அரசியல் யாப்பு உருவாக்கத்தில் அரசு உறுதியான நிலைப்பாடு | தினகரன்

அரசியல் யாப்பு உருவாக்கத்தில் அரசு உறுதியான நிலைப்பாடு

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் விடயத்தில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. அரசியலமைப்புச் சபை பல தடவைகள் கூடி பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்பட்டு, விவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இடைக்கால அறிக்கை தொடர்பில் சகல தரப்புகளும் தத்தமது கருத்துகளை முன்வைத்து விவாதித்திருக்கின்றன. புதிய அரசியலமைப்பின் அவசியம், முக்கியத்துவம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.

இதில் முக்கியமான விடயம் கடந்த காலத்தைப் போன்று அரசியலமைப்பு அரசியல் நோக்கம் கொண்டதாகவோ, அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் தேவைக்கேற்றதாகவோ அமையக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டிய நிலை இன்று காணப்படுகின்றது. அதன் பொருட்டே சகல தரப்பினரதும், மக்களினதும் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

நீண்ட கால தூரநோக்குடன் கூடியதாக புதிய அரசியல் யாப்பு அல்லது குடியரசு யாப்பு அமைய வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டை உத்தரவாதப்படுத்திக் கொண்டு இந்த விடயத்தில் பயணிக்க வேண்டும். ஏனெனில் ஆட்சிமாற்றங்களின் போதும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்காகவும் யாப்பில் திருத்தங்களை கொண்டு வருவதானது அத்தகைய அந்த யாப்பின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்துவதாகவே அமைந்து விடும். அரசாங்கம் ஏதாவதொன்றைச் செய்ய நாடுகின்ற போது, அதற்கேதுவாக யாப்பின் மகத்துவத்தை பலவீனப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது.

உதாரணத்துக்கு ஒன்றை இங்கு சுட்டிக்காட்ட முடியும். கடந்த 1978இல் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆட்சியில் பல பின்விளைவுகளை எதிர்கொள்ளும் நிலையே ஏற்பட்டது. எனவேதான் புதிதாக ஒரு அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும் என்ற குரல் எழுப்பப்பட்டது. சிலர் புதியதொன்று அவசியமில்லை, இருப்பதை சில திருத்தங்களுடன் பலமடையச் செய்தால் போதும் என்ற தொனியில் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இப்படி எத்தனை திருத்தங்களைக் கொண்டுவந்த போதிலும், அந்த யாப்பில் காணப்படும் அடிப்படைகள் முரண்பட்டவையாகவே காணப்படலாம். எனவேதான் புதிய யாப்பின் முக்கியத்துவம் உணரப்பட்ட நிலையில், 2015 ஜனாதிபதித் தேர்தலின் போதும், ஓகஸ்டில் நடத்த பாராளுமன்றத் தேர்தலின் போதும் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைய புதிய யாப்பைக் கொண்டுவரும் முயற்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர நாட்டு மக்களும் ஆணை வழங்கியமை இங்கு குறிப்பிடக் கூடியதொன்றாகும்.

இடைக்கால அறிக்கை தொடர்பில் ஆலோசனைகள் முன்வைப்பதற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவின் போது முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகள், அரசியலமைப்புச் சபையில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் சகலதையும் ஒன்றுதிரட்டி அடுத்த கட்ட நகர்வுக்குள் அரசியலமைப்புச் சபை பிரவேசித்துள்ளது. அரசு இது விடயத்தில் எந்தவிதமான அவசரத்தையும் காட்ட முற்படவில்லை. இதற்கான முழு அதிகாரத்தையும் அரசியமைப்புச் சபையிடமே கையளிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பானது கட்சி அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாக அமைய வேண்டுமென்பதில் வேண்டுமென்பதில் அரசு உறுதியாக இருப்பதைக் காணக் கூடியதாகவே உள்ளது. இது ஜனநாயகப் பண்புகள் உள்ளடக்கப்பட்டிருப்பதையே வெளிக்காட்டி நிற்கின்றது. இந்த முயற்சியை வரவேற்க வேண்டும். தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுமானால் அது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதாகவே இருக்க வேண்டுமென புத்திஜீவிகள் கருதுகின்றனர்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் அரசியலமைப்புச் சபையினூடாக யாப்பொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதனை ஜனநாயக அரசியல் பண்பு கொண்ட எவரும் எதிர்க்க முற்படக் கூடாது. சுதந்திரம், இறைமையுடன் கூடிய ஒரு தேசத்துக்கு ஆரோக்கியமான கொள்கையின் அடிப்படையிலான அரசியல் யாப்பே மிக முக்கியமானதாகும்.

இத்தருணத்தில் மற்றொரு முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மிக விரைவில் உள்ளூராட்சித் தேர்தலொன்று நடைபெறவிருக்கின்றது. இந்த உள்ளூராட்சி தேர்தல் காலம் கடந்தே நடக்கவிருக்கின்றது. புதிய தேர்தல்முறையொன்றின் கீழ் இது நடத்தப்படுவதாலும், அதற்குரிய எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டதன் காரணத்தினாலும் தேர்தல்கள் தாமதப்படுத்தப்பட்டன. தேர்தல் நடத்தப்படவிருக்கும் இக்காலகட்டத்தில்தான் புதிய அரசியலமப்புக்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தலின் வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருப்பினும் அது புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கு இடையூறாக அமைந்து விடக்கூடாது என பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியிருக்கின்றார். காலத்தின் கட்டாயமான புதிய அரசியல​ைமப்பு முயற்சி எந்தச் சந்தர்ப்பத்திலும் வைவிடப்படக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

நாட்டில் இறைமை, ஜனநாயகம் என்பன உறுதிபடுத்தப்படக் கூடிய தேசிய கொள்கை அடிப்படையிலான அரசியலமைப்புக்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு கைகோர்த்துச் செயற்பட முன்வர வேண்டும். நாட்டு மக்களின் ஒரே எதிர்பார்ப்பு இதுதான் என்பதை எவரும் மறந்து விடக் கூடாது.


Add new comment

Or log in with...