அறுபது சதவீதத்துக்கு அதிகமான வியாதிகளுக்கு காரணம் Fast food | தினகரன்

அறுபது சதவீதத்துக்கு அதிகமான வியாதிகளுக்கு காரணம் Fast food

மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகளில் ஒன்றே உணவாகும். ஏனென்றால் ஆரோக்கியத்தைப் பேண முக்கிய பங்களிப்பு வழங்குவது உணவாகும். மிகவும் பரபரப்பான வாழ்க்கையை வாழும் தற்போதைய மனிதன் உணவு குறித்த அவதானத்தை மேற்கொள்வதில்லை.

அதன் காரணமாக தனது பசியைத் தீர்க்க துரித உணவு எனப்படும் Fast Food வகைகளை உணவாக உட்கொள்கின்றான். அதில் முக்கியமான விடயம் என்னவென்றால் உடம்புக்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிந்தும் அதனை அதிகமாக உண்ணுகின்றார்கள். அநேகமான துரித உணவுகளில் காணப்படும் மாப்பொருள், கொழுப்பு மற்றும் அதிகளவு கலோரிகள் காரணமாக உடம்புக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

'துரித உணவு' என்னும் பெயரில் மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கப்படும் உணவையே குறிப்பிடுகின்றோம். ஆனால் இவ்வுணவுகள் ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவுகளாகும். மேற்குலக நாடுகளின் சனத்தொகையில் நூற்றுக்கு 60 வீதத்துக்கும் அதிகமானோர் நோயாளிகளாவதற்கும் உடல் பருமனாவதற்கும் துரித உணவுகள் காரணமாக அமைகின்றன. அமெரிக்காவிலும் உடற்பருமன் காரணமாக மக்கள் சிரமப்படுவதுடன், அந்நாட்டில் சுகாதார சேவைகளுக்கான செலவில் 21% பருமனைக் குறைக்கும் சிகிச்சைக்கும் மற்றும் பிரசாரத்துக்குமே பயன்படுத்தப்படுகின்றது.

தற்போது துரித உணவுகள் சிறுவர்களிடையே பெரும் பிரபல்யம் பெற்று வருகின்றன. அவர்கள் பலவிதமான துரித உணவுகளை வெகுவிருப்பத்துடன் உண்ணுகின்றார்கள்.

அவற்றில் நூடில்ஸ் வகைகள், குளிர்பானங்கள் போன்றவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. சிறு வயதிலேயே துரித உணவுகளுக்கு அடிமையாவதன் மூலம் அவர்கள் உடல் பலத்தை இழப்பதோடு அவர்களின் மன ஒருமைப்பாடு குறையும் தன்மையும் காணப்படுகின்றது. அதனால் அவர்களின் கல்விக்கான நாட்டமும் குறைகின்றது. உடம்புக்குத் தேவையான போசணையை அவ்வுணவுகளால் பெற்றுக் கொள்ள முடியாது. அதனால் சமூகத்தில் ஒரு ஒட்டுண்ணியாக துரித உணவு மாறிவருகின்றது.

துரித உணவுகளால் உடம்புக்குத் தேவையான போசணை கிடைக்காமையால் வருங்கால சிறுவர் சமுதாயம் மந்த போசணையால் அவதியுறுகின்றது.

எதிர்காலத்தில் நாட்டை ஆளப் போகும் இவர்களின் இந்நிலைமை மிகவும் கவலைக்குரியது.

இலங்கையர்களும் தேசிய உணவு முறையிலிருந்து மேற்குலக கலாசாரத்துக்கு ஆட்பட்டு வருவதால் அவர்களும் தங்களது போசணையைக் கருத்திற் கொள்ளாது துரித உணவுகளுக்கு அடிமையாகி பலப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

உடம்புக்கு மாத்திரமல்ல வருமானத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் துரித உணவுகளை தவிர்த்து நச்சுகளற்ற தேசிய உணவை உண்பதன் மூலம் நிகழ்காலத்தில் மாத்திரமல்ல எதிர்காலத்திலும் வளம் பெறலாம்.

துரித உணவுகளால் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்தால் வெளித்தோற்றம் விகாரமடைதல், குணப்படுத்த முடியாத நோய்கள் உண்டாதல் மூளையின் இரசாயன கலவையில் பாதிப்பு ஏற்படல், இரத்த நாளங்கள் சுருங்குதல் போன்றவை ஏற்படலாம். சிறிது நேரத்துக்கு கண்ணையும் நாவையும் மகிழ்ச்சிப்படுத்தும் துரித உணவுகளிலிருந்து விடுபட்டு போசணைமிக்க உணவுகளை நாம் உண்ணுவதன் மூலம் சுகமான வாழ்வை வாழலாம்.

வீ.ஆர். வயலட்


Add new comment

Or log in with...