இயற்கை அனர்த்த விடயத்தில் முன்னெச்சரிக்ைக அவசியம் | தினகரன்

இயற்கை அனர்த்த விடயத்தில் முன்னெச்சரிக்ைக அவசியம்

 

நாட்டின் வானிலை கடந்த சில தினங்களாக சீரானதாக இல்லை. பல பிரதேசங்களில் இரண்டொரு நாட்களாக கடுமையான மழை பெய்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில் வானம் இருண்டபடியே காணப்படுவதால், கடுமையான மழை பெய்வதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியான மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக இலங்கை வானிலை அவதான நிலையமும் தெரிவித்துள்ளது.

அதேசமயம், இந்தியாவின் தமிழ்நாட்டில் நேற்று வெளியிடப்பட்ட காலநிலை எதிர்வுகூறல் அறிக்கையிலும், இலங்கையில் கடும் மழை பெய்வதற்கான அறிகுறி தென்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் மோசமான காலநிலைக்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

இலங்கையில் வருடம் தோறும் டிசம்பர் மாதம் என்பது இயற்கை அனர்த்த மாதமாகும். கூடுதலான மழைவீழ்ச்சி கிடைப்பதும் வெள்ளம் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படுவதும் பெரும்பாலும் டிசம்பர் மாதத்திலேயே ஆகும். எனவே வருடத்தின் இறுதிக் காலப் பகுதியில் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

எமது நாட்டில் அதிகரித்த மழைவீழ்ச்சியே கூடுதலான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அதிகரித்த மழைவீழ்ச்சியினால் ஏற்படுகின்ற வெள்ளமும் மண்சரிவுகளும் பலரின் உயிரைப் பலியெடுத்துள்ளன. இவ்வருடத்தின் முன்னரைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இரண்டொரு தினங்களுக்குள்ளேயே நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தமை நினைவிருக்கலாம். அதேசமயம் மீரியபெத்த, அரநாயக்க போன்ற இடங்களில் ஏற்பட்ட மண்சரிவினால் பலர் மண்ணுக்குள் புதையுண்டு மரணமான பரிதாபமும் மறக்க முடியாத இயற்கை அனர்த்தமாகும்.

வெள்ளமும் மண்சரிவும் தடுத்து நிறுத்தக் கூடிய இயற்கை அனர்த்தங்கள் அல்ல. ஆனாலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் போது உயிராபத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியும். வானிலை அவதான நிலையத்தின் எதிர்வுகூறல்களையும் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கைகளையும் மக்கள் அலட்சியம் செய்கின்ற போதே உயிரிழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது.

அனர்த்த முன்னெச்சரிக்கை விடயத்தில் எமது நாடு இப்போது பெரிதும் முன்னேற்றமடைந்துள்ளது. பல்லாயிரம் பேரைப் பலிகொண்ட கடல் பூகம்பப் பேரலையின் பின்னர் எமது நாடு பெற்றுக் கொண்ட விழிப்புணர்வு இது. ஆனாலும் எமது மக்கள் மத்தியில் அனர்த்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முழுமையாக இன்னும் ஏற்படவில்லையென்பதே பொதுவான கருத்தாகும்.

நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் சுனாமி அனர்த்தம் தொடர்பில் போதிய விழிப்புணர்வைக் கொண்டுள்ள போதிலும், ஏனைய பிரதேசங்களிலுள்ள மக்கள் மத்தியில் வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் விடயத்தில் இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை. இதன் காரணமாகவே வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்களால் சம்பவிக்கின்ற மரணங்கள் இன்னுமே குறைவடையாமல் உள்ளன.

இவ்வருடத்தின் முற்பகுதியில் வெள்ளம் ஏற்படவிருந்ததை வானிலை அவதான நிலையம் முன்கூட்டியே அறிவித்திருந்த போதிலும், அனர்த்த உயிரிழப்புகள் அதிகமாகவே இருந்தன. ஆனாலும் அனர்த்தம் ஏற்பட்டதும், அரசாங்கம் மீதே மக்கள் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர்.

‘பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவிப்பதனால் மாத்திரம் பயனில்லை. பாதுகாப்பான இடங்களில் தங்குமிடங்களை அமைத்து மக்களை அழைத்துச் செல்ல வேண்டியது அரசின் கடமை’ என்பதே மக்களின் நிலைப்பாடாகும்.

ஆனாலும் அரசாங்கத்தைப் பொறுத்தவரை இது சாத்தியமான காரியமல்ல. அத்தனை மக்களையும் குறுகிய காலப் பகுதிக்குள் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான கால அவகாசம் இருப்பதில்லை. இதனாலேயே அநியாய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

மண்சரிவு அனர்த்தத்தின் போது உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கும் இவ்வாறான அலட்சியமே காரணமாகின்றது. மண்சரிவு ஆபத்து இடங்களென அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கின்ற போதிலும், அம்மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறத் தயங்குகின்றனர். சொந்த இருப்பிடங்களையும் உடைமைகளையும் கைவிட்டு எங்குதான் சென்று தங்கியிருப்பது என்று அம்மக்கள் கேட்கின்ற கேள்வியில் நியாயம் இல்லாமலில்லை. எனவே மண்சரிவு அனர்த்தத்தின் போது உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.

இயற்கை அனர்த்தங்களின் போது இடம்பெறுகின்ற உயிரிழப்புகளுக்காக மக்களை மாத்திரம் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது நியாயமல்ல. பொருத்தமான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அரசாங்க திணைக்களங்களுக்கு உள்ளது. இயற்கை அனர்த்தங்கள் எதிர்பாராமல் ஏற்படுவதாகும். எனவே மக்களுக்குப் பாதுகாப்பளிக்கும் விடயத்தில் எந்நேரமும் முன்னாயத்தத்துடன் இருக்க வேண்டியது அரச திணைக்களங்களின் பொறுப்பாகும்.


Add new comment

Or log in with...