கமல்ஹாசனுக்கு எதிராக வழக்கு: காவல் ஆணையருக்கு நோட்டீஸ் | தினகரன்

கமல்ஹாசனுக்கு எதிராக வழக்கு: காவல் ஆணையருக்கு நோட்டீஸ்

‘இந்து தீவிரவாதம்’ என்று கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

வாரப் பத்திரிகை ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொடர் எழுதி வருகிறார். கடந்த 8-ம் திகதியிட்ட இதழில், ‘இந்து தீவிரவாதம்’ என்று சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்து தீவிரவாதம் என்று பேசி இந்துக்கள் மனதை கமல்ஹாசன் புண்படுத்திவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால் என் மனு மீது காவல் ஆணையர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

‘இந்து தீவிரவாதம்’ என்று கருத்து தெரிவித்து சமுதாயத்தில் வன்முறையை உருவாக்க கமல்ஹாசன் முயற்சிக்கிறார். இந்துக்களை அவர் தவறாக சித்தரித்துள்ளார். இதனால் இந்துக்கள் மனது பெரிதும் புண்பட்டுள்ளது. எனவே நான் அளித்த புகாரின் அடிப்படையில் கமல்ஹாசன் மற்றும் தொடர் வெளியிடும் வாரப் பத்திரிகை ஆசிரியர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டார். மனுவுக்குப் பதில் மனு தாக்கல் செய்யும்படி மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.


Add new comment

Or log in with...