இரு பிள்ளைகளின் தாய் கொலை; கணவர் விசமருந்திய நிலையில் | தினகரன்

இரு பிள்ளைகளின் தாய் கொலை; கணவர் விசமருந்திய நிலையில்

 

நுவரெலியா இலங்கை மின்சார சபைக்கு அருகில் 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

நுவரெலியா, கெமுனு மாவத்தை ஆவேலியா, நுவரெலியாவை சேர்ந்த பெரியசாமி சியாமளாதேவி என்பவர் இன்று காலை (17) நுவரெலியா மின்சார சபைக்கு அருகாமையில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிக்கு சென்று திரும்பும் வழியில் அப்பர் லேக் குறுக்கு பாதையில் வைத்து இனந்தெரியாதோரால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.

8 வயதுடைய பெண் பிள்ளை மற்றும் 6 வயதுடைய ஆண் பிள்ளைகளின் தாயாரான இவர், குடும்பத் தகராறு காரணமாக கணவனிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரை இவருடைய கணவர் கொலை செய்திருக்கலாம் என நுவரெலியா பொலிசாரும் இவருடைய உறவினர்களும் சந்தேகிக்கின்ற நிலையில், இவருடைய கணவர், லபுக்கலை பகுதியில் வைத்து இன்றையதினம் (17) விசம் அருந்திய நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திசாநாயக்க மற்றும் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன பஸ்நாயக்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

நீதிபதியின் விசாரணையின் பின்பு சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரண விசாரணையின் பின்பு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக நுவரெலியா பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

(நுவரெலியா தினகரன் நிருபர் - எஸ். தியாகு)

 


Add new comment

Or log in with...