தேர்தல் வழக்கை வாபஸ் பெறாவிடின் அரசியல் போக்கு வேறுபக்கம் திரும்பும் | தினகரன்

தேர்தல் வழக்கை வாபஸ் பெறாவிடின் அரசியல் போக்கு வேறுபக்கம் திரும்பும்

உள்ளூராட்சி சபை தேர்தல்களை மேலும் காலதாமதப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நிறுத்தப்படாவிட்டால் அதனை முறியடிக்க, இணக்கப்பாடு ஏற்படாத தரப்பினருடன் இணைவதற்கும் ஜே.வி.பி தயாராகவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 22ஆம் திகதி வாபஸ் பெறப்படவில்லையென்றால் அரசியல் போக்கு வேறு பக்கமாக திசை திரும்பும் என்பதை ஜனாதிபதியும் அவரது சகாக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் செயலகங்கள் உள்ளிட்ட 24 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு அவசியமான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், சிறு குழுவொன்று தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக தேர்தலை இழுத்தடிப்பதற்கு முயற்சித்துள்ளது.

ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையொன்றை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்த ஆறு மனுதாரர்களுடனும் தொடர்புபட்டவர்கள் பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். ஏன் இவ்வாறு வஞ்சமான நோக்கம் என்றும் கேள்வியெழுப்பினார்.

மக்கள் ஆணைக்கு பயந்து இவ்வாறு செயற்படும் பட்சத்தில் ஜனாதிபதிக்கும் அவரது அணியினருக்கும் வரலாற்றில் கிடைக்கப் போகும் ஸ்தானம் என்னவென்பது இன்றிலிருந்து எழுதப்படும். ஜனாதிபதி பதவி ஆசனத்தில் அமர்ந்த பின்னர் கிடைத்த மக்கள் ஆணையை மறப்பது தான் இதுவரை காலமும் நடந்தேறியிருக்கிறது.

இந்த வரிசையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் 2 வருடங்களிலேயே தமக்கு கிடைத்த மக்கள் ஆணையை மறந்துவிட்டரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

Or log in with...