உயிரிழப்பு 450 ஆக அதிகரிப்பு: மீட்பு பணிகள் விரைவாக முடிவு | தினகரன்

உயிரிழப்பு 450 ஆக அதிகரிப்பு: மீட்பு பணிகள் விரைவாக முடிவு

 

ஈரானில் பூகம்பம் தாக்கிய பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர பூகம்பத்தில் குறைந்தது 450 பேர் பலியானதோடு ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு மற்றும் நீர் தேவைப்படுவதோடு அவர்கள் குளிர் காலநிலையால் போராடி வருகின்றனர்.

ஈராக் நாட்டு எல்லையை ஒட்டிய மலைப்பிரதேச மாகாணமான கெர்மன்ஷாஹ்வில் மக்கள் இரவு வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே ஞாயிறு இரவு 7.3 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. ஈரானின் 14 மாகாணங்கள் பூகம்பத்தால் பாதிப்புற்றுள்ளன.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கெர்மன்ஷாஹ் பகுதிக்கு நேற்று காலை விஜயம் மேற்கொண்ட ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி, கூடிய விரைவில் பிரச்சினைகளுக்கு தீர்வு தர அரசு முயற்சிப்பதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் கூடியிருப்பதோடு மேலும் பலர் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சிறு அதிர்வுகளுக்கு பயந்து இரண்டாவது நாள் இரவாகவும் வெட்ட வெளி பகுதிகளில் தங்கியுள்ளனர். இந்த பூகம்பத்திற்கு பின் சுமார் 193 சிறு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இந்த பூகம்பத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சர்போல் இ சஹப்பைச் சேர்ந்த வீடற்ற இளம் பெண் ஒருவர், போதிய கூடாரங்கள் இல்லாததால் குளிருக்கு மத்தியில் தனது குடும்பம் வெட்ட வெளியில் இரவில் தங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

“எமக்கு அனைத்து உதவிகளும் தேவையாக உள்ளது. அதிகாரிகள் அதனை விரைவுபடுத்த வேண்டும்” என்று அந்த பெண் அரச தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

பூகம்பத்தில் இடிந்த கட்டடங்களில் உயிர்தப்பியவர்களை தேடும் நடவடிக்கையில் மிட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை அரச தொலைக்காட்சி காட்டியது. எனினும் தொடர்ந்து உயிர்தப்பியோரை கண்டுமிப்பதற்கு மிகக் குறைவான சாத்தியமே இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கெர்மன்ஷாஹ் மாகாணத்தின் மீட்பு பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக ஈரான் அவசர மருத்துவ சேவை பிரிவின் தலைவர் பிர் ஹொஸைன் கொலிவாண்ட் அரச தொலைக்காட்சியில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லாஹ் அலி கமெனெய் தனது அனுதாபத்தை வெளியிட்டதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து அரச நிறுவனங்களும் அவசர உதவிகளை வழங்க வலியுறுத்தினார்.

காயமுற்ற பலரும் அருகாமை மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பலரும் தலைநகர் டெஹ்ரான் மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஈரானின் செம்பிறை சங்கம் தற்காலிக முகாம்களை அமைத்துள்ளது. எனினும் நீர் மற்றும் மின்சாரத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதோடு வீதிகள் தடைப்பட்டிருப்பதால் உதவி பொருட்கள் பயணிப்பதிலும் சிரமம் உள்ளது.

பூகம்பம் தாக்கிய பகுதியில் உள்ள 30,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்திருப்பதோடு குறைந்தது இரு கிராமங்கள் முற்றாக அழிந்திருப்பதாக ஈரான் அரசு குறிப்பிட்டுள்ளது.

ஈரானில் பூகம்பத்தால் 430 பேர் பலியானதாக ஈரானிய அரச செய்திச் சேவை நேற்று குறிப்பிட்டது. இதில் மக்கள் அடர்த்தி குறைந்த ஈராக் எல்லையை ஒட்டிய பகுதியே அதிகம் பாதிக்கப்பட்டது. இந்த பூகம்பத்தில் ஈராக்கில் ஒன்பது பேர் உயிரிழந்து மேலும் பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். 


Add new comment

Or log in with...