Home » உத்தரிக்கின்ற ஆத்துமாக்கள் திருநாள் இன்று
கல்லறைகள் தரும் சிந்தனைகள்

உத்தரிக்கின்ற ஆத்துமாக்கள் திருநாள் இன்று

by mahesh
November 1, 2023 6:04 am 0 comment

கார்த்திகை மாதத்தை நம்மத்தியில் வாழ்ந்து இறந்த நம் உறவுகளை நினைத்து அவர்களுக்காக செபிப்பதற்கு வாய்ப்பை வழங்கும் வகையில் கத்தோலிக்க திருச்சபை நமக்கு வழங்கியுள்ளது.

திருச்சபையானது குறிப்பாக கார்த்திகை மாதத்தின் முதலாம் திகதியில் சகல புனிதர்களின் திருவிழாவையும் இரண்டாம் திகதி மரித்த ஆத்துமாக்கள் திருநாளையும் சிறப்பிக்கின்றது.

இந்த உலகிலே வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை பற்றி மட்டுமல்லாமல் வாழ்ந்து மரித்தவர்களைப் பற்றியும் அதிகமாக சிந்தித்து அதற்காக ஒரு தினத்தை சிறப்பிப்பவர்களும் கிறிஸ்தவர்கள் மட்டும்தான் என்று கூறினால் அது மிகையாகாது.

“நீ இருக்கும் இடத்தில் நான் இருந்தேன்”

“நான் இருக்கும் இடத்தில் நீ இருப்பாய்” இது ஒரு கல்லறை மேல் எழுதப்பட்டிருந்த வாக்கியம். அதே போன்று மற்றும் ஒரு கல்லறையில் “கல்லறைகள் நாம் சிறப்பாக வாழ்வதற்கு சிந்தனைகளை தருகின்ற கருவறைகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாக்கியங்கள் அனைத்துமே நம்மை அச்சுறுத்துவதற்காக எழுதப்பட்டவை அல்ல. மாறாக நாம் ஆழ்ந்து சிந்திப்பதற்காகவும் அர்த்தமுள்ள வாழ்கை வாழ்வதற்காவுமே என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருமுறை மறைக்கல்வி நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் “உண்மையான கிறிஸ்தவன் யார்?” என்று கேட்டார்.

அப்பொழுது ஒரு மாணவன் எழுந்து நின்று “மரணத்தைக் கண்டு அஞ்சாதவன் எவனோ அவனே உண்மையான கிறிஸ்தவன்” என்று பதில் கூறினான். மோட்சத்திற்குச் செல்ல எல்லோரும் விரும்புகின்றார்கள். ஆனால் இறப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. இது நாம் அறிந்த உண்மையாகும்.

மேலும் மரணத்தைப் பற்றிய பயம்அச்சம் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் உண்டு. விவிலியத்தைப் பொறுத்தவரையில் நமது ஆதி பெற்றோர்கள் செய்த பாவத்தினால்தான் மரணத்தைப் பற்றிய பயம் இந்த உலகத்திலும் மனித உள்ளத்திலும் நுழைந்தது.

ஒவ்வொரு நாளும் நம்மைப் பார்த்து நாம் கேட்க வேண்டிய கேள்வி “எதற்காக நாம் இறக்க வேண்டும் என்பதல்ல. மாறாக இறப்பதற்கு நாம் ஏன் பயப்படுகின்றோம்? என்பதுதான்.

ஏனென்றால் கண்ணதாசன் அழகாகச் சொல்வது போல் “சாவதற்கு எவன் அஞ்சுவதில்லையோ, அவனே வாழ்வதற்குத் தகுதியுள்ளவன்” என்பதை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

இறந்த விசுவாசிகளைப் பற்றி நினைத்துப் பார்க்கும் இம்மாதத்திலே, வாழ்வதற்கு நாம் தகுதி உள்ளவர்களாக உள்ளோம். நமது வாழ்க்கை பலருக்கும் எந்தளவு நன்மையானது என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.

நம் எல்லோருக்கும் தெரிந்தது போல், இயேசுவின் காலியான கல்லறைதான் இயேசு உயிர்த்து விட்டார் என்ற சீடர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியது என்று விவிலியம் கூறுகின்றது.

கார்த்திகை மாதத்தில் மரித்தோருக்காக நாம் அனைவரும் கல்லறைக்குச் சென்று இறந்தவர்களுக்குச் செபிப்பது வழக்கம். அவ்வாறு சென்று செபிக்கும் போது நமது நிலையற்ற வாழ்க்கையைப் பற்றியும் நாம் வாழுகின்ற முறையைப் பற்றியும் சிந்தித்துப்பார்ப்போம் ஏனென்றால் “கல்லறைகள் நாம் சிறப்பாக வாழ்வதற்கான சிந்தனைகளை தருகின்ற கருவறைகள்”. மரணத்தைப் பற்றித் தெரியாதவனுக்கு வாழ்கையைப் பற்றித் தெரியாது? என்பது புனித அகுஸ்தினாரின் வார்த்தைகள். நமது வாழ்க்கையைப் பற்றி நாம் புரிந்து கொள்ள விரும்பினால் ஒவ்வொரு நாளும் நமது மரணத்தைப்பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான, நேர்மையான மனிதனாக வாழ முடியும்.

ஒவ்வொரு நாளையும் இறுதி நாளென்று நினைத்து அதை முழுமையாக இறைவனுக்கு ஏற்ற விதத்தில் வாழ்ந்தால் நாமும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம் என்பது உறுதி.

 

நோயல் டானியல் - காத்தக்குளம் வட்டக்கண்டல் மன்னார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT