அன்றைய அராஜகங்களை இன்று மறப்பது நியாயமல்ல! | தினகரன்

அன்றைய அராஜகங்களை இன்று மறப்பது நியாயமல்ல!

எல்லை நிர்ணயம் குறித்த அரசாங்க வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் 4ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனு மீதான விசாரணை கடந்த புதன்கிழமை இடம்பெற்றபோதே, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு காரணமாக உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் இடைநடுவில் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

2017.02.17 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் தேர்தல் தொகுதிகள், வேட்பாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில் அமைச்சரினால் நியமிக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணயக் குழு அதன் அதிகாரத்தை மீறிச் செயற்பட்டிருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு இந்த வர்த்தமானிப்படி தேர்தல் நடத்தப்பட்டால் அதன் முடிவு அநீதியானதாகவும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முரணாகவும் அமையும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணயம், வர்த்தமானி அறிவித்தல், அதற்கெதிரான தடையுத்தரவு என பல்வேறுபட்ட குழப்பகரமான விடயங்கள் கடந்த ஒருவாரகாலத்துக்கிடையில் தலைதூக்கி இருக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் இவ்வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பாக அறிவிக்கவிருந்த நிலையிலேயே விவகாரம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வருடங்களாக நடத்தப்படாதிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாரான நிலையில், இப்படியொரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு எதிரான இந்த வழக்கின் பின்னணியை நோக்கும் போது ஒவ்வொரு தரப்பும் அடுத்தவர் மீது சுட்டு விரல் நீட்டுவதையே காண முடிகிறுது. எதிர்க் கட்சித் தரப்புகள் அரசு மீதே குற்றச்சாட்டு சுமத்தியுள்ளன. ஆனால் ஆளும் தரப்பு இக்குற்றச்சாட்டினை முற்றாக மறுத்துரைத்துள்ளது. அரசாங்கம் கூடிய விரைவில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது. என்றாலும் சட்டச்சிக்கல் ஏற்பட்டிருக்கும் போது அதனை நிவர்த்திக்க வேண்டிய கடப்பாட்டை அரசு கொண்டிருப்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது.

குற்றச்சாட்டு சுமத்துவது இலகுவான காரியமேயானாலும் அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்களெதுவுமின்றி பேசுவது அர்த்தமற்ற செயற்பாடாகும். பேச்சுத் சுதந்திரம் இருப்பதற்காக எப்படியும் பேசிவிடலாம். யார் மீதும் சேறுபூசலாம் என நினைத்தால் அது தம்மீது சேறு பூசிக் கொள்வதற்கும் வழிசமைத்து விடும். இதனை நாம் கடந்த காலங்களில் கூட சர்வசாதாரணமாக கண்டுகொண்டுள்ளோம்.

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படக் கூடிய முயற்சிகள் குறித்து பல உறுப்பினர்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாகக் கூறி சபையில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே வருடக்கணக்காக இழுபட்டு வரும் தேர்தல்களை மேலும் தாமதப்படுத்துவதற்கே சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறான முயற்சிகளை கைவிட்டு அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கேட்டிருக்கிறார் அவர்.

அவரது கூற்றை வரவேற்பது சரிதான். மக்களுக்குரிய ஜனநாயக உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் எவருக்கும் எந்தவித முரண்பாடும் கிடையாது. ஆனால் கடந்த ஆட்சியின் போது பதவியிலிருந்த தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பதை மீட்டுப் பார்ப்பது நல்லதாகும். மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு வேட்டுவைக்கும் வகையில் செயற்பட்டதோடு அதிகாரிகள் கூட தமது கடமைகளை சரிவரச் செய்ய முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததை மறக்க முடியாது.

அன்று தேர்தல்கள் எப்படி நடத்தப்பட்டன? தேர்தல்களையும், அதிகாரங்களையும் தமக்குச் சாதகமாக அமைத்துக் கொள்ளும் பொருட்டு அரசியல் விதிகளைக் கூட மாற்றிக் கொண்டதை மக்கள் மறந்து விடவில்லை. சர்வாதிகாரத்தின் உச்சத்துக்கே நாட்டைக் கொண்டு செல்ல முனைந்ததை இலகுவில் மறக்க முடியாது. அவ்வாறிருக்ைகயில் இன்று எவ்வாறு பேச முடியும் என்ற கேள்வி நியாயமானதாகும்.

அன்று இரும்புக்கரம் கொண்டு நாடு ஆட்சி செய்யப்பட்டது.அதனை எவரும் மறந்து விட முடியாது.

சட்டச்சிக்கலைத் தீர்ப்பதற்கு காலம் கடத்தப்படமாட்டாது என அரசு தெரிவித்திருக்கின்றது. உரிய காலத்தில் தேர்தலை நடத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்கான முக்கிய கூட்டத்தை நாளை சனிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டவுள்ளது. இதனிடையே சகல கட்சிகளையும் உள்வாங்கியதாக ஒரு நடுநிலைத் தரப்பு மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தச் சட்டச்சிக்கல் தீர்வுக்கு வந்துவிடும். ஒரு விரலை நீட்டி குற்றம் சுமத்த முற்படுவோர் தமது மூன்று விரல்கள் தம்மை நோக்கி நீள்வதை மறந்துவிடக் கூடாது.


Add new comment

Or log in with...