அரசியல் முக்கியத்துவம் மிகுந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்! | தினகரன்

அரசியல் முக்கியத்துவம் மிகுந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்!

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை சுயாதீன தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இதற்கேற்ப புதிய தேர்தல் முறைமையின் கீழ் இத்தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது. ஆன போதிலும், இத்தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் நிலவும் சர்ச்சைகளினால் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் காரணத்தினால் நாட்டில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்ற போதிலும், அவற்றில் சட்ட ரீதியிலான எவ்வித சிக்கலும் இல்லாத 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள்தான் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் தேர்தலை நடத்து-வதற்கான வேட்புமனுவை ஏற்கும் காலத்தை அறிவித்துள்ள இவ்வாணைக்குழு, இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளினதும், சுயேச்சைக் குழுக்களினதும் கட்டுப்பணத்தை ஏற்கும் பணிகளையும் நேற்றுமுன்தினம் மாவட்ட மட்டத்தில் ஆரம்பித்தது.

இத்தேர்தல் பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது.பிரதான அரசியல் கட்சிகள் தம் பலத்தை நிரூபிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இத்தேர்தலைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றன.

அதேநேரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் முதலாவது தேர்தலாக விளங்கும் இத்தேர்தல், கலப்புத் தேர்தல் முறைப்படி, அதாவது வட்டார முறையையும் விகிதாசார முறையையும் உள்ளடக்கி நடத்தப்படும் முதலாவது தேர்தலாகவும் அமைந்திருக்கின்றது. அத்தோடு விருப்பு வாக்கின்றி நடத்தப்படும் முதல் தேர்தலும் இதுவேயாகும். இத்தேர்தலின் மூலம் கிராமத்திற்கு அல்லது தேர்தல் வட்டாரத்திற்கு பொறுப்புக் கூறும் மக்கள் பிரதிநிதியை மக்கள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

இவ்வாறு பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் பெற்று விளங்குவதால் இத்தேர்தல் எல்லா மட்டங்களதும் அதிக கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இவ்வாறான நிலையில் 'உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது. தேவை ஏற்படும் பட்சத்தில் வீதியில் இறங்கி போராடவும் தயாராக உள்ளோம்' என்று மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் அநுர குமார திஸாநாயக்கா பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்தில், 'எக்காரணம் கொண்டும் தேர்தலை தாமதப்படுத்த இடமளிக்கக் கூடாதென' ஏகமானதாகத் தீர்மானித்துள்ளனர்.

என்றாலும் இத்தேர்தலுக்கான வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பில் தமக்கு அநீதி நிகழ்ந்துள்ளதாக பல பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் வட்டார எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு 2017 பெப்ரவரி 17ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியினது எல்லை நிர்ணயத்தின் சட்டபூர்வ தன்மையைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் 6 மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்களை விசாரிப்பதற்கு எடுத்துக் கொண்டுள்ள நீதிமன்றம், இவ்வர்த்தமானிக்கு இடைக்கால தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

இதேவேளை, இம்மனுக்கள் மீதான விசாரணையை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் சார்பில் மீளாய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ரீட் மனுக்கள் மீதான விசாரணையை இம்மாதம் 30 ஆம் திகதி எடுத்துக் கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறது.

இவை இவ்வாறிருக்க, பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போது, 'நீதிமன்றத்திற்கு முன்னகர்த்தல் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நீதிமன்றத்தின் முடிவை பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாகவும், முடிந்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனுவை மீளப்பெறுவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. இம்மனுக்களை துரிதமாக விசாரித்து முடித்தல் அல்லது அவற்றை மீளப்பெற்றுக் கொள்ளுதல் என்ற இரு விடயங்களும் கைகொடுக்காது விட்டால் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடாத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரான அமைச்சர் மனோ கணேசனும் இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

'2015ஆம் ஆண்டு வர்த்தமானியும் அதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானிகள் அனைத்தும் சிறுபான்மையினருக்கு பாதிப்பானது' என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவுபடுத்துவதற்கான பொறுப்பு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரத்தில் திரிசங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் தேர்தல் தாமதப்படுத்தப்படுவதற்கு இடமளிப்பதில்லை என்பதில் எல்லாக் கட்சிகளும் உறுதியாக உள்ளன. இது நாட்டில் ஜனநாயகம் மேலோங்கி இருப்பதற்கான நல்ல எடுத்துக்காட்டாகும். புதிய தேர்தல் முறைமையின் கீழ் தமக்கு சேவை செய்யும் மக்கள் பிரதிநிதிகள் கிடைக்கப் பெறுவர் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அதனால் அவர்கள் தம் எதிர்பார்ப்பை அடைந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் எல்லை நிர்ணம் தொடர்பில் நிலவும் முரண்பாடுகளை நியாயமான முறையில் நிவர்த்தி செய்வதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது.


Add new comment

Or log in with...