பகிரங்க விவாதம் சுமந்திரனுக்கு அனுகூலமா? | தினகரன்

பகிரங்க விவாதம் சுமந்திரனுக்கு அனுகூலமா?

 

'புதிய அரசியலமைப்புத் தொடர்பாகவோ இடைக்கால அறிக்கை பற்றியோ யாராவது விவாதிக்க முன்வரலாம். முதலமைச்சரோ (விக்கினேஸ்வரன்) அல்லது வேறு யாராவது கூட வரலாம். யாரோடும் பகிரங்கமாக விவாதிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்'.

'தமிழ் மக்களுடைய அபிலா​ைஷகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் விட்டுக் கொடுக்கவில்லை. சமஷ்டியை முன்மொழிந்தவர்கள் சிங்களவர்களே. கண்டிச் சிங்களவர்களே சமஷ்டிக் கோரிக்கையை முதலில் முன்வைத்தவர்கள். இப்பொழுது சமஷ்டி என்ற சொல் சிங்கள மக்களிடையே வேறு விதமாக உணர வைக்கப்பட்டுள்ளது'.

'ஆகவே நாம் சொற்களில் மட்டும் நின்று விவாதங்களை நடத்திக் கொண்டிருக்காமல், அதிகாரத்தை எப்படிப் பெறுவது? எப்படி அதைப் பயன்படுத்துவது? என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் நாம் எமது தனித்துவத்தோடு அதிகாரத்தைப் பிரயோகித்து நிர்வாகத்தைச் செழுமைப்படுத்துவதைப் பற்றியே சிந்திக்க வேண்டும். புதிய உலகப் போக்கினை விளங்கிக் கொள்ள வேண்டும்.'

இவ்வாறான விளக்கத்தை அளித்து, இடைக்கால அறிக்கை தொடர்பான பகிரங்க விவாதத்துக்கான அழைப்பை விடுத்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளரும் வழிநடத்தற் குழு உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.

சுமந்திரனின் இந்த அழைப்பும் அறிவிப்பும் நேரடியாகவே மூன்று முக்கிய தமிழ்த் தலைவர்களைக் குறி வைத்துள்ளன.

ஒருவர், வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

இரண்டாமவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்.

மூன்றாமவர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிச் செல்லும் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

கூடவே இடைக்கால அறிக்கையை விமர்சிக்கும் அரசியல் விமர்சகர்கள், ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், பிற கட்சியினர் போன்றோரையும் சுமந்திரன் இந்த அழைப்பிற்குள்ளும் அறிவிப்பிற்குள்ளும் அடக்குகிறார்.

தனியே இருந்து முணுமுணுத்துக் கொண்டிருக்காமல், சுயகண்டனங்களையும் குற்றப்படுத்தல்களையும் செய்து கொண்டிருக்காமல், பகிரங்க வெளியில் வந்து விவாதியுங்கள். மக்களுக்கு உண்மை விளங்கட்டும் என்பது சுமந்திரனின் நிலைப்பாடாகும்.

இதை அவர் எந்த நோக்கில் செய்கிறார் என்ற வியாக்கியானங்களுக்கும் இடமுண்டு. அது குறித்துப் பின்னர் பார்க்கலாம்.

ஆனால், சுமந்திரன் இலக்கு வைத்து அழைக்கும் இந்த மூன்று பேரும் இடைக்கால அறிக்கையின் குறைபாடுகள் தொடர்பாக நேரடியாகவே சுமந்திரனைக் குற்றம் சாட்டியிருந்தவர்கள். இவர்களுடன் இடைக்கால அறிக்கை குறித்து தமிழ்ப் பரப்பில் முகம் சுழிப்போரும் சுமந்திரனின் எதிராளிகளே. அப்படித்தான் சுமந்திரன் இவர்களை நோக்குகிறார். அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள நம்பிக்கைக்கும் அதன் செயற்பாடுகளுக்கும் எதிராகச் செயற்படுகின்றவர்கள், ஒத்துழைக்காதவர்கள் என்று.

எனவேதான், அவர் ஒரு பகிரங்க விவாதக் களத்தைத் திறப்பதற்காகச் சவால் விடுகிறார். இதன் மூலமாகத் தன்னை நோக்கிய கண்டனங்களையும் குற்றச்சாட்டுகளையும் இல்லாமற் செய்வது அல்லது தணிப்பது.

இரண்டாவது, தற்போதைய அரசாங்கத்தோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் அரசியலமைப்பு உருவாக்கம், அதற்கான இடைக்கால அறிக்கை போன்றவற்றின் உண்மை நிலைமையை வெளிப்படுத்துவது, பகிரங்கப்படுத்துவது.

மூன்றாவது, தன்னை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ள கண்டனங்களை விலக்கித் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வது.

நான்காவது, தன்னை நோக்கிய விமர்னங்களைப் பகிரங்கமாகப் பொதுவெளியில் எதிர்கொள்ள முற்படும் துணிச்சலின் மூலமாகத் தன்னை மேலும் வளர்த்துக் கொள்வது.

ஐந்தாவது, வரவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பு எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடி, இடைக்கால அறிக்கையில் கூறப்படும் விடயங்களை வைத்து எதிர்த்தரப்புகள் செய்யக் கூடிய எதிர்மறையான விடயங்களை முறியடிப்பது.

ஆகவே, இந்த வகையில் தான்சார்ந்த கட்சிக்கான போர்வீரனாக, களமாடியாக, தளபதியாக தன்னை முன்னிறுத்தியுள்ளார் சுமந்திரன். இது நிச்சயமாகச் சுமந்திரனை மேலும் முன்னகர்த்தும் ஒரு நடவடிக்கையே. கூடவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பாதுகாக்கும் ஒரு ஏற்பாடுமாகும்.

தேசியப் பட்டியல் வழங்கிய வாய்ப்பின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகிய சுமந்திரன், சடுதியாகவே கூட்டமைப்பின் அதிகாரமிக்க சக்தியானார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் கடந்து அவர் உயரத்துக்குச் சென்றார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலான விடுதலைப் போராட்ட அரசியற் பங்களிப்பையும் அனுபவத்தையும் கொண்ட கட்சிகளின் தலைவர்களையும் விடத் தீர்மானமெடுக்கும் அதிகாரத்துக்கு உயர்ந்த சுமந்திரனின் வளர்ச்சியை பங்காளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு திடீரென உயரத்துக்குச் சென்ற சுமந்திரன், ஏனையவர்களுடன் இணங்கியும் இணைந்தும் செல்வதற்குப் பதிலாக, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு முனைகிறார் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. சுமந்திரனுக்கும் ஏனையவர்களுக்குமிடையிலான மோதல்களின் அடிப்படை இதுவே. இதைச் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள்.

இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானமெடுக்கும் சக்தியாக அவர் மாறியுள்ளார். பல விடயங்களையும் அவரே கையாள்கிறார். ஆகவே, அதற்கான பொறுப்பை ஏற்று இடைக்கால அறிக்கை குறித்த பகிரங்க விவாதத்துக்கு அவர் எல்லோரையும் அழைக்கிறார்.

'இடைக்கால அறிக்கை தமிழ் மக்களுடைய அபிலா​ைஷகளைப் பிரதிபலிக்கவில்லை. அது தமிழ் மக்களுடைய உரிமைக் கோரிக்கையையும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தையும் பலவீனப்படுத்தியுள்ளது.

சிங்கள மேலாதிக்க மனோநிலைக்குக் கட்டுப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த நலனையே முதன்மைப்படுத்தியுள்ளது. இலங்கையின் யதார்த்தத்துக்கும் பல்லின நாடு என்ற அடிப்படைக்கும் எதிராக உள்ளது. இப்படியானதொரு அரசியலமைப்புத் தேவையில்லை. இதை நியாயப்படுத்தக் கூடாது. அரசாங்கத்திடம் சரணடைய வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அது தேவையில்லை. அரசாங்கத்திடம் எதற்கும் கெஞ்சிக் கொண்டிருக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் புறக்கணித்து விட்டு கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எதற்காக அரசாங்கத்திடம் சரணடைந்திருக்க வேண்டும்?' என்று எதிர்த்தரப்பினர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தன்னிடம் பதில் உண்டு என்பது சுமந்திரனின் நம்பிக்கை.

இதை அவர் சில ஊடகவியலாளர் சந்திப்புகளிலும் வெளிப்படுத்தியுள்ளார். தமிழரசுக் கட்சியின் கூட்டங்களிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒன்று கூடலின் போதும் இடைக்கால அறிக்கை, தாம் மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைகள் போன்றவற்றைப் பற்றி விளக்கி வருகிறார். 'இந்த அறிக்கையைச் சரியாக வாசிக்காமலே பலரும் கருத்துகளைக் கூறுகிறார்கள்' என்பது சுமந்திரனின் குற்றச்சாட்டு.

'பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கையைப் பற்றி எழுந்தமானமாக அபிப்பிராயம் சொல்வது தவறு" என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிக் கவலைப்பட்டிருக்கிறார். 

 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...