பிரதமர் நாடு திரும்பியதும் தேர்தல் பற்றி தீர்மானம் | தினகரன்

பிரதமர் நாடு திரும்பியதும் தேர்தல் பற்றி தீர்மானம்

தேர்தல்களை நடத்துவது சபாநாயகரின் கடமையல்ல

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவது சபாநாயகரின் கடமை அல்ல. பிரதமர் நாடு திரும்பியதும் கட்சித் தலைவர்களுடன் இன்று (24ம் திகதி) கலந்துரையாடி தேர்தல் பற்றி தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நேற்று சபையில் ஏற்பட்ட சர்ச்சையின் போதே சபாநாயகர் இதனைக் கூறினார்.

நேற்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடியதுடன், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்.

தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறும் அவர் சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

"வாக்காளர்களின் வாக்கு உரிமையை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுகின்றோம். நாளுக்கு நாள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் என்ற ரீதியில் தேர்தலை பிற்போடும் முயற்சிகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு பாராளுமன்றத்துக்கு உள்ளது" என கவிந்த ஜயவர்தன குறிப்பிட்டார்.

அரசியலமைப்பிற்கு அமைய மக்களின் இறைமையை உறுதிப்படுத்த தேர்தல்களை நடத்தவைப்பது சட்டவாக்கத்தின் கடமையாகும். சட்டவாக்கத்தின் தலைவர் என்ற ரீதியில் மக்களின் இந்த உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய கடமை சபாநாயகரான உங்களுக்கு உள்ளது. பழைய முறையிலாவது தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இது தொடர்பில் நாளை (இன்று) கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் தேர்தல்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படும். பிரதமர் நாடு திரும்பியதும் நாளை இது பற்றிக் கலந்துரையாடுவோம் என்றார்.

இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. தனது ஆசனத்திலிருந்து எழுந்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, இது நீதிமன்றத்தின் தீர்ப்பு. இதனை நம்மால் முடிவுசெய்ய முடியாது எனக்கூறி அமர்ந்தார்.

மற்றுமொரு ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஐ.தே.க எம்பி எஸ்.எம்.மரிக்கார், தேர்தல் பிற்போடப்படுவதானது நாம் பிற்போடப்படுகின்றோம் என்றே அர்த்தப்படும். உண்மையில் தேர்தலை நடத்தவேண்டிய தேவை இருக்குமாயின் பழைய முறையிலாவது தேர்தலை நடத்துவதற்கான பிரேரணையை நிறைவேற்றி தேர்தலுக்குச் செல்வோம் என்றார்.

இதற்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, பிரதமரும் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களும் பல தடவைகள் உள்ளூராட்சி மன்றத் நடத்தப்படும் என பகிரங்கமாகக் கூறியுள்ளனர். நீதிமன்றத்துக்கு சென்றுள்ள சிலர், சிறிய பிரதேசங்களுக்கு மாத்திரமே தேர்தலை நடத்துமாறு கோரியுள்ளார்கள். அது மாத்திரமன்றி திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலையே இரத்துச் செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஜனாதிபதியால் முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியானதாகும். எனவே அதன் அடிப்படையில் தேர்தலை நடத்தவேண்டும். அந்த வர்த்தமானியை மாற்றச் சென்றதாலேயே இந்தக் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

பழைய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அரசாங்கத்தினால் தேர்தலை நடத்த முடியும் என்றார்.

தினேஷ் குணவர்தன எம்பி இதனைக் கூறியதும் சபையில் நிலவிவந்த சலசலப்பு அதிகரித்தது. இரு தரப்பிலும் இருந்த உறுப்பினர்கள் மாறி மாறி கூக்குரல் எழுப்பினர்.

கூச்சலுக்கு மத்தியில் பந்துல குணவர்தன எம்பி கூறுகையில், ஒரு வர்த்தமானி அறிவித்தலுக்கு மாத்திரமே தடைவிதிக்கப்பட்டுள்ளது. பழைய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய தேர்தலை நடத்துங்கள். தேர்தலை ஒத்திவைப்பதில் இரு தரப்பினரும் இணைந்து செயற்படுகின்றனர் என்றார்.

சபையில் நிலவிய குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர கடும் முயற்சியெடுத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, தேர்தலை நடத்துவது சபாநாயகரின் பொறுப்பு இல்லை. பிரதமர் நாடு திரும்பிய பின்னர் இது பற்றிக் கலந்துரையாடித் தீர்மானிக்க முடியும் எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...