அமைச்சர் பைசருக்கு எதிராக மற்றொரு பிரேரணை | தினகரன்

அமைச்சர் பைசருக்கு எதிராக மற்றொரு பிரேரணை

ஜே.வி.பி நேற்று சமர்ப்பிப்பு

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக ஜே.வி.பி நேற்றையதினம் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில் அமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருப்பதாகவும், அமைச்சர் என்ற கடமையை சரியாக நிறைவேற்றத் தவறியிருப்பதாகவும் கூறி ஜே.வி.பி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை

சமர்ப்பித்துள்ளது.

ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் கைச்சாத்திட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர், நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்திருந்தனர். இதில் ஜே.வி.பியின் உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, விஜித ஹேரத், நளிந்த ஜயதிஸ்ஸ, நிஹால் கலப்பதி ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 13 பேருடைய கையொப்பத்துடன் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கையளிக்கப்பட்டிருந்த நிலையில் ஜே.வி.பியும் மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணையை நேற்று கையளித்தது.

2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைச்சர் பைசர் முஸ்தபா வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உரிய முறையில் குறைகள் இல்லமால் முன்வைக்க தவறியமையினாலேயே இந்த தேர்தலை முறையாக நடத்திச் செல்வதில் தடங்கலாக அமைந்துள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வர்த்தமானியிலும் பெரும் எண்ணிக்கையிலான குறைகள் காணப்பட்ட நிலையில், இரண்டரை வருடங்களுக்கும் மேலான காலம் கடந்தும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பைசர் முஸ்தபா அந்த குறைகளை சரிசெய்ய தவறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கோ அல்லது பாராளுமன்றத்துக்கோ பதிலளிக்கும் நிமித்தம் அமைச்சர் இன்று நாட்டிலும் இல்லை. ஆகவே, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பைசர் முஸ்தபா அவருக்குரிய கடமை பொறுப்புக்களை நிறைவேற்ற தவறியுள்ளார் என்பதே இதன்மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றம் ஊடான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை தீர்மானிப்பதும் சிக்கலுக்குரிய நிலைமையாக இருக்கும்.

இந்த விடயத்தை நேரடியாக நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டமையானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசிர்வாதம் மற்றும் தலையீட்டின் பேரில் அவரது அணியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை வாபஸ் பெற்று மக்களின் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்திருக்கும் நிலையில் பிறிதொரு நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்துள்ளமை குறித்துக் கேட்டபோது, இந்த குழுவினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டு வந்திருக்கின்றனர். சில நம்பிக்கையில்லா பிரேரணைகள் ஒழுங்குப் பத்திரத்தில் சிக்குண்டிருக்கின்றன.

நம்பிக்கையில்லா பிரேரணைகளை சரியாக சமர்ப்பித்துக் கொள்ள முடியாத நம்பிக்கையின்மை அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே, சரியான வகையில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைப்பதே எமது அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது என்றார்.

எதிர்வரும் காலத்தில் அமைச்சரின் நடவடிக்கையைப் பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுவது பற்றிய தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜே.வி.பியின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். 

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...