சபரிமலைக்குள் நுழைந்த பெண்ணால் சர்ச்சை | தினகரன்

சபரிமலைக்குள் நுழைந்த பெண்ணால் சர்ச்சை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர், மாநில சுகாதார அமைச்சர் சைலஜாவுடன் நுழைந்துவிட்டதாக இந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், அமைச்சருடன் வந்த பெண், மஞ்சள் நிற சேலை அணிந்து நெற்றியில் குங்கும பொட்டு வைத்திருந்தார். அவருடன் கோயில் ஊழியர்கள் நின்றிருந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் கோயிலின் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அந்த அமைப்பு, இதற்கு திருவாங்கூர் தேவசம் சபையே காரணம் என அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இந்து ஐக்கிய வேதிஅமைப்பின் செயலர் பார்கவரம் கூறியதாவது: அந்த பெண் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தது பாரம்பரிய நடைமுறையை மீறிய செயல். பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவு வராத நிலையில், பெண்களை அனுமதிப்பதற்கு அரசு விரும்புகிறது. அரசியல் கட்சிகள் வெவ்வேறு கருத்துகள் கொண்டிருந்தாலும் நடைமுறையில் உள்ள விதிகளை அரசு பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அந்த அமைப்பின் தலைவர் கேபி சசிகலா கூறியதாவது: எந்த விதிப்படி அந்த பெண் உள்ளே வந்தார் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். கோயிலுக்கு என சில விதிகள் உள்ளன. விதிகள் மாற்றப்படுவது என்பது வேறு விவகாரம். ஆனால், தற்போது, கோயிலுக்குள் 10 முதல் 50 வயது பெண்கள் நுழைய தடை உள்ளது. தேவசம் சபை அதிகாரிகள் விதிகளை பின்பற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருவாங்கூர் தேவசம் சபை தலைவர் பத்மகுமார் கூறுகையில், அமைச்சருடன் சென்ற பெண், சுகாதார துறையில் பணியாற்றும் ஊழியர்.

இது தொடர்பாக குற்றச்சாட்டு குறித்து விரிவாக விசாரணை நடத்தி இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். 


Add new comment

Or log in with...