எதிர்கால நலன்களைக் குழப்பி அற்ப இலாபம் பெற முயற்சி | தினகரன்

எதிர்கால நலன்களைக் குழப்பி அற்ப இலாபம் பெற முயற்சி

நாட்டில் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வரும் தேசியப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வைக் காண்பதோடு நாட்டை சுபீட்சம், மறுமலர்ச்சி மிக்க அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதையும் இலக்காகக் கொண்டு இணக்கப்பாட்டு அரசாங்கம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இவ்விலக்கை அடைந்து கொள்வதற்கு தடைக்கற்களாக அல்லது இடையூறாக .இருக்கின்ற விடயங்களுக்கு நாட்டின் அடிப்படை சட்ட மூலாதாரமாக விளங்கும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பின் ஊடாகத் தீர்வு காணப்தற்கே அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதாவது பல தசாப்தங்களாக நீடித்து வரும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியுள்ள தற்போதைய அரசியல் யாப்பை இன்றைய யுகத்திற்கு ஏற்ப மறுசீரமைத்து புதிய அரசியலமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

இந்நடவடிக்கையின் ஊடாக பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இன நல்லிணக்கம், சக வாழ்வு தலைத்தோங்குவதோடு, நாடும் சுபீட்சம், மறுமலர்ச்சி மிக்க அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லப்படும்.

இவ்வாறான பின்னணி நோக்கம், இலக்குடன் தான் இணக்கப்பாட்டு அரசாங்கம் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரப்பணிப்போடு முன்னெடுத்து வருகின்றது. என்றாலும் தற்போதைய சூழலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அணியினரும் புதிய அரசியலமைப்பானது நாட்டைப் பிளவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி என்று கூறுகின்றனர்.

இது ஆரோக்கியமான கூற்றோ, நடவடிக்கையோ அல்ல. இணக்கப்பாட்டு அரசாங்கம் நாட்டின் சபீட்சத்திற்கும், மறுமலர்ச்சிக்கும் தடையாக உள்ள விடயங்களுக்கு நிலைபேறான தீர்வைக் கண்பதோடு, நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவும் மேற்கொள்ளும் முயற்சிகளைக் குழப்பியடிக்கும் நடவடிக்கையாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான சூழலில் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், “உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எடுத்திருக்கும் நிலைப்பாடு சமூகங்களுக்கிடையிலான குரோதத்திற்கே வழிவகுக்கும்“ என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேநேரம், “தற்போதைய அரசாங்கம் நாட்டைப் பிளவுபடுத்த எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை” என்று தெரிவித்திருக்கும் அவர் “மக்களால் மதிக்கப்படும் சிரேஷ்ட தலைவரான நீங்கள், அரசியலமைப்பு தயாரிப்பு செயற்பாட்டில் பங்குதாரராக வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு, “இச்செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு நல்குவது உங்களது அடிப்படைக் கடமை. அதிலிருந்து நீங்கள் விலகிச் செல்ல முடியாது“ என்பதையும் எதிர்க்கடசித் தலைவர் சம்பந்தன் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இது வரலாற்று முக்கியத்துவம் மிக்க அழைப்பாகும். அந்த அழைப்பு தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி முன்பாக இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி, இந்நாட்டில் இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவியை வகித்தவர்.. அவர் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை நன்கறிந்தவர்.. அச் சவால்களை தோற்றுவித்த காரணிகளையும் அவர் அறியாதவர் அல்லர்.

அதனால் இப்பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வைக் கண்டு நாட்டை சுபீட்சம் மிக்க பாதையில் இட்டுச் செல்வதற்கான முயற்சிகளில் இந்நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்ற ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரைக் கட்சியும் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் ஊடாக ஈடுபட்டிருக்கின்றன. இப்பிரச்சினைகள் இனிமேலும் தொடரக் கூடாது என்பதே அவர்களது ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது. இதுதான் நாட்டை உண்மையாக நேசிப்பவர்களின் எதிர்பார்ப்பாகும்.

அதன் காரணத்தினால் இந்த எதிர்பார்ப்பை அடைந்து கொள்வதையும் நாட்டின் சுபீட்சத்தையும் முன்னிலைப்படுத்தி அற்ப நலன்களுக்கு அப்பால் செயற்படுவது மிகவும் அவசியமானது.

இருந்தும் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தேசியப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணவென முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கையை அரசியலதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுதற்கான ஒரு துருப்பு சீட்டாகப் பாவிக்கலாமென எதிர்பார்க்கக் கூடாது. இப்போது அரசியல் யாப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பதாயின் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை.

ஆனால் இப்போது அவர் முன்னெடுக்கும் இந்நடவடிக்கை இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தவே வழி வகுக்குமேயொழிய இது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியல்ல. இதனை அவர் அறியாதவரும் அல்லர்.

ஆகவே நாட்டின் எதிர்கால சுபீட்சத்தையும், மக்களின் சகவாழ்வு நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது முன்னாள் ஜனாதிபதியினதும், அவரது அணியினரதும் முக்கிய பொறுப்பாகும். இதே பொறுப்பு நாட்டிலுள்ள எல்லா தரப்பினருக்கும் உள்ளது. அதனால் இணக்கப்பாட்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் ஆக்கபூர்வமான இவ்வேலைத்திட்டத்தைக் குழப்பியடித்து அதில் அற்ப இலாபம் தேடிட முயற்சிக்கலாகாது. அது நாட்டை மேலும் பல தசாப்தங்களுக்கு பின்னடைவுக்கே இட்டுச் செல்லவே வழிவகுக்கும்.


Add new comment

Or log in with...