ஆஸி. தடுப்பு மையத்திற்குள் பபுவா பொலிஸார் நுழைந்தனர் | தினகரன்

ஆஸி. தடுப்பு மையத்திற்குள் பபுவா பொலிஸார் நுழைந்தனர்

முன்னாள் அவுஸ்திரேலிய தடுப்பு மையத்தில் இருந்து வெளியேற மறுத்து தஞ்சம்கோரிகள் தொடர்ந்து தங்கி இருக்கும் நிலையில் அந்த மையத்திற்குள் நேற்று பபுவா நியூகினி பொலிஸார் நுழைந்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி மனுஸ் தீவில் உள்ள தடுப்பு மையம் மூடப்பட்டபோதும் அங்கு தங்கியிருந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் பாதுகாப்பை காரணமாக கூறி வெளியேற மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மையத்திற்குள் புகுந்த பொலிஸார் அங்கு தங்கியிருக்கும் தஞ்சம்கோரிகள் வெளியேறுவதற்கு ஒரு மணி நேர கெடு விதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் பபுவா அரசே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது. படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி வருபவர்களே கடல் கடந்த மனுஸ் தீவு மற்றும் சிறு பசிபிக் நாடான நாவுருவில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

பபுவா நியூகினி நீதிமன்றம் இந்த தடுப்பு முகாம் சட்டவிரோதம் என தீர்ப்பு அளித்ததை அடுத்தே அவுஸ்திரேலியா அதனை மூடியது. இங்கிருந்து தஞ்சம்கோரிகள் அந்த தீவில் இருக்கும் இடைமாற்று மையம் ஒன்றுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. 


Add new comment

Or log in with...