1970 களில் ஆரம்பித்து இன்றும் தொடரும் இலக்கியப் பணி | தினகரன்

1970 களில் ஆரம்பித்து இன்றும் தொடரும் இலக்கியப் பணி

பவளவிழா காணும் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

சித்திலெப்பை ஆய்வுமன்றம் 'காப்பியக்கோ 75' எனும் பவளவிழா ஆய்வுத் தொகுப்பை வெளியிடுவதில் கௌரவம் பெறுகின்றது. அனைத்து ஆளுமைகளையும் கொண்ட காப்பியக்கோவை ஆவணப்படுத்துவது என்பது மன்றத்தின் இளைய தலைமுறைக்குக் கிடைத்த விருதாகும். ஜின்னாஹ்வை இழக்கமறுக்கும் ஒரு தலைமுறையின் கூட்டுக்குரல்தான் சித்திலெப்பை ஆய்வுமன்றம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத மரபுக் கவிஞராய் இலக்கியவாதிகளை அண்ணாந்து பார்க்க வைத்தவர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன். அகவை எழுபத்தைந்தில் பவளவிழாக் காணும் காவியப் புலவர் இவர்.

கிழக்கு மண்ணின் ஈடிணையற்ற தமிழ் ஆளுமையான புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களின் இலக்கிய வாரிசு இவர். 1970களில் ஆரம்பித்த இலக்கியப் பணி இன்றுவரை தொடர்கின்றது.

தமிழ் இலக்கியத்தின் பல்பரிமாண ஆளுமை கொண்ட இவர், பல காவியங்கள் படைத்ததோடு சிறுகதை, புதினம், சிறுவர் இலக்கியம், மொழிமாற்றம் போன்ற இதர துறைகளிலும் தடம் பதித்தவர். பத்தாயிரத்துக்கும் அதிகமான செய்யுள்களைக் கொண்டு பதினொரு காவியங்கள் படைத்து இந்த நவீன இலக்கிய மரபின் ஆளுகைக்குள்ளும் படைத்துக் காட்டியவர். சுமார் ஐந்து தசாப்தங்களாக இலக்கியப் பணி புரியும் இலக்கிய உழைப்பாளி.

தந்தையிடம் தமிழ் கற்றார், பத்திரிகைத்துறை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் அவர்களின் கூர்மையான பார்வையினால் அடையாளப்படுத்தப்பட்டார், அவராலேயே இலக்கியவாதியாக வளர்க்கப்பட்டார். இலங்கை அரசும், வேறு இலக்கிய ஸ்தாபனங்களும் பல விருதுகளை வழங்கி கௌரவித்தது மட்டுமன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்த பல ஆய்வாளர்கள் இவரது படைப்பிலக்கியங்களை ஆய்வு செய்து பல சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளாகச் சமர்பித்துள்ளன.

தமிழ்பேசும் சமூகங்களின் இலக்கியப் பாலம் காப்பியக்கோ. சுவாமி விபுலானந்தரின் மாணவரான புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்கள் எந்தளவு கிழக்கிலங்கையில் தமிழ்_ முஸ்லிம் இலக்கிய அறிவுசார் ஐக்கியத்திற்கு இணைப்புப் பாலமாக இருந்தாரோ அது போன்று அவரது தனயன் காப்பியக்கோ கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நீண்ட கால ஆட்சிக்குழு உறுப்பினராகச் செயற்பட்டு தந்தையின் பணியினை இன்றுவரை தொடர்கின்றார்.

தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக, பொதுச்செயலாளராக பணியாற்றிய இவர் தமிழ்_ முஸ்லிம் உறவுகளின் ஐக்கியச் சின்னமாக இருந்து வருகிறார்.

இவர் எழுதிய பண்டார வன்னியன் காவியம், எல்லாள காவியம் போன்ற படைப்புக்கள் ஈழத்து சமூகவியல், அரசியல் வரலாற்றுத் துறைகளின் இலக்கிய ஆவணமாக மாறியுள்ளமை தமிழர்களின் இருப்பையும், தமிழின் இருப்பையும் இலங்கையில் உறுதி செய்துள்ளது. அது ஜின்னாஹ்வின் தமிழ் சார்ந்த மாபெரும் இலக்கிய அரசியலில் ஆவணப்படுத்தலாகும்.

காப்பியக்கோவின் திருநபி காவியம் கண்மணி நாயகம் முஹம்மத் நபி(ஸல்) அவர்களது வரலாற்றினை முழுமையாக ஆவணப்படுத்திய உன்னதமான இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் படைப்பாகும். ஆன்மிகத்திலும் பெருமானார் மீதிலும் இவருக்கிருந்த ஈடுபாடு பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இவரை எழுதத் துண்டியது.

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் மற்றுமொரு பிரமாண்டமான இலக்கியப் படைப்புத்தான் 'தீரன் திப்பு சுல்தான் காவியம்'. இந்தியத் துணைக் கண்டத்திலேயே யாரும் படைக்க முயலாத அற்புதக் காவியம். கவிஞர் வாலி அவர்களால் 'கவிஞர் பெருமான்' என்று காப்பியக்கோவைப் புகழத் தூண்டிய படைப்பு அது.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஸ்தாபகத் தலைவரான காப்பியக்கோ,இலங்கையில் இரண்டு உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளைத் தலைமை ஏற்றுச் சிறப்புற நடாத்தியிருந்தார். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அவருக்கிருந்த அங்கீகாரங்களின் மூலம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் இலங்கையில் வெற்றிகரமாக நடந்தேறின.

தமிழ்நாட்டில் இடம்பெற்ற அனைத்து மாநாடுகளிலும் பங்குபற்றியவர், பேராசிரியர் அல்லாமா எம்.எம்.உவைஸ் அவர்களின் பின்னர் அனைத்து உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளுக்குமான இலங்கை ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றியவர். இப்பணி இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மரபினை இலங்கையிலும், கடல்கடந்த நாடுகளிலும் பேணிப் பாதுகாப்பதற்கு ஆற்றிய மாபெரும் சாதனையாகும். இஸ்லாமிய தமிழ் இலக்கியம் எனும் எண்ணக்கரு வளம்பெற இவரது பங்களிப்பு அளப்பரியது என்றால் அது மிகையாகாது. அதனை மேலும் வளம்பெறச் செய்ய அமீரகத்தில் பன்னாட்டு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தை நிறுவி அரபு மண்ணில் இஸ்லாமிய தமிழ்மணங் கமழச் செய்தார்.


Add new comment

Or log in with...