புதியதேர்தல் முறை மாற்றங்களை நாம் நிராகரிக்கின்றோம் | தினகரன்

புதியதேர்தல் முறை மாற்றங்களை நாம் நிராகரிக்கின்றோம்

பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் ஆவேசம்

சிறுபான்மை சமூகங்களான மலையக முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாகப்பாதிக்கும் தேர்தல் முறை மாற்றத்தை நாம் நிராகரிப்பதோடு, இந்த மக்களுக்கு விமோசனம் தரும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதனையும் எதிர்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் (08ஆம்திகதி) பாராளுமன்றத்தில் தெரி வித்தார்.

வடக்கும், கிழக்கும் தனித்தனி மாவட்டங்களாக இருக்க வேண்டுமெனவும், எந்தவொரு கட்டத்திலும் இவ்விரண்டு மாகாணங்களும்இணைக்கப்படக் கூடாதெனவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசியலமைப்புச் சபைக்குத் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் சுட்டிக்காட்டினார்.

கிழக்கிலே தமிழரான பிள்ளையானும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் முதலமைச்சராக இருந்து ள்ளனர். கல்வி அமைச்சராக ஒரு தமிழரும், காணி அமைச்சராக ஒரு சிங்களப் பெண்மணியும் பதவி வகித்துள்ளனர். இலங்கையில் எந்த மாகாணத்திலும் நடைமுறையில் இருக்காத ஓர் அரசியல் முன்மாதிரியைக் கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தை, வடக்கு மாகாணத்துடன் இணைப்பதற்கு எந்தத் தேவைப் பாடு எழுந்துள்ளது? என்றும் அவர் வினவினார். அது மட்டுமன்றி அந்த மாகாணத்தில் 42% வாழும் முஸ்லிம்களை 17% மாக மாற்றும் மோசமான செயற்பாட்டை கிழக்கு முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் புலிகளின் வீரத்தையும் தமது பலத்தையும் மக்களுக்கு எடுத்துக் கூறி, மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்த தமிழ்க் கூட்டமைப்பு, அந்த மாகாணத்தில் சிறுபான்மை இனமாக வாழும் முஸ்லிம்களை ஓரவஞ்சனமாக நடாத்தும் முறைகளை கண்கூடாக கண்டுவரும் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம்கள் எவரும், வடக்கு – கிழக்கு இணைப்பை ஒருபோதும் ஆதரிக்கவில்லை எனவும் அமைச்சர்மேலும்கூறினார்.

அமைச்சர் பதியுதீன் தனது பாராளுமன்ற உரையில் மேலும் கூறியதாவது, தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியல்யாப்பானது எத்தனையோ முறை திருத்தப்பட்ட போதும், இந்தநாட்டிலே நிம்மதியும், சந்தோஷமும் ஏற்பட்டதா? என்ற கேள்வியை நான் முன் வைக்க விரும்புகின்றேன்.

சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதில் சிங்கள, முஸ்லிம், தமிழ்த் தலைவர்கள் ஒருமித்து அர்ப் பணிப்புடன் செயற்பட்டு இருக்கின்றனர். அதேபோன்று முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் மர்ஹூம் டாக்டர். ரீ.பி. ஜாயா முதல் மர்ஹூம் அஷ்ரப் வரையிலான முஸ்லிம் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தில் முன்னர் அங்கம் வகித்த, தற்போது அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் இந்த நாடு பிளவுபடுவதை எப்போதும் விரும்பிய தில்லை. அவர்கள் இந்த நாட்டின் இறையாண்மைக்கும் ஓருமித்த சக வாழ்வுக்கும் உழைத்தவர்கள். தெற்கிலும், வடக்கிலும் முறையே சிங்கள, தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்திய போதும், இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு போராட்டத்துக்கும் ஒத்துழைப்பு வழங்காமல் முஸ்லிம் சமூகத்தவர் நடுநிலை நின்று செயற்ப்பட்டவர்கள்.

வடக்கு, கிழக்கில் பத்து சதவீதமாக வாழும் முஸ்லிம் சமூகம்,நாட்டின் பெரும் பான்மைச் சமூகமான பௌத்தர்களுடனும், சிறுபான்மைச் சமூகங்களான இந்து, கத்தோலிக்க மக்களுடனும் ஒற்று மையாகவும், இன ஐக்கியத்துடனும் வாழ்ந்தவர்கள். தொடர்ந்தும் அவ்வாறேவாழ விரும்புகி ன்றவர்கள்.

பெரும்பான்மைத் தலைவர்கள் ஒருசிலர் தமது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவும், இருப்புக்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கிலுமே மொழிக் கொள்கையைக் கொண்டு வந்தனர். இந்தமொழிக் கொள்கையின் மூலம் தமிழ் மொழிக்கு இழைக்கப்பட்ட அநீதியே, சிறுபா ன்மைத் தமிழர்கள் ஆயுதம் ஏந்த வழிகோலியது. தமிழ்த் தலைவர்கள் சிலரினால் உசுப் பேற்றப்பட்ட தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தைத் தூக்கியதனால், இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்த கலாசாரம் பாரிய அழிவுகளையும், சொல்லொணாஇழப்புக்களையும் ஏற்படுத்தியது.

வடக்கு, கிழக்கு யுத்தம் தமிழ் மக்களை மட்டும் பாதிக்கவில்லை. அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் பெரிது ம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக உடுத்த உடையுடனும், வெறு ங்கையுடனும்அந்தச் சமூகம் வெளியேற்றப்பட்ட வரலாறை இந்த உயர்சபை மறந்துவிடக் கூடாது.

இந்த நாடு பிளவுபடக் கூடாது என்ற கொள்கையுடனும், உறுதியுடனும்வாழ்ந்தவர்களே, அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

இந்த மீயுயர் சபையில் அங்கம் வகிக்கும் 225 பாராளு மன்ற உறுப்பினர்களுள் ஆகக் கூடிய துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தவர் களில் என்னை விட வேறு எவரும் இங்கு இருக்க முடியாது எனத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

வடமாகாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியேற்றுவதில் வடக்கு மாகாணசபை இற்றை வரை துளியளவும் கரிசனை காட்டவில்லை. அவர்களின் மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒரு ஐந்து நிமிடங்களைக் கூட செலவழிக்க அவர்கள் நினைக்கிறார்கள் இல்லை. மாறாக முஸ்லிம்களின் மீள்குடியேற் றத்தைஎந்தளவுக்குத்தடுக்க முடியுமோ அத்தனை விடயங்களையும் செய்கிறார்கள்.

முல்லைத்தீவிலே 3000 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறிய போதும், அவர்களில் 1400 குடும்பங்கள் தங்குவதற்கு இடமின்றி தென்னிலங்கைக்குத் திரும்பி வந்துவிட்டனர்.

ஏனையோர் கொட்டில் களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர். பத்துமுறை காணிக் கச்சேரிகள் இவர்களுக்காக நாடத்தப்பட்ட போதும், இன்னுமே காணிகள் வழங்கப்படாது இழுத்தடிக்கப் படுகின்றது. காணிகள் கொடுபடக் கூடாதென யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன், எனக்கெதிராகவும் கோஷங்களை எழுப்பி, அவர்களின் மனோபாவத்தை வெளிப்படுத்தினார்கள். அதேபோன்று, யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்கு 10,000 முஸ்லிம் குடும்பங்கள் சென்ற போதும், அவர்களில்400 – 500 குடும்பங்களே எஞ்சி வாழ்கின்றனர். காணிப் பிரச்சினையே இதற்கான காரணமாகும். அதுமாத்திரமின்றி கிழக்கிலே ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள ஐந்து கிராம சேவகர் பிரிவுகளை, கிரானுடன் இணைத்துள்ளனர். இவ்வாறான நிலைதான் தற்போதுஇருக்கின்றது.

பெரும்பான்மையினரிடம் இருந்து அதிகாரங்களையும், உரிமைகளையும் கோரும் தமிழ்க் கூட்டமைப்பினர்,மற்றுமொரு சிறுபான்மையினரான முஸ்லிம்களின் உள்ளத்தை வென் றெடுப் பதற்கான ஆக்கபூர்வமான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. குறைந்தது அந்த மக்களுக்கு ஒரு துண்டு நிலத்தைக்கூட வழங்கக் கூடாதுஎன்பதில்வடமாகாண சபை உறுதியாக இருக்கின்றது.

புதிய அரசியலமைப்பானது இந்த நாட்டில் இன்னுமொரு புதுப் பிரச்சினையை தோற்றுவிக்கும் ஒரு தீர்வாக அமைந்து விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். தமிழ் மக்களின் தியாகங்களை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. எனினும், முஸ்லிம்களினது இழப்புக்களையும், அழிவுகளையும் எவரும் குறைத்து மதிப்பிடவேண்டாம் எனத்தாழ்மையாக வேண்டுகிறோம்.

கடந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்டகொடூரங்களினாலேயே, இந்த ஆட்சியைக் கொண்டு வருவதில் நாம் முனைப்புடன் செயற்பட்டோம். எனினும், அந்த ஆட்சிக் காலத்தில் எழுந்த தம்புள்ளை மற்றும் மஹியங்கனை பள்ளிவாசல் விவகாரம், கிரேன்ட் பாஸ் பள்ளிச் சர்ச்சை, ஆகியவை இந்த ஆட்சியிலும் இன்னும் தொடர்கின்றது.

அதேபோன்று, 25 வருடங்களுக்கு முன்னர் அரச அதிபராகப் பதவி வகித்த முஸ்லிம் ஒருவர் புலிகளினால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட பின்னர், இற்றை வரை இந்த சமூகத்திலிருந்து எந்தவொரு முஸ்லிமும் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவில்லை. அதேபோன்று, இலங்கை நிர்வாக சேவையில் தேர்ச்சி பெற்ற முஸ்லிம்கள் பலர் இருந்தும், அமைச்சர்களின் நிரந்தர செயலாளராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படாத குறையே நிலவுகின்றது.

இவ்வாறு நான் பேசுவதனாலேயே என்னை ஓர் இனவாதியாகச் சித்தரிக்கிறார்கள். இதையும் அவ்வாறுதான் எழுதுவார்கள். எனினும், இவ்வாறு நாம்பேசக்கூடிய நிலையை நீங்கள் ஏன் உருவாக்குகின்றீர்கள்?

அதேபோன்று, யுத்தகாலத்தில் காணாமல்போன தமிழ்ச் சகோதரர்களைத்தேடி, அவர்களின் உறவுகள் நடுத்தெருவில் திரிவதை நாங்கள் காண்கிறோம். புலிகள் இயக்கத்திலிருந்து சரணடைந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 12,000 பேர் வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். புலிகளுக்குச் சிற்சில உதவிகளை மேற்கொண்டவர்கள் இன்னும் சிறைகளில் வாடும் நிலையே காணப் படுகின்றது. அரசாங்கம் இவற்றுக்கு சரியானதொரு தீர்வைக் காண வேண்டும்.

நான் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று தேர்தல் திருத்தச் சட்டம், முஸ்லிம் சமூகத்தைப் வெகுவாகப் பாதிக்கும் என அஞ்சுகிறோம். மாகாண சபைத்தேர்தல் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து, விருப்பமில்லாமல் வாக்களிக்கும் நிர்ப்பந்தத்தை எமக்கு ஏற்படுத்தினீர்கள். அதேபோன்று, உள்ளூராட்சித் தேர்தல் திருத்தத்தின் மூலம் முஸ்லிம்கள் சிதறி வாழும் பல பிரதேச ங்களில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கண்டி மாவட்டத்தில் 12,000 முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட மடவளையில் இரண்டு பிரதிநிகள் வரக்கூடிய நிலையே இருக்கின்றது. குளியாப்பிட்டியில் 17,000 முஸ்லிம்களைக் கொண்ட பிரதேசத்தில் ஆக இரண்டு உறுப்பினர்களை மாத்திரமே பெறக்கூடிய வகையில் எல்லை நிர்ணயம் வகுக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் ஒரேயொரு முஸ்லிம் பிரதேச சபையான முசலியில், எல்லை நிர்ணயத்தின் மூலம் பெரிய அநியாயங்களைச் செய்து, அந்தப் பிரதேச முஸ்லிம்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றீர்கள். எதிர்காலத்தில் தேர்தல் முறை மாற்றத்தை ஒரே இரவில் கொண்டுவந்து, சிறுபான்மை சமூகத்துக்கு அநீதி இழைக்க வேண்டாமென உறுதியாக வலியுறுத்துகின்றேன்.

அரசியலமைப்பின்16 (1) உறுப்புரையில் காணப்படும் அடிப்படை உரிமைகளான சமய, கலாசார உரிமைகளில் கைவைக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கின்றேன். ஒருவருக்கு உரிமை மற்றும் நியாயங்களை வழங்குவதற்காக இன்னுமொரு சமூகத்தை மறந்து, கண்ணை மூடிக்கொண்டு எதையும் செய்ய வேண்டாமெனவும் வேண்டிக்கொள்கின்றேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 


Add new comment

Or log in with...