Wednesday, April 24, 2024
Home » அரச ஊழியர்களுக்கு மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே சம்பளம் வழங்கப்படுகிறது

அரச ஊழியர்களுக்கு மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே சம்பளம் வழங்கப்படுகிறது

-சம்பளத்தை அதிகரிப்பது என்பதை போராடுபவர்களே கூற வேண்டும்

by sachintha
October 31, 2023 8:44 am 0 comment

தற்போது மிகவும் சிரமத்துடன் வழங்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு கூடுதல் பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதை போராட்டங்களில் பங்கேற்கும் புத்திஜீவிகள் மற்றும் வல்லுனர்கள் தெரிவிக்க வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முறையான பஸ் சேவையின்றி நீண்டகாலமாக சிரமப்பட்டு வரும் கஹதுடுவ கோறள இம பிரதேச மக்களின் போக்குவரத்து வசதிக்காக கெஸ்பேவ டிப்போவின் ஏற்பாட்டில் புதிய பஸ் சேவையை ஆரம்பிக்கும் நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் தலைமையில் நடைபெற்றது.

கஹதுடுவ கோரள இம சந்தியிலிருந்து பாடசாலை மாவத்தை ஊடாக கஹதுடுவ -– புறக்கோட்டை வரை பயணிக்கும் இந்த பஸ் வண்டி மூலம் பெருமளவிலான பிரதேசவாசிகளுக்கு போக்குவரத்து வசதிகளை பெறுவதற்கான சந்தர்ப்பம் இதன்மூலம் கிடைத்துள்ளது.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

‘கடந்த காலத்தில் ஹோமாகம மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசத்தில் பாரியளவு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நாட்டிலும் சர்வதேச அளவிலும் புகழ் கிடைத்துள்ளன. குறிப்பாக இந்த தொகுதி நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பல்கலைக்கழகங்களைக் கொண்ட தொகுதியாக மாறியுள்ளது. தெற்காசியாவின் மிகப்பெரிய தேசிய பாடசாலையான மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி இந்தப் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலான அரச நிறுவனங்களும் அமைந்துள்ளன.

ஆனால் துரதிஷ்டவசமாக ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியினால் எமது நாடு பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில தீவிரவாத அமைப்புகள் அரசியல் ஆதாயம் அடைந்து நாட்டில் பெரும் பயங்கரவாதத்தை உருவாக்கின. எனினும், மீண்டும் நாட்டில் சமாதானத்தை சுவாசிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு தற்காலிக நிலைதான். தற்போதுள்ள கடனை மறுசீரமைக்கும் வரை நாடு மீண்டும் கடன் வாங்க முடியாது.

ஆட்சி அதிகாரம் யாருக்கு கிடைத்தாலும், ஜனாதிபதியாக, பிரதமராக அல்லது அமைச்சரவையில் யார் நியமிக்கப்பட்டாலும், இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். தற்போது அரசாங்க ஊழியர்கள் தமது சம்பளத்தை 20,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. போராட்டத்தில் பங்கேற்கும் அனைத்து வல்லுனர்கள் மற்றும் அறிஞர்கள் சம்பளம் வழங்குவதற்கு கூடுதல் பணத்தை எவ்வாறு பெறுவது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT