபிமான சண்டையை நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஐ.நா சபையின் தீர்மானத்திற்கு ஸ்பெயின் ஆதரவு தெரிவித்ததை அவர் பாராட்டினார்.

அத்துடன் காஸா பகுதி, அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள ஆபத்தான சூழ்நிலையால் ஏற்படப் போகும் விளைவுகள் மற்றும் போர்நிறுத்தத்தை அடைவதற்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச சமூகம் தனது பங்கை ஆற்றுவதன் முக்கியத்துவம் குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

அதன் போது காஸாவில் நடைபெறும் இரத்தக்களரியை நிறுத்துவதற்கும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும், மனிதாபிமான தேவைகளின் நெருக்கடி மோசமடைவதைத் தடுப்பதற்கும் அனைத்து முன்னேற்றகரமான முயற்சிகளையும் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதே தொடரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் சவுதி அரேபியா வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

காசா பகுதியில் உடனடி போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படுதல் மற்றும் அவசர மனிதாபிமான போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கடந்த ஒக்டோபர் 27 வெளியிடப்பட்ட ஐ.நா தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவு தெரிவித்ததை சவுதி வெளியுறவு அமைச்சர் பாராட்டினார்.

காசா பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள ஆபத்தான சூழ்நிலையில் ஏற்பட வேண்டிய முன்னேற்றங்கள் மற்றும் போர்நிறுத்தத்தை அடைவதற்கும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், மனிதாபிமான மற்றும் நிவாரண அமைப்புகளுக்கு அவசர மற்றும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு வழிசெய்தல் போன்ற விடயங்களில் சர்வதேச சமூகம் தனது பங்கை ஆற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

இதேவேளை சவுதி வெளிவிவகார அமைச்சர் தென்னாபிரிக்கா, சிரியா, தாய்லாந்து, ​ேமால்டா, அமெரிக்கா போன்ற பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காஸாவின் நிலை பற்றியும் அங்கு மேற்கொள்ள வேண்டிய அவசரமான முன்னேற்றங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தினார்.

இரு புனிதத் தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் அவரது பட்டத்து இளவரசர் முகம்மத் பின் சல்மான் ஆகியோரின் வழிகாட்டலில் சர்வதேசத்திற்கும் ஐ.நாவுக்கும் அழுத்தங்களைக் கொடுப்பதற்கான முயற்சிகளை சவுதி வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT