நமீதா தொடர்ந்து நடிப்பதை கணவர் மறுக்கவில்லை | தினகரன்

நமீதா தொடர்ந்து நடிப்பதை கணவர் மறுக்கவில்லை

நமீதா சிறந்த நடிகை, அவர் தொடர்ந்து நடிக்க எந்த தடையும் இல்லை என திருமணம் முடிந்ததும் கணவர் வீரேந்திர செளத்ரி பேட்டி அளித்தார்.

நடிகை நமீதா தனது காதலர் வீரேந்திர செளத்ரி திருமணம் திருப்பதியில் நேற்று காலை நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு வீரேந்திர செளத்ரி இந்து முறைப்படி தனது காதலி நமீதா கழுத்தில் தாலி கட்டினார். அப்போது அங்கிருந்த உறவினர்களும், நண்பர்களும் அட்சதை, மலர்கள் தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.

மணமக்களை சரத்குமார், ராதிகா சரத்குமார், காயத்ரி ரகுராம், சக்திவேல் வாசு, அரீஷ்குமார், கணேஷ், ஆர்த்திகணேஷ் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கோவிலுக்கு வந்து வாழ்த்தினர். குடும்பத்தினரும் மண மக்களை வாழ்த்தினார்கள். மணமகள் நமீதா, மணமகன் வீரேந்திர செளத்ரி ஆகியோர் பெற்றோர், உறவினர்களின் கால்களை தொட்டு ஆசி பெற்றனர்.

திருமணம் முடிந்ததும் நமீதா, அவருடைய கணவர் வீரேந்திர செளத்ரி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நமீதா கூறியதாவது:- எனது கணவர் வீரேந்திர செளத்ரி என்னுடைய நல்ல நண்பர். என்னை நன்றாக புரிந்து கொண்டவர். நானும் அவரை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன்.

இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு மணமக்கள் ஆகி இருக்கிறோம். திருப்பதியில் எங்கள் திருமணம் இந்து முறைப்படி நடந்து இருக்கிறது. எங்கள் வாழ்க்கை நல்லபடி அமையும் என்று நம்புகிறேன்.இவ்வாறு நமீதா கூறினார்.

நமீதாவின் கணவர் வீரேந்திர செளத்ரி கூறியதாவது:- நமீதா என்னிடம் நீண்ட நாட்களாக நட்புடன் பழகினார். நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தோம். நமீதா சிறந்த நடிகை. அவர் தொடர்ந்து நடிக்க எந்த தடையும் இல்லை. அவருக்கு பிடித்தமான நல்ல வேடங்கள் அமைந்தால் எந்த மொழி படங்களிலும் நடிப்பார். எப்போதும் அவர் சுதந்திரமாக இருப்பார். இவ்வாறு வீரேந்திர செளத்ரி கூறினார்.


Add new comment

Or log in with...