இந்தியா -− இலங்கை 2-வது டெஸ்ட் போட்டி | தினகரன்

இந்தியா -− இலங்கை 2-வது டெஸ்ட் போட்டி

இந்தியா − இலங்கை ஆகிய இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்குகிறது.

இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது.

கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் முதல் 2 நாட்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங், பந்து வீச்சில் அசத்தியது.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் புவனேஸ்வர் குமார், முகமது மி, உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். முதல் டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமார் திருமணம் காரணமாக எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இடம் பெறுவார்.

இதேபோல் சொந்த காரணத்துக்காக நாக்பூர் டெஸ்டில் இருந்து மட்டும் தொடக்க வீரர் ஷிகார் தவான் விளையாடவில்லை. இதனால் முரளி விஜய் தொடக்க வீரராக களம் இறங்குகிறார்.

துடுப்பாட்டத்தில் விராட் கோலி, லோகேஷ், ராகுல், புஜாரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மத்திய வரிசையில் ரகானே சோப்பிக்கவில்லை. இதனால் அவர் திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

விக்கெட் காப்பாளர் சகாவும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் இடம் பெறாதது பாதிப்பு என்றாலும் முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளதால் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துக்கு சாதகமாக அமைக்கப்பட்ட ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. மேலும் அவர்களுக்கு குறைந்த அளவிலேயே பந்துவீச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

முதல் டெஸ்டை போலவே இன்று தொடங்கும் 2-வது டெஸ்டிலும் வேகப்பந்து ஆடுகளத்தை அமைக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் அஸ்வின், ஜடேஜா ஆகியோரில் ஒருவர் கழற்றி விடப்பட்டால் தமிழகத்தை சேர்ந்த சகலதுறை வீர் விஜய் சங்கர் இடம் பெறலாம்.

நாக்பூர் டெஸ்டில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது.

சந்திமால் தலைமையிலான இலங்கை அணியில் சமர விக்ரமா, கருணரத்ன, திரிமான்ன, மெத்யூஸ், திக்வெல்ல போன்ற துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் லக்மல், ‌ஷானக, கெம்மேஜ், ஹேரத், பெரேரா ஆகியோர் இருக்கிறார்கள். இந்த அணியும் இந்தியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் இருப்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

இந்தியா- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் நாக்பூர் விதர்பா மைதானம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

2-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் நாக்பூர் விதர்பா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 45 ஆயிரம் பேர் அமரலாம். இங்கு 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெஸ்ட் போட்டி நடந்தது.

இதுவரை 5 டெஸ்ட் போட்டி நடந்து இருக்கிறது. இதில் 3 ஆட்டத்தில் (அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆபிரிக்கா) இந்தியா வென்றது. ஒரு ஆட்டம் (இங்கிலாந்து) டிரா ஆனது. 2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தென்ஆபிரிக்கா வெற்றி பெற்று இருந்தது.

இந்தியா 8 விக்கெட்டுக்கு 566 ஓட்டங்கள் குவித்ததே (நியூசிலாந்துக்கு எதிராக 2010) அதிகபட்ச ஸ்கோர் ஆகும். தென்ஆபிரிக்காவின் ஹசிம் அம்லா 253 ஓட்டங்கள் எடுத்ததே தனிப்பட்ட வீரரின் அதிகபட்சமாகும்.

இந்திய வீரர் ஷேவாக் 4 டெஸ்டில் 357ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 15 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

நாக்பூர் மைதானத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு தென்ஆபிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் இந்தியா 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது.

இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: விராட் கோலி (தலைவர்), முரளி விஜய், லோகேஷ், ராகுல், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, விருத்திமான் சகா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, விஜய் சங்கர்.

இலங்கை: சந்திமால் (தலைவர்), சமரவிக்ரம, திரிமான்ன, கருணரத்ன, மெத்யூஸ், திக்வெல்ல, ‌ஷானக, தில்ருவான் பெரேரா, ஹேரத், லக்மல், கமகே, தனஞ்சய டி சில்வா, விஸ்வா பெர்ணாடோ, சாந்தகன், ரோ‌ஷன் சில்வா. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...