Thursday, March 28, 2024
Home » காசாவுக்காக 120 நாடுகளுடன் இணைந்து வாக்களித்த இலங்கை

காசாவுக்காக 120 நாடுகளுடன் இணைந்து வாக்களித்த இலங்கை

by Rizwan Segu Mohideen
October 30, 2023 1:31 pm 0 comment

காசாவில் உடனடி போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. சபையில் ‘காசாவில் உடனடியானதும், நீடித்து நிலைக்கக்கூடியதும் நிலைபேறானதுமான மனிதாபிமான போர்நிறுத்தம்’ என்ற தொனிப்பொருளில் ஜோர்தான் கொண்டு இப்பிரேரணைக்கு இலங்கை உட்பட 120 நாடுகள் ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றியுள்ளன. இப்பிரேரணைக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 14 நாடுகள் எதிராக வாக்களித்ததோடு 45 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை 27 ஆம் திகதி ஐ.நா. பொதுச்சபைக்கு கொண்டுவரப்பட்ட இப்பிரேரணை 120 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை உலகின் விஷேட அவதானத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஏனெனில் இம்மாதம் (ஒக்டோபர்) 07 ஆம் திகதி ஹமாஸ், இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலோடு ஆரம்பமான யுத்தத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யுத்தத்தை உடனடியாக நிறுத்தி அமைதி வழிக்குத் திரும்புமாறு உலக நாடுகளின் தலைவர்கள் கோரி வருகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மன்னாரில் நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவில் உரையாற்றும் ​போது, ‘இஸ்ரேல்_-ஹமாஸ் மோதலினால் பலஸ்தீனின் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது. மோதல்களை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை பூரண ஆதரவை வழங்கும். அந்த மக்களின் துயரத்தை நாங்கள் அங்கீகரிக்க முடியாது. அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உணவு எகிப்திலிருந்து வழங்கப்படுகின்றது. இஸ்ரேல் பகுதியில் இருந்தும் உணவு வழங்கப்பட வேண்டும். மேலும் தண்ணீர் கொடுக்க வேண்டும். இப்போராட்டத்தில் சாதாரண பலஸ்தீன மக்கள் பலியாகிவிடக் கூடாது. எனவே அதனை தீர்க்க எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மற்ற நாடுகளும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. குறிப்பாக இப்பிரச்சினையைத் தீர்த்து அந்தப் பிரதேசங்களில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளரின் செயற்பாடுகளுக்கு, எமது பூரண ஆதரவை வழங்குவோம். பலஸ்தீன் என்றொரு நாடு உருவாக வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு இந்த யுத்தத்தை நிறுத்தக் கோரி உலகின் பல பகுதிகளிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெற்ற வண்ணமுள்ளன. இவ்வாறான நிலையில் ரஷ்யா, 15 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ. நா. பாதுகாப்பு சபையில் ‘மனிதாபிமான யுத்தநிறுத்தம், அனைத்து பணயக் கைதிகளும் விடுவித்தல், நிவாரண பொருட்களை வழங்குதல், மக்களின் பாதுகாப்பான வெளியேற்றம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த 16 ஆம் திகதி பிரேரணையொன்றைக் கொண்டு வந்த போதிலும் நிறைவேற்றப்படவில்லை, அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துப் கொள்ள உரிமை கொண்டுள்ளது’ எனக்குறிப்பிட்டு கடந்த 18 ஆம் திகதி கொண்டு வந்த பிரேரணையை சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்லுபடியற்றதாக்கின. அதே தினம் பிரேசில் ‘காசாவில் மனிதாபிமான யுத்த நிறுத்தம்’ என்ற தொனிப்பொருளில் கொண்டு வந்த பிரேரணையை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்லுபடியற்றதாக்கியது.

இவ்வாறான சூழலில்தான் ஐ.நா. பொதுச்சபையில் ஜோர்தான் கொண்டு வந்த தீர்மானம் இலங்கை உட்பட120 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இப்பிரேரணைக்கு ஆதரவளித்ததன் ஊடாக பலஸ்தீன் விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை, இவ்விவகாரத்தில் உலக நாடுகளுடன் இணைந்திருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

அதேநேரம் இஸ்ரேல் – ஹமாஸ்_ யுத்தம் ஆரம்பமானதும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் எனும் இரு நாட்டுக் கொள்கைக்கான இலங்கையின் நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடாத்திய தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு கடந்த 13 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்து சமுத்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான Geopolitical Cartographer ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, ‘இஸ்ரேல் – ஹமாஸ் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கட்சியாக விளங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு நேரில் சென்று பலஸ்தீன மக்களுக்கான தமது ஒத்துழைப்பை கடந்த 16 ஆம் திகதி பலஸ்தீன தூதுவரிடம் தெரிவித்தார். அத்தோடு பலஸ்தீன மக்கள் முகம்கொடுத்துள்ள நெருக்கடிகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதமும் கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

கடந்த ஏழு எட்டு தசாப்தங்களாக நீடித்துவரும் பலஸ்தீன்_- இஸ்ரேல் பிரச்சினைக்கு இரு நாட்டுக் கொள்கையே சரியான தீர்வு என்ற கொள்கையை இலங்கை கடைப்பிடித்து வருகின்றது.

அந்த வகையில் காசா யுத்த நிறுத்தம் குறித்த ஜோர்தானின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து உரையாற்றிய இலங்கையின் ஐ. நா.வுக்கான நிரந்தர பிரதிநிதி மொஹான் பீரிஸ், ‘யுத்தத்தை நிறுத்துதல், பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல் ஆகியவை இந்த காலத்தின் முக்கிய தேவையாகும். ஜோர்தான் முன்வைத்த தீர்மானத்தின் சாராம்சம் இந்த தேவைகளை போதுமான அளவு கொண்டுள்ளது. அதேநேரம் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் என்பன மதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இது வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலில் மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் அதன் வெளிப்பாடுகளையும் இலங்கை கண்டிக்கிறது. ஆயினும், ஒக்டோபர் 7 ஆம் திகதி இத்தாக்குதல் மற்றும் அதன் பின்னர் வன்முறை அதிகரித்துள்ளமை குறித்து ஜோர்தானிய தீர்மானம் கவனத்தில் கொண்டுள்ளது. அதனால் பலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிரான அனைத்து வன்முறைச் செயல்களையும் அது கண்டிக்கிறது, இதில் அனைத்து பயங்கரவாத செயல்கள் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல்கள், அடங்லாக ஆத்திரமூட்டும் அனைத்து செயல்களும் அழிவுகளும் தூண்டுதல்களும் அடங்கும்.

அதனால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து குடிமக்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க அழைப்பு விடுக்கிறது. சர்வதேச சட்டத்திற்கு இணங்க அவர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் மனிதப் பண்புகளை மதித்து பேணுமாறு கோருகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே பலஸ்தீன் – இஸ்ரேல் விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள இலங்கை உலக நாடுகளுடன் இணைந்து செயற்படுவதையும் ஐ.நா. சபையிலும் வெளிப்படுத்தியுள்ளது. அதனால் அமைதி சமாதானத்தை உண்மையாக விரும்பும் ஐ.நா. உட்பட நாடுகளும் தலைவர்களும் விடுக்கும் அழைப்பும் கோரிக்கையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். பலஸ்தீனில் அமைதி, சமாதானம் உருவாக வேண்டும். அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அதுவே அனைத்து மக்களதும் எதிர்பார்ப்பாகும்.

மர்லின் மரிக்கார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT