அரசாங்க நிதி தொடர்பில் கைதாகி பிணையில் வெளிநாடு சென்ற அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய சித்ரான் விக்மசூரியவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (17) குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவானினால் குறித்த பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டது.
கடந்த அரசாங்க காலத்தில், அமெரிக்காவுக்கான தூதுவராக இருந்த போது தூதரக அலுவலகமொன்றை கொள்வனவு செய்வது தொடர்பில் வழங்கப்பட்ட 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களில், 332,000 அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த வருடம் நவம்பர் 17 ஆம் திகதி அவர் இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வதற்காக முயற்சி செய்த வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததோடு, கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து, நீதிமன்றத்தின் அனுமதிக்கமைய தனது கண்ணில் உள்ள பிரச்சினை தொடர்பில் சிகிச்சை பெற அமெரிக்கா சென்றிருந்த போதிலும், வழக்கு விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றில் ஆஜராகாததன் காரணமாக அவருக்கு பிடியாணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Subashini Senanayake
Add new comment