மனித குலத்தை இருண்ட யுகத்துக்கு அழைத்துச் செல்லும் சமூக ஊடகங்கள்! | தினகரன்

மனித குலத்தை இருண்ட யுகத்துக்கு அழைத்துச் செல்லும் சமூக ஊடகங்கள்!

வயதான தம்பதிக்கு குரங்குப் பாதம் ஒன்று கிடைக்கிறது. அதை வைத்திருப்பவர்கள் நினைத்தது நடக்கும்; அதேசமயம் அந்த நன்மையைப் பெற ஒரு தீமையையும் கூடப் பெற்றாக வேண்டும் என்பது தெரியவராத சாபம்.

அந்தத் தம்பதிக்கு பணம் தேவைப்படுகிறது. குரங்குப் பாதத்திடம் வேண்டுகிறார்கள். பணம் கிடைக்கிறது. ஆனால், அதற்கு முன்னர் அவர்களது மகன் தொழிற்சாலை விபத்தில் உயிரிழக்கிறான். அதற்கான இழப்பீடாகத்தான் முதிய தம்பதிக்கு பணம் கிடைக்கிறது.

இந்தக் கதையைப் பாடசாலைப் பருவத்தில் படித்ததாக ஞாபகம்.

அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் வலம் வரும் நீலத் திமிங்கில விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டது நினைவிருக்கலாம். குரங்குப் பாதம் போன்ற சமூக ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள தீங்குதான் இது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தீவிரவாதக் கருத்துகளால், அவற்றை அறிவித்துக் கொள்பவர்களால் உலகம் முழுவதிலும் தாக்குதல்கள், வன்முறைகள் அதிகரித்துள்ளன.

முகநூல் (பேஸ்புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), சுட்டுரை (ட்விட்டர்) போன்ற சமூக ஊடகங்கள் பெரும்பாலும் வெறுப்புப் பிரசாரம், பொய்யான செய்திகள், மோசடியாகத் திருத்தப்பட்ட புகைப்படங்களைப் பரப்புபவையாகவே உள்ளன. அவற்றால் பரவும் வதந்திகளால் வன்முறைகள் பெருகுகின்றன. கேட்டதைக் கொடுக்கும் குரங்குப்பாதம் போலவே, இணையதளமும் சமூக ஊடகங்களும் மாறிவிட்டன. இது வரமா, சாபமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

உலக வலைப்பின்னலின் நன்மைகளை மட்டும் பட்டியலிடும் நேர்மறைச் சிந்தனையாளர்கள், உலகில் புதிய அறிவொளியை அது பாய்ச்சுவதாகக் கூறுகின்றனர். ஆனால், சமூக நலம்விரும்பிகள் சிலர் புதிய கற்காலத்துக்கு நம்மை சமூக ஊடகங்கள் அழைத்துச் செல்கின்றனவோ என்று அஞ்சுகின்றனர்.

உலக வரலாற்றில் கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் மனிதனின் நுண்ணறிவால் பல புதுமைகள் படைக்கப்பட்டன. அவையே நமது தற்போதைய நவீன வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அடித்தளமாகின.

1440-களில் ஜோகன்னஸ் கூட்டன்​ேபர்க் கண்டுபிடித்த அச்சு இயந்திரமே இந்த நவீன அறிவியக்கத்தின் முதலடி. அதன்மூலம் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்ட நூல்களால், குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே இருந்த கல்வியறிவு பரவலாகியது.

அதன் தொடர்ச்சியாக, சுதந்திரமான சிந்தனைப்போக்கு, நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு எதையும் பரிசீலித்து அதன் காரண காரியங்களை விவாதத்துக்கு உள்படுத்தும் திறன் ஆகியவை மனித வரலாற்றில் மைல்கற்களாக அமைந்தன. எதையும் அறிவியல்ரீதியாக நிருபித்தால் மட்டுமே அதை உண்மையாக ஏற்கும் நிலையும் உருவானது.

நிலைமை இப்படி இருக்கும்போது, புதிய கற்காலம் குறித்த கவலைகள் தேவையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதில், உலக வலைப்பின்னலின் தன்மையிலும் செயல்முறையிலும்தான் இருக்கிறது.

அண்மைக் காலம் வரை, ஆதாரபூர்வமான செய்திப்பரவல் என்பது ஒரே திசையில்தான் இருந்தது. பத்திரிகைகள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களே செய்திகளையும், அறிவுபூர்வமான சிந்தனைகளையும் மக்களிடம் சேர்த்து வந்தன.

அவை வெளியிடப்படுவதற்கு முன்னர் கடுமையான தணிக்கைகளையும், தகவல்கள் உண்மையா என்பதற்கான சோதனைகளையும் தாண்டி வர வேண்டியிருந்தது. தற்போது அதற்குப் போட்டியாக உருவெடுத்துள்ள சமூக ஊடகங்கள் புதிய திசை மாற்றத்தை உருவாக்கியுள்ளன. ஆனால், இது ஒரு பேரழிவுத் தொழில்நுட்பமாகி விட்டது.

தற்காலத்தில் இணைய இணைப்புள்ள எந்த ஒருவரும், செய்திகளைப் படிக்கும் வாசகரோ, தொலைக்காட்சி பார்வையாளரோ மட்டுமல்ல. மாறாக அவரே தகவல்களையும் செய்திகளையும் உருவாக்குபவராக மாறி விடுகிறார். மேற்கத்திய எண்மம் (டிஜிட்டல்) புரட்சியில் செய்திகளின் ஆதாரத்தைப் பரிசோதிக்க எந்த வழியும் இல்லை.

தற்போது எண்ணிக்கையே நாணயமாக மாறி வருகிறது. இத்தகைய நிலையில் உண்மைகளையும் கட்டுக்கதைகளையும் பொய்களையும் வேறுபடுத்திக் கண்டறிவது எப்படி?

எந்தக் காரணமுமின்றி, தொடர்ந்து பரப்பப்படும் உணர்ச்சிகரமான முழக்கங்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதை வரலாறு நமக்கு ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறது. அப்போது அறிவுபூர்வமான சிந்தனையை விட நம்பிக்கை முதன்மை பெற்றது. அதுவே மத்திய இருண்ட கால வரலாற்றுக்குக் காரணமானது.

இந்த திசைமாற்றத்தின் விளைவாக, அச்சிடப்படும் பத்திரிகைகள்கூட டிஜிட்டல் மயமாகி வருவதைக் காண முடிகிறது. பாரம்பரியமாக செய்திகளை அளித்து வரும் பத்திரிகைகளின் வீழ்ச்சியே சமூக ஊடகங்களின் வளர்ச்சியாக மாறி வருகிறது. இந்தப் போராட்டத்தில் தம்மை நிலைநிறுத்த முயலும் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களையே துணைக்கு அழைக்கின்றன.

கூகிள் (இது யூ டியூப் தளத்தையும் நடத்துகிறது), பேஸ்புக் (இது வாட்ஸ் அப்பையும் நிர்வகிக்கிறது) ஆகியவற்றின் முக்கியத்துவம் பெருகி வருகிறது. இவை இரண்டும் குறுகிய காலத்தில் உலகின் மாபெரும் வெளியீட்டாளர்களாக மாறி விட்டன. மேற்கத்திய உலகில் விளம்பர வருவாயில் 90 சதவீதத்தை இவ்விரு நிறுவனங்களும் கபளீகரம் செய்து விட்டன.

இத்தனைக்கும், கூகிளோ, பேஸ்புக்கோ தங்களுக்கென்று எந்த ஒரு பத்திரிகையாளரையும் பணியில் அமர்த்திக் கொள்ளவில்லை. மாறாக, அவை விளம்பரங்களையும் செய்திகளையும் வாடிக்கையாளர்கள் மூலமாகவே நிரப்புகின்றன. தகவல் திரட்டலை வாடிக்கையாளர்களிடமே அவை ஒப்படைத்து விடுகின்றன. படிமுறைத்தீர்வே இன்றைய செய்தி உலகை ஆள்கிறது. அதேசமயம் மனிதனின் நுண்ணறிவு சுருங்கி வருகிறது. அண்மையில் அமெரிக்காவின் ​ேலாஸ் வேகாஸில் நடைபெற்ற பயங்கரமான துப்பாக்கிச் சூட்டின்போது கூகிளிலும், பேஸ்புக்கிலும் செய்திகள் தேடப்பட்ட போது போலிச் செய்திகளும், குற்றவாளி குறித்த தவறான தகவல்களுமே பெருமளவில் பகிரப்பட்டன. இத்தகைய தவறான தகவல்களால் எதிர்காலத்தில் நிகழவுள்ள பயங்கரங்களை கற்பனை செய்யவே முடியவில்லை.

தற்போதைய சைபர் வன்முறையாளர்கள் இலேசுப்பட்டவர்கள் அல்லர். இதில் பால்பேதம், அரசியல் பேதம் எதுவும் விலக்கில்லை. இணையத்தில் பவனி வரும் பலரும் அச்சுறுத்தப்படுகிறார்கள். இணையத்தில் தவறாக நீங்கள் சித்திரிக்கப்பட்டு விட்டால் அந்த வலையிலிருந்து நீங்கள் தப்பவே முடியாது. அது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையையும், நம்பகத்தன்மையையும் நம்ப முடியாத வகையில் பாதித்து விடும். இணைய உலகின் தொடர்ச்சியாக வெளியுலகிலும் பாதிப்புகள் தொடரும்.

இதில் சிக்கல் என்னவென்றால், உண்மைகள் தனிப்பட்ட சிலரின் விருப்பத்துக்கு ஏற்ப திரிக்கப்படுவதுதான். தற்போதைய சமூக ஊடகங்களின் பொதுவான குணாம்சமாக, பொய்யான செய்திகள், விருப்பத்துக்கேற்ப சரித்திரத்தை வளைப்பது, போலி அறிவியல் கோட்பாடுகள், உணர்ச்சியைத் தூண்டும் மூர்க்கத்தனமான பதிவுகள் ஆகியவை உள்ளன. சமூக உறுப்பினர் என்ற வகையில், மக்களின் இத்தகைய கருத்துகளை நாம் மாற்றியமைத்தாக வேண்டும்.

நாம் எதைப் படிப்பது, எதைப் பேசுவது, எதைக் காண்பது என்பதற்கான கட்டுப்பாடுகளை சமூக ஊடகம் தகர்த்திருக்கிறது; நம்மைப் போலவே சிந்திப்போருடன் இணைந்து கவனிக்கவும் வாய்ப்பு தந்திருக்கிறது. 

மனோஜ்குமார்... 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...