அம்ருதா ஜெயாவின் மகள் என கூறவில்லை; உறவினர் லலிதா | தினகரன்

அம்ருதா ஜெயாவின் மகள் என கூறவில்லை; உறவினர் லலிதா

அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என நான் கூறவில்லை என லலிதா கூறிஉள்ளார். ஜெயலலிதாவின் மகள் எனவும் இதனை நிரூபிக்கும் வகையில் டி.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த பெண் அம்ருதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயா் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, ஜெயலலிதாவின் ஒரே மகள் நான் தான் என்பதை என்னிடம் கூறினார். பசவனகுடியில் வசிக்கும் மற்றொரு உறவினர் லலிதாவும், இவ்வி‌ஷயத்தை உறுதிபடுத்தினார் என அம்ருதா கூறியிருந்தார். ஜெயலலிதாவின் உறவினர்கள் எனக்கூறி எல்.எஸ். லலிதா மற்றும் ரஞ்சனி ரவீந்திரநாத் ஆகியோர் இணைப்பு மனுக்களையும் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என நான் கூறவில்லை என லலிதா தி நியூஸ் மினிட் இணையதளத்திற்கு பேட்டியளித்து உள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக அம்ருதா உச்ச நீதிமன்றம் சென்றது தொடர்பாக அதிர்ச்சியை தெரிவித்து உள்ள லலிதா, “ஒருமுறை மட்டுமே நான் அம்ருதாவை சந்தித்தேன். என்னுடைய உறவினரான ரஞ்சனி ஆறு மாதங்களுக்கு முன்னதாக அம்ருதாவை என்னிடம் அழைத்து வந்தார். அப்போது அவரிடம் என்னுடைய அம்மா கூறியதை பகிர்ந்துக் கொண்டேன், ஜெயலலிதாவிற்கு மகள் இருந்தாள் என என்னுடைய தாயார் கூறியதைதான் அவர்களிடம் நான் பேசினேன். ஆனால் அம்ருதாதான் ஜெயலலிதாவின் மகள் என கூறவில்லை” என கூறிஉள்ளார்.

லலிதா மேலும் பேசுகையில், “ஜெயலலிதா நடிகையாக இருந்த போது 1970-ம் ஆண்டு சென்னையில் திருமணம் ஒன்றில் அவரை சந்தித்தேன். அதன்பின்னர் ஜெயலலிதாவுடன் எனக்கு எந்தஒரு தொடர்பும் கிடையாது. ஜெயலலிதா முதல்-அமைச்சரான பின்னர் எங்களுடைய குடும்பத்தில் இருந்து யாரும் அவரை சந்திக்கவில்லை,” என கூறிஉள்ளார். தன்னுடைய ரிட் மனு தொடர்பாக அம்ருதா, லலிதாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இமெயில் அனுப்பி உள்ளார்.

இருப்பினும், “அம்ருதா டெல்லி செல்வதாக என்னிடம் சொல்லவில்லை. அவர் உச்ச நீதிமன்றம் சென்றார் என்பதையே நான் செய்திகள் மூலமே தெரிந்து கொண்டேன். அவர் ஏன் எங்களுடைய பெயர்களை மனுக்களில் தெரிவிக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

அம்ருதா உச்ச நீதிமன்றம் சென்றதற்கான உள்நோக்கம் என்ன என்பது தொடர்பாக லலிதா பேசுகையில், “எனக்கு அது தெரியாது. அதனை நீதிமன்றம்தீர்மானிக்கட்டும். கடந்த 40 வருடங்களாக நான் ஜெயலலிதாவை பார்த்ததே கிடையாது. இதில் எனக்கு என்ன கிடைக்க போகிறது? என்னுடைய கடைசி காலங்களில் நான் இருக்கின்றேன்,” என கூறிஉள்ளார்.


Add new comment

Or log in with...