தமிழர்களை ஜனநாயக கிளர்ச்சிக்குள் திணிக்க முயல வேண்டாம் | தினகரன்

தமிழர்களை ஜனநாயக கிளர்ச்சிக்குள் திணிக்க முயல வேண்டாம்

உறுதிமொழிகளை உடன் நிறைவேற்றுங்கள்

அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாது தமிழ் மக்களை மீண்டும் ஜனநாயக கிளர்ச்சிக்குள் திணிக்க, இடமளிக்க வேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தினார்.

அதேநேரம், வடக்கிலுள்ள இராணுவத்தினருக்கு மகாவலி, மாதுறுஓயா மற்றும் மல்வத்து ஓயா பிரதேசங்களில் வேலைவாய்ப்புக்களுக்கான வழியை ஏற்படுத்தி, வடக்கில் இராணுவப் பிரசன்னம் மற்றும் காணி சுவீகரிப்புப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வரவுசெலவுத்திட்ட  இரண்டாவது வாசிப்பு மீதான ஐந்தாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாதிருத்தல், ஐ.நா மனித உரிமை பேரவையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை முறையாக நிறைவேற்றாமை என்பன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை பலனற்றதாக்கிவிடும். இதனூடாக சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போவதற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படும்.

அது மாத்திரமன்றி தமிழ் மக்கள் அரசாங்கம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் இழக்கப்பட்டு விடும். அப்படியானதொரு சூழலில் தமிழ் மக்கள் ஜனநாயக வழிகளில் தீர்வை முன்னெடுப்பதற்காக மீண்டும் ஒரு போருக்குள், ஆயுதப் போராட்டம் எனக் கூறவரவில்லை, மக்கள் மத்தியில் ஜனநாயக கிளர்ச்சியை திணிக்க இடமளிக்க வேண்டாம் என்றும் அவர் கோரினார்.

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் மக்களிடையே விமர்சனங்கள் இருக்கின்றன.

உண்மைக்குப் புறம்பான செய்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்படும் சூழ்நிலையில், நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

எனவே தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

இதேவேளை, ஒவ்வொரு வரவுசெலவுத்திட்டத்திலும் நாட்டின் பாதுகாப்புச் செலவுக்காக பலகோடி ரூபா ஒதுக்கப்படுகின்றது. ஏனைய துறைகளைவிட அதிக ஒதுக்கீடாக இது அமைகிறது.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் கட்டுப்பாட்டிலேயே எமது மக்களின் நிலங்கள் இருக்கின்றன. அவர்கள் இராணுவ கடமைகளுக்கு அப்பால் வேறு தொழில் இல்லாத காரணத்தால் எமது நிலங்களை ஆக்கிரமித்து வைப்பது மட்டுமல்ல, வர்த்தகம் மற்றும் விவசாயத் துறையிலும் ஈடுபட்டுள்ளனர்.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கிலுள்ள மேலதிக இராணுவத்தினர் குறைக்கப்பட வேண்டும். அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள எமது சொந்த நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...