தீவிரவாத அனுசரணை நாடுகள் பட்டியலில் வடகொரியா இணைப்பு | தினகரன்

தீவிரவாத அனுசரணை நாடுகள் பட்டியலில் வடகொரியா இணைப்பு

அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகள் பட்டியலில் வட கொரியா மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இருந்து வட கொரியா ஒன்பது அண்டுகளுக்கு முன் நீக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பானது வட கொரியா மீது மேலதிக தடைகளை அறிவிக்க தூண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிட்டார்.

எனினும் இதன் நடைமுறை தாக்கங்கள் மிகக் குறைவாக இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் குறிப்பிட்டுள்ளார்.

வட கொரியாவின் அணுத் திட்டமானது சர்வதேச தீவிரவாதத்திற்கு உதவுவதாகும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வட கொரியா மீது எண்ணெய் தடை மற்றும் அந்நாட்டு தலைவர் கிம் ஜொங் உன்னின் சொத்துகளை முடக்குவது குறித்த பரந்த தடைகளுக்கு கடந்த செப்டெம்பரில் ஐ.நாவில் அமெரிக்கா பரிந்துரைத்தது. எனினும் இதனையடுத்து வட கொரியா தனது ஆறாவது அணு ஆயுத சோதனையை மேற்கொண்டதோடு தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபட்டது.

சர்வதேச தீவிரவாதத்திற்கு உதவும் நாடுகள் பட்டியலில் ஈரான், சூடான் மற்றும் சிரியாவுடன் தற்போது வட கொரியாவும் இணைந்துள்ளது. வட கொரியா இந்த பட்டியலில் ஏற்கனவே இருந்தபோதும் அந்த நாட்டுடனான அணு விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் 2008 ஆம் ஆண்டு அந்த பட்டியலில் இருந்து நீக்கினார்.


Add new comment

Or log in with...