சிரிய அரச எதிர்ப்பு தலைவர் ராஜினாமா | தினகரன்

சிரிய அரச எதிர்ப்பு தலைவர் ராஜினாமா

ஐ.நா அனுசரணையிலான புதிய சுற்று சிரிய அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் ஆரம்பிக்க ஒரு வாரம் இருக்கும் நிலையில் சிரிய அரச எதிர்ப்பு கூட்டணியின் தலைவர் ரியாத் ஹிஜாப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆயுதப் போராட்டக் குழுக்கள் மற்றும் அரசியல் தரப்புகளை ஒன்றிணைத்த சவூதி ஆதரவு முகாம் ஒன்றின் தலைவராகவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரியாத் ஹிஜாப் நியமிக்கப்பட்டார்.

அவர் தனது இராஜினாமாவை அறிவித்தபோதும் அதற்கான காரணம் பற்றி கூறவில்லை. சிரிய அரச எதிர்ப்பு இரண்டு நாள் மாநாடு ஒன்று இன்று சவூதி அரேபியாவில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான ஏற்பாடாகவே அவரது பதவி விலகல் பார்க்கப்படுகிறது.

அசாத் அரசில் முன்னாள் பிரதமராக இருந்த ரியாத் ஹிஜாப் 2011இல் மக்கள் எழுச்சி போராட்டம் வெடித்தபின் அரசில் இருந்து விலகி எதிர்த்தரப்புடன் இணைந்துகொண்டார்.

எனினும் அரச எதிர்ப்பு தரப்புகளுக்கு இடையே நீண்ட காலமாக பிளவு நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...