வீட்டுச்சின்னத்தில் களமிறங்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் அணி | தினகரன்

வீட்டுச்சின்னத்தில் களமிறங்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் அணி

சுரேஷின் இடத்திற்கு வரதராஜப்பெருமாள்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதால் அந்த இடத்தை வரதர் அணியை கொண்டு நிரப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சியும், ஈபிஆர்எல்ப் வரதர் அணியும் இணைந்து செயற்படுவது பற்றிப் பூர்வாங்கப் பேச்சுவார்த்தையொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவருக்கும், வரதர் அணியின் முக்கியஸ்தருக்கும் இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பெரும்பாலும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் சாதகமான இறுதி முடிவு எட்டப்படலாம் என்றும் வடக்கு அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

பேச்சுவார்த்தையில் சாதக முடிவு எட்டப்படின் ஈபிஆர்எல்எப் வரதர் அணியினரின் தமிழர் சமூக ஜனநாயக கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வீட்டுச் சின்னத்தில் களமிறங்கும் என நம்பகரமாகத் தெரியவருகிறது.

சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்ப் கட்சி, தமிழ் தேசியகூட்டமைப்பிலிருந்து விலகவில்லை என்று தெரிவித்துள்ள அதேநேரம், கூட்டமைப்பின் சின்னமாக வீட்டுச் சின்னத்தை ஏற்க முடியாதென்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அந்தச் சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சுரேஷ் அணியினர் வெளியேறும் பட்சத்தில் அந்த வெற்றிடத்திற்கு வரதர் அணியை இணைத்துக் கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள அதேவேளை, கூட்டமைப்புடன் இணைந்து அரசியல் மீள்பிரவேசம் செய்வதற்கு திரு.வரதராஜப்பெருமாள் விருப்பம்கொண்டுள்ளார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.(வி)

நமது நிருபர் 


Add new comment

Or log in with...