அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது நாட்டுக்கும் நல்லிணக்கத்துக்கும் நல்லதல்ல | தினகரன்

அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது நாட்டுக்கும் நல்லிணக்கத்துக்கும் நல்லதல்ல

பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும்

அரசியல் கைதிகளை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது நாட்டுக்கும், நல்லிணத்துக்கும் நல்லதல்ல என்பதால் அவர்களை பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுவிப்பதற்கு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் சம்பந்தப்பட்ட சட்ட அதிகாரிகளைக் கொண்ட விசேட கூட்டம் விரைவில் கூட்டப்பட்டு இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட வேண்டுமென்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதியைக் கொலை செய்ய வந்தவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியுமாயின், ஏன் ஏனைய அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் இந்த அரசாங்கம் கவனத்திற் கொள்ள முடியாதென்றும் அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆனபோதும் அரசியல் கைதிகள் விடயத்துக்கு இதுவரை நிரந்தரமான தீர்வு காணப்படவில்லை. இவ்விடயம் இன்னமும் தேக்க நிலையிலே உள்ளது. தங்களை இந்த அரசாங்கம் வித்தியாசமாக நடத்துவதாக தமிழ் இளைஞர்கள் உணரக்கூடாது. இனிமேலும் ஆயுதம் தாங்கியதொரு குழுவை நாம் நாட்டில் விரும்பவில்லை.எனவே அரசாங்கம் இவ்விடயத்துக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் சபையில் கேட்டுக் கொண்டார்.

2018 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் நீதி , சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய அமைச்சுக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பிலான குழு நிலை விவாதம் நேற்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சபையில் மேலும் கூறியதாவது-

அரசியல் கைதிகளாக சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. சிலரது வழக்குகள் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளன. இவ்விடயம் தொடர்பில் நாம் பல தடவைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உரையாடியுள்ளோம்.

அரசியல் கைதிகளுடன் உரையாடியபோது அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் நியாயமானதாகவே தென்படுகின்றது. முன்னாள் நீதி அமைச்சரை நாம் குறை சொல்லவில்லை. எனினும் அவர் எந்தவொரு விடயத்துக்கும் இணங்கவில்லை. அவர் இவ்விடயம் தொடர்பில் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.இதனால் புதிய அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் அதிக அக்கறை காட்டுவாரென நாம் நம்புகின்றோம்.

அரசியல் கைதிகள் அரசியல் நோக்கிற்காக குற்றம் ​இழைத்துள்ளார்களே தவிர தமது சொந்த நோக்கிற்காக தவறு செய்யவில்லை என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்ட குற்றமும் மறுக்க முடியாதது தான். எனினும் 1971,1987 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை மற்றும் பொது மன்னிப்பு வழங்கியமை அடிப்படையில் இவர்களையும் அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும். அக்காலத்தில் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியுமாக இருந்தால் ஏன் தற்போது வழங்க முடியாது?

இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு தடவைக்கு பல தடவைகள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகவும் அதற்கு பதிலாக மாற்று சட்டமொன்றை அறிமுகம் செய்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தது. எனினும் இதுவரை அவ்வாறான எந்தவொரு விடயமும் முன்னெடுக்கப்படவில்லை.

அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்ட முறை, அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்ட விதம், வாக்குமூலம் பெறப்பட்ட விதம், வழக்குகள் தொடுக்கப்பட்ட விதம், அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டவிதம் ஆகிய அனைத்தும் நாட்டின் வழமையான சட்டத்திலும் மாறுபட்டதாகவே இருக்கிறது. அவர்கள் தொடர்ந்தும் எதற்காக இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்?

ஒவ்வொரு அரசியல் கைதியினது வழக்கும் தனித்தனியாக விசாரணை செய்யப்பட வேண்டும். ஜனாதிபதியை கொலை செய்ய வந்தவர், அரசியல் நோக்கிலேயே தன்னைக் கொலை செய்ய வந்தாரென்றும் அவருக்கு தன் மீது எவ்வித தனிப்பட்ட குரோத உணர்வும் இல்லையென்பதையும் ஜனாதிபதி நன்கு அறிந்து வைத்திருந்தார். அதன் காரணமாகவே அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். ஏனைய அரசியல் கைதிகளும் இவவாறு அரசியல் காரணத்துக்காகவே செயற்பட்டனர் என்பதனை அரசாங்கம் உணர முன்வர வேண்டும். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் கைதிகள் எதற்காக தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கோரி எனக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். என்னால் அவர்களை நேரில் சென்று சந்திக்க முடியாதபோதும் அவர்களது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

  

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...