Friday, March 29, 2024
Home » காசாவில் ‘நீண்ட, கடினமான’ 2ஆம் கட்ட போரை ஆரம்பித்தது இஸ்ரேல்

காசாவில் ‘நீண்ட, கடினமான’ 2ஆம் கட்ட போரை ஆரம்பித்தது இஸ்ரேல்

- இஸ்ரேலிய படையுடன் ஹமாஸ் தரைவழி மோதல்: சமூக ஒழுங்கு சீர்குலைவு

by Rizwan Segu Mohideen
October 30, 2023 8:19 am 0 comment

காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் தரைவழி நடவடிக்கையை முன்னெடுத்திருக்கும் நிலையில் மூன்று வாரங்களாக நீடிக்கும் இந்தப் போரில் அடுத்த கட்டத்தை எட்டி இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து சரமாரிமாக குண்டுகளை வீசி அதன் துருப்புகள் தரைவழியாக முன்னேற முயன்று வரும் நிலையில் அங்குள்ள குடியிருப்பாளர்கள் இணையதளம் செயலிழந்து முழுமையான தொடர்பாடல் துண்டிப்பை எதிர்கொண்டுள்ளனர். தரைவழி நடவடிக்கையை விரிவுபடுத்தப்போவதாக இஸ்ரேலிய இராணுவ தளபதிகள் அறிவித்துள்ளனர்.

தொடர்பாடல்கள் முடக்கப்பட்டதால் வான் தாக்குதலுக்கு இலக்கான மக்களுக்கு உதவி கோரி அழைக்க முடியாத சூழலில் மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. எவ்வாறாயினும் நேற்றுக் காலை காசாவில் தொலைபேசி மற்றும் இணையதளத் தொடர்புகள் பகுதி அளவு வழமைக்கு திரும்பின.

இஸ்ரேலின் இந்தப் போர் நடவடிக்கை ‘மிக நீண்டதும் கடினமானதுமாக’ அமையும் என்று எதிர்பார்ப்பதாக நெதன்யாகு கூறியபோதும் தற்போதைய போர் நடவடிக்கை காசா மீதான தரைவழி தாக்குதலா என்பது பற்றி அவர் உறுதியாகக் கூறத் தவறினார். எனினும் ஒட்டுமொத்த தலைவழி தாக்குதல் ஒன்றை நிறுத்தி வைக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உதவியாளர்கள் இஸ்ரேலை வலியுறுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் இதற்கு முன்னரும் இரவு நேரத்தில் காசாவுக்குள் இரு முறை தரைவழியாக நுழைந்தபோதும் அந்த முயற்சிகள் சில மணி நேரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதாவே இருந்தன. இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 200க்கும் அதிகமான பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளது.

“இது போரின் இரண்டாவது கட்டமாகும். அதன் இலக்கு தெளிவானது. அது ஹமாஸின் அட்சி மற்றும் இராணுவ திறனை அழித்து பணயக்கைதிகளை அழைத்து வருவதாகும்” என்று நேற்று முன்தினம் (28) செய்தியாளர்களிடம் நெதன்யாகு தெரிவித்தார்.

“நாம் இப்போது ஆரம்பித்தது மாத்திரம் தான். எதிரிகளை தரைக்கு மேலாலும் தரைக்குக் கீழாலும் அழித்தொழிப்போம்” என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.

இந்நிலையில் காசா பகுதியின் வடமேற்கில் இஸ்ரேலிய படையினருடன் மோதலில் ஈடுபட்டதாக அல் குத்ஸ் படையினர் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் அந்தப் பலஸ்தீன போராட்டக் குழு தெரிவித்துள்ளது. ஊடுருவும் இஸ்ரேலிய இராணுவத்தின் மீது இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் மோட்டார் ஷெல்கொண்டு தாக்குதல் நடத்தியதாக அல் குத்ஸ் படை கூறியது.

முன்னதாக இரு படையினர் காயமடைந்ததாக குறிப்பிட்ட இஸ்ரேல் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறியது.

ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான இஸதீன் அல் கஸ்ஸாம் படையும் காசாவுக்குள் இஸ்ரேலிய படைகளுடன் சண்டையிட்டு வரவதாக தெரிவித்துள்ளது.

காசா மீதான முற்றுகையை இறுக்கி அங்கு மூன்று வாரங்களுக்கு மேலாக இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. மேற்குலக நாடுகள் இஸ்ரேலின் தற்பாதுகாப்பை காரணம் காட்டி அதற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றபோதும் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அனுமதிக்குமாறு சர்வதேச அளவில் அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன.

சீர்குலையும் சமூக ஒழுங்கு

காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் அங்கிருக்கும் ஐக்கிய நாடுகள் பலஸ்தீன அகதிகள் நிறுவனத்தின் களஞ்சியங்கள் மற்றும் விநியோக மையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கோதுமை மற்றும் அடிப்படை பொருட்களை எடுத்திருப்பதான அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

“காசாவில் கடுமையான முற்றுகை மற்றும் மூன்று வாரங்கள் நீடிக்கும் போரினால் சிவில் ஒழுங்கு சீர்குலைவதற்கான அபாயகரமாக சமிக்ஞையை இது காட்டுகிறது” அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

காசாவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகள் செல்லவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் காசாவின் எகிப்துக்கான ரபா எல்லை வழியாக இதுவரை நூறுக்கும் குறைவான உதவி வாகனங்களே அனுமதிக்கப்பட்டுள்ளன.

2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் உலகின் அதிக சனநெரிசல் கொண்ட பகுதிகளில் ஒன்றான காசாவின் தேவை மிக அதிகமாக அருப்பதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. “மக்கள் பயம், விரக்தி மற்றும் அவநம்பிக்கையில் உள்ளனர்.

தொலைபேசிகள் மற்றும் இணையதள தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் மக்களிடையே பதற்றம் மற்றும் பயம் அதிகரித்துள்ளது” என்று ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டது.

காசாவில் வீடுகள், கட்டடங்கள் அனைத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டு வரும் நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 8000ஐ தாண்டியுள்ளது. நேற்றுக் காலை காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு அருகில் குண்டு விழுந்தது. இதனால் காசா நகரில் இருக்கும் ஷிபா மருத்துவமனைக்குச் செல்லும் வீதிகள் அழிக்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்ததாக ஏ.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

“மருத்துவமனைக்குச் செல்வது மேலும் கடினமாகி இருக்கிறது” என்று அங்கு அடைக்கலம் பெற்றிருக்கும் மஹ்மூத் அல் சவாஹ் தெரிவித்தார். இது இந்தப் பகுதியை துண்டிப்பதற்கான நோக்கம் போன்று தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அல் குத்ஸ் மருத்துவமனையில் இருப்பவர்களை அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டிருப்பதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனை மீது குண்டு வீசப்படக்கூடும் இன்று இஸ்ரேலிய அறிவிப்பில் கூறப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது தொடக்கம் குறைந்தது 30 மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் மூடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் எரிபொருள் தீர்ந்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பல மருத்துவமனைகள் பகுதி அளவு மூடப்பட்டுள்ளன. நாசர் மருத்துவனையில் அவசர சிகிச்சை பிரிவு மாத்திரமே இயங்கி வருகிறது.

காசா குடியிருப்பாளர்களுக்கு சனிக்கிழமை வானில் இருந்து துண்டுப் பிரசுரத்தை வீசிய இஸ்ரேலிய விமானங்கள் வடக்குப் பகுதி தற்போது போர்க்களமாக மாறி இருப்பதால் மக்கள் அங்கிருந்து உடன் வெளியேற வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

மக்கள் தெற்கை நோக்கி சென்ற அவர்களுக்கு நீர், உணவு மற்றும் மருந்தனை பெற முடியும் என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் டானியல் ஹகரி தெரிவித்துள்ளார்.

காசாவில் டீசல் மற்றும் பெட்ரோல் கிட்டத்தட்ட தீர்ந்துள்ள நிலையில் பெரும்பாலும் கழுதை வண்டிகளே போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. “இங்கே எந்த கார் வண்டியும் இயங்கவில்லை. எரிபொருள் இல்லாததால் நாம் போக்குவரத்துக்கு கழுதை வண்டிகளையே பயன்படுத்துகிறோம்” என்று கழுதை வண்டி ஓட்டுநரான ரபத் நஜ்ஜார் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலிய சுற்றிவளைப்புகளில் மேலும் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதானல் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.

ஈரான் எச்சரிக்கை

காசாவுக்கு இஸ்ரேல் துருப்புகளை அனுப்பி இருப்பது இந்தப் போர் மத்திய கிழக்கெங்கும் பரவும் அச்சுறுத்தலை அதிகரித்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் லெபனான் எல்லையில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு புதிய போர் முனை ஒன்றை ஆரம்பிக்கும் அச்சுறுத்தல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இந்தப் போரில் இணைய வேண்டாம் என்று இஸ்ரேலிய எதிரிகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கையை விடுத்து வருவதோடு இஸ்ரேலுக்கு நெருக்கமாக கிழக்கு மத்தியதரைக் கடலில் இரு விமானதாங்கி கப்பல்களை நிறுத்தியுள்ளது.

தெற்கு லெபனானில் கடந்த சனியன்று இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களில் ஐ.நா அமைதிகாக்கு வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் இருக்கும் அமைதிகாக்கு படைகளின் தலைமையகத்தின் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் லெபனான் எல்லையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றபோதும் அது முழு அளவான ஒரு மோதலாக தீவிரம் அடையவில்லை.

இந்நிலையில், இஸ்ரேலின் குற்றங்கள் சிவப்புக் கோட்டை தாண்டிவிட்டதாகவும் அதற்கு எதிராக அனைவரையும் செயற்படத் தூண்டுவதாகவும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி, எக்ஸ் சமூகதளத்தில் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

“அமெரிக்கா ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கேட்கும் அதேநேரம் இஸ்ரேலுக்கு அவர்கள் பரந்த அளவில் ஆதரவு வழங்கிறார்கள். அமெரிக்கா எதிர்ப்பாளர்களுக்கு செய்தி அனுப்புகின்றபோதும் போர்க்களத்தில் தெளிவான பதில் ஒன்று வழங்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்தியம் எங்கும் இஸ்ரேல் மற்றும் அதன் மேற்குல கூட்டாளிகள் மீது கோபம் திரும்பியுள்ளது. இதில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை வைத்திருக்கும் நாடுகளும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

ஸ்தன்பூலில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்க பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் துருக்கிய ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் சனிக்கிழமை உரையாற்றினார். அதில் “மேற்குலமே காசா மீதான படுகொலைகளின் பிரதான சூத்திரதாரி” என்று அவர் குற்றம்சாட்டினார்.

லண்டன், பிரான்ஸ், அமெரிக்க, இந்தியாவில் இடம்பெற்ற பலஸ்தீன ஆதரவு பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஐக்கிய நாடுகளின் அழைப்பை அடுத்து காசா விவகாரம் குறித்து பேசுவதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபை இன்று (30) மீண்டும் கூடவுள்ளது. எனினும் இந்த விவகாரம் தொடர்பில் அண்மைய நாட்களில் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட நான்கு தீர்மானங்கள் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

காசாவின் நிலைமை தொடர்ந்து போசமாகி வருவதாகவும் இந்தப் பயங்கரத்தை முடிவுக்குக் கொண்டுவர போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT