உள்ளூராட்சி சபைகள் எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக வழக்குத் தாக்கல் | தினகரன்

உள்ளூராட்சி சபைகள் எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக வழக்குத் தாக்கல்

உள்ளூராட்சி சபைகளின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிமன்றம் எதிர்வரும் 22ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.

மேற்படி வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளதுடன் அந்த வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என கட்டளை பிறப்பிக்கக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில் உள்ளூராட்சி சபை மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கண்டி, மாத்தறை மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு வாக்காளர்கள் மேற்படி வர்த்தமானிக்கு எதிரான மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான எல்லை மீள் நிர்ணய குழுவில் முன்னைய பரிந்துரைகளுக்கு முரணாக தற்போதைய உள்ளூராட்சி சபை அமைச்சர் நியமித்த உப குழுவின் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானியையே செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவின் இடை மனுதாரராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆஜராகுவதற்கு நேற்று நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய மேற்படி வழக்கு எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (ஸ)

 லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...