ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய கமல்ஹாசன் ரூ.20 இலட்சம் நிதியுதவி | தினகரன்

ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய கமல்ஹாசன் ரூ.20 இலட்சம் நிதியுதவி

ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் தனது பங்காக ரூ.20 இலட்சம் நிதி வழங்கினார்.

உலகத் தரவரிசையில் 350 ஆண்டுகள் பழமையான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கும் முயற்சி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

‘ஹவார்ட் தமிழ் இருக்கை அமைப்பு’ முன்னெடுத்த இந்த முயற்சியை உலகறியச் செய்யும் பணியை பலரும் செய்து வருகின்றனர். ஹவார்ட்டில் இருக்கை அமைக்க அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் செலுத்தவேண்டிய மொத்த ஆதார நிதி ரூ.39 கோடி. இதில் ரூ.10 கோடியை தமிழக அரசு வழங்கியது.

மொத்த ஆதார நிதியான ரூ.39 கோடியில் ரூ.6 கோடியை (1 மில்லியன் அமெரிக்க டொலர்) அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழக மருத்துவர்களான ஜானகிராமன், திருஞானசம்பந்தம் ஆகிய இருவரும் நன்கொடையாக அளித்தனர்.

ஹவார்ட் தமிழ் இருக்கைக்காக ரூ.30 கோடி சேர்ந்துள்ளது. மேலும் ரூ.10 கோடி தேவை. இதை நன்கொடையாளர்கள் அளிப்பதற்கு 224 நாட்கள் அவகாசம் உள்ளது. இந்நிலையில் இதற்காக பலரும் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது பங்காக ரூ.20 இலட்சத்தை தமிழ் இருக்கைக்காக வழங்கியுள்ளார்.

கமல்ஹாசன் இல்லத்தில் நடந்த நிகழ்வில் இந்த நிதியை வழங்கினார். இதில் கலந்துகொண்ட பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பேசும் போது,''ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதி நல்கைக்காக ஓராண்டுக்கு முன் கமல்ஹாசன் உலகத்தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார். இன்று குரல் கொடுத்தால் மட்டும் போதாது.

பொருள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரூபாய் இருபது இலட்சத்தை நிதி நல்கையாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. 'ஊர் கூடித் தேர் இழுப்போம். தமிழிருக்கைக்குப் பொருள் கொடுப்போம்' என்பது அவர் கருத்து என ஞானசம்பந்தன் கூறினார்.

 


Add new comment

Or log in with...