Thursday, March 28, 2024
Home » வறியோரின் வாழ்வாதாரத்துக்ேக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

வறியோரின் வாழ்வாதாரத்துக்ேக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

by sachintha
October 31, 2023 6:00 am 0 comment

அரச ஊழியர்கள் 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு அரச நிறுவனங்களுக்கு முன்பாக மதிய உணவு வேளையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மற்றும் மாகாண, உள்ளூராட்சி மன்ற அரச ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.

இரண்டு கோடி 20 இலட்சம் மக்கள் வாழும் இந்நாட்டில், சுமார் 14 இலட்சம் பேர் அரச ஊழியர்களாக உள்ளனர். அவர்களை விடவும் சுமார் ஆறு மடங்கு ஊழியர்கள் அதாவது, 82 இலட்சம் பேர் தனியார் துறையில் பணியாற்றுகின்றனர். இவர்களை விடவும் அன்றாட கூலிகளாகவும் பெருந்தொகையானோர் உள்ளனர்.

இவ்வாறான நிலையில்தான் அரச ஊழியர்கள் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய சூழலில் அரச ஊழியருக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என்பது சாதாரண விடயமல்ல. இந்நாடு கடந்த வருடத்தின் (2022) ஆரம்பப்பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. அந்நெருக்கடியினால் நாடு கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டது.

அவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருந்த நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரிவான அடிப்படையில் ஆரம்பித்தார். அதன் பிரதிபலன்களை மக்கள் குறுகிய காலத்திற்குள் அனுபவிக்கத் தொடங்கினர். அதனால் பொருளாதார நெருக்கடி காலத்தில் முகம்கொடுத்த அசௌகரியங்களும் பாதிப்புகளும் தற்போது பெரும்பாலும் நீங்கிவிட்டன. கடந்த வருடத்தின் ஆரம்பப்பகுதியில் இந்நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானதா? என வினவப்படும் அளவுக்கு தற்போது நிலைமை வளர்ச்சி பெற்றிருக்கிறது.

இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்த எந்த நாடும் குறுகிய காலப்பகுதிக்குள் மீட்சி பெற்றதாக வரலாறு இல்லை. அதுவே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.

ஜனாதிபதியின் தலைமைத்துவம், வழிகாட்டல்கள் மற்றும் பொருளாதார வேலைத்திட்டங்களின் ஊடாக இவ்வாறான மீட்சியை இலங்கையினால் அடைந்து கொள்ள முடிந்துள்ளது. ஆனாலும் இப்பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் நாட்டில் இருந்து இன்னும் முற்றாக நீங்கியதாக இல்லை.

இந்த நிலையில் அவ்வாறான அசௌகரியங்கள் இனியொரு போதும் இந்நாட்டில் ஏற்படக் கூடாது என்பதுதான் இந்நாட்டு மக்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில், அரச ஊழியர்களின் 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கையை நியாயமானதாக நோக்க முடியாதென சமூக ஆர்வலர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

ஏனெனில் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள், அழுத்தங்களில் இருந்து நாடு இன்னும் முழுமையாக மீட்சி பெற்றிராத சூழலில் 14 இலட்சம் அரச ஊழியர்கள் இவ்வாறான சம்பள உயர்வை கோரும் போது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களின் நலன்கள் குறித்தும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏனெனில் இவ்விதமான சம்பள உயர்வு வழங்கப்படும் போது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை முன்னெடுப்பது கூட நெருக்கடிக்கு உள்ளாகும். இவ்விதமான சம்பள உயர்வுக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போது நாட்டின் ஏனைய துறைகளுக்கான ஒதுக்கீடுகளில் தாக்கங்கள் ஏற்பட வழிவகுக்கும். மேலும் நாட்டில் அரசாங்கத்தின் கவனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் அரச ஊழியர்கள் மட்டுமல்லர். இன்னும் பல தரப்பினர் உள்ளனர். அவர்களில் வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்கள், விஷேட தேவையுடையவர்கள், முதுமை அடைந்துள்ளவர்கள் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

அதனால் அரச ஊழியர்களுக்கு இவ்வாறான சம்பள உயர்வை வழங்கும் போது தனியார் துறையினர் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும். அத்தோடு அரச, தனியார் துறை ஊழியர்கள் மாதச் சம்பளம் பெறுபவர்களான போதிலும் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள் அவ்வாறு மாத சம்பளத்தைப் பெறக்கூடியவர்கள் அல்லர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே பொருளாதார மறுமலர்ச்சிப் பாதையில் நாடு பிரவேசித்துள்ள இன்றயை சூழலில், எடுத்த எடுப்பில் இவ்வாறானதொரு சமபள உயர்வுக் கோரிக்கை நியாயமானதல்ல. அதுவே மக்களின் அபிப்பிராயமும் ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT