700 கிலோ பாரை மீன்கள் கடற்படையால் பறிமுதல் | தினகரன்

700 கிலோ பாரை மீன்கள் கடற்படையால் பறிமுதல்

* “டைனமைட்” உபயோகித்து மீன் பிடித்த குற்றச்சாட்டு

* மன்னாரில் கடற்படை - மீனவர் முறுகல்

இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய மீனவரின் பல இலட்சம் ரூபா பெறுமதியான பாரை மீன்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பள்ளிமுனை கடற்கரையில் வைத்து மீனவரை இடைமறித்த படையினர், அவரிடமிருந்து மீன்களை பறிமுதல் செய்ததுடன், மன்னார் மாவட்ட  கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் மீன்களை ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:

மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் நேற்று முன்தினம் (13) மீன் பிடிப்பதற்காக பள்ளிமுனை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் மீனவர் நேற்று செவ்வாய்க்கிழமை (14) காலை இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு சற்று தொலைவில் சுருக்கு வலை ய பயன்படுத்தி மீன் பிடித்துள்ளார்.

இதன் போது சுமார் 700 கிலோ பாரை மீன்கள் வலையில் பட்டுள்ளன.

இதையடுத்து பள்ளிமுனை கடற்கரையிலிருந்த கடற்படையினர் மீனவரின் படகிலுள்ள மீன்களை கரைக்கு கொண்டு செல்ல அனுமதிக்காது, டைனமைட் வெடி பொருட்களை பயன்படுத்தியே மீன்கள் பிடிக்கப்பட்டதாக , மீனவரிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் சுருக்கு வலையை பயன்படுத்தியே மீன்களை பிடித்ததாக மீனவர்கள் கடற்படையினரிடம் தெரிவித்ததோடு, சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் முன் மீன்களை வெட்டியும் காண்பித்தனர்.

எனினும் படையினர் இதனை ஏற்க மறுத்ததுடன் மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். பின்னர் பல இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 700 கிலோ பாரை மீன்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் படையினர் ஒப்படைத்தனர்.

சட்ட ரீதியான முறையில் மீன் பிடிக்கின்ற போதும்,தாங்கள் தடை செய்யப்பட்ட டைனமெட் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கடற்படையினர் தம்மீது போலி முறைப்பாடுகளை பதிவு செய்வதாகவும் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடற்படையினரின் இச் செயற்பாடுகளினால் தமது தொழில் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதோடு,தமது அன்றாட வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி மாவட்ட கடற்தொழில் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் என்.மெராண்டாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,,,

பள்ளிமுனை கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட டைனமைட் வெடிபொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சுமார் 700 கிலோ மீன்களை பள்ளிமுனை கடற்படையினர் மீட்டு மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மீனவர்களிடம் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு பின் நீதிமன்றத்தில் மீன்களின் மாதிரிகள் ஒப்படைக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

எஸ்.றொசேரியன் லெம்பேட்


Add new comment

Or log in with...