கண்ணுக்கு தெரியும் எந்த அபிவிருத்தியும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை | தினகரன்

கண்ணுக்கு தெரியும் எந்த அபிவிருத்தியும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை

சபையில் மஹிந்த

இந்த ஆட்சி ஏற்படுத்தியுள்ள கடன் பொறியிலிருந்து மீள்வது கஷ்டமாகும்.எமது ஆட்சியில் நாம் கடன் செலுத்த முடியாதிருப்பதாக அழவில்லை. உலக நிதி நிறுவனங்களின் சொற்படி ஆடவில்லை.மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களை குறைக்காது பொருளாதாரத்தை கட்டியெழுப்பியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று தெரிவித்தார்

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

வரி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அது மேலும் உயரும். சர்வதேச நிதி நிறுவனம் வொஷிங்டனிலிருந்து இலங்கையை கீழ்ப்படிவான பணியாளாக மாற்றியிருப்பது குறித்து மகிழ்ச்சி அடையும்.

2014 இல் எமது ஆட்சியில் செலுத்தியதை விட இரண்டு மடங்கு அதிக வரி 2018 இல் செலுத்த நேரிடும். அரச சேவைகளுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பணத்தை சூறையாடும் அரசாங்கம் அதிகரிக்கும் வரி ஊடாக அரசாங்கம் என்ன அபிவிருத்தி செய்துள்ளது. ஒரு விமான நிலையம், துறைமுகம், தாமரை தடாகம் என எதனை செய்தது. ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. பாரிய மோசடி,வீண்விரயம் என்பவற்றிலிருந்து நாட்டை மீட்க எந்த திட்டமும் முன்வைக்கப்பட வில்லை.

நாட்டு தலைவர்கள் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இதனால் நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படாது.அரச சொத்துக்களை விற்பதற்கு எதிராக போராடுவோர் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

எமது நாட்டு காணியை நினைத்தவாறு வெளிநாட்டவருக்கு வழங்குவதற்கான அனுமதி வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரச வளங்களை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டின் சொத்துக்கள் எமது நாட்டுக்கு மக்களுக்கே சொந்தமானவை. 5 வருடங்களுக்கு ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களுக்கு அவற்றை விற்கவோ குத்தகைக்கு வழங்கவோ முடியாது.

நாட்டில் கடன் பொறியை ஏற்படுத்தியது யார்? நவீன உலகில் எந்த நாடும் நிறுவனமும் கிடையாது. கடன் பெறுவதை விட கடன் செலுத்தும் இயலுமை தான் பிரதானமானது.

எமது ஆட்சியில் யுத்தத்திற்காகவே கூடுதல் கடன் பெறப்பட்டது. 2009 முதல் பாரிய அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.யுத்ததின் பின் வடக்கு கிழக்கில் பாரிய உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

எமது நாட்டை கடன் பொறியில் சிக்கவைத்தது சிறிசேன அரசாங்கமாகும் இந்த அரசாங்கம் கடந்த இரண்டரை வருடத்தில் பெற்ற கடனானது,​ 2009 முதல் 2014 வரை பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்ட 5 வருட காலத்தில் நாம் பெற்ற கடனில் 86 வீதமாகும்.இந்த ஆட்சியில் கண்ணுக்குத் தெரியும் எந்த அபிவிருத்தியும் நடக்கவில்லை.

2010 முதல் 2014 வரை பொருளாதார வளர்ச்சி வீதம் 6.8 வீதமாக பேணப்பட்டது.2016 இல் 2.6 வீதமே காணப்பட்டாலும் அரசாங்கம் தவறான புள்ளிவிபரங்களை முன்வைக்கிறது.

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு பெருமளவு குறைந்துள்ளது. 2020 இல் 2014 இருந்த அளவே வெளிநாட்டு கையிருப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆட்சி ஏற்படுத்தியுள்ள கடன் பொறியில் இருந்து மீள்வது கஷ்டமாகும்.எமது ஆட்சியில் நாம் கடன் செலுத்த முடியாதிருப்பதாக அழவில்லை. உலக நிதி நிறுவனங்களின் சொற்படி ஆடவில்லை.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

Or log in with...