பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படுமென அறிந்தும் அதிகாரிகள் அசமந்தம் | தினகரன்

பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படுமென அறிந்தும் அதிகாரிகள் அசமந்தம்

*காரணம் கண்டறிந்தது அமைச்சரவை உபகுழு

*மூவரடங்கிய குழு ஜனாதிபதியிடம் அறிக்ைக கையளிப்பு

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமென அறிந்திருந்தும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் போதுமான பெற்றோலை கையிருப்பில் வைத்திருக்க தவறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

"நாளாந்தம் 2,000 மெற்றிக் தொன் பெற்றோல் தேவைப்படுமிடத்து சராசரியாக நாளொன்றுக்கு 1,20 000 மெற்றிக் தொன் பெற்றோலைக் களஞ்சியப்படுத்தி வைக்கும் வசதி இலங்கைக்கு உண்டு" என இக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அனைத்து திட்டங்களும் புறக்கணிக்க ப்பட்டுள்ளதுடன் கையிருப்புக்களை வைத்திருக்க அதிகாரிகள் தவறியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எரிபொருள் கையிருப்பு பற்றிய எந்தவொரு விவரங்களும் அதிகாரிகளிடம் இருக்காததுடன் எதிர்கொள்ளவுள்ள தட்டுப்பாடு தொடர்பில் மேலதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். "நாங்கள் கிரெபிக்கின் உதவியுடன் நடந்தவற்றை ஆராய்ந்தோம். இதன்போது ஒக்டோபர் 17 ஆம் திகதி எரிபொருளுக்கு தட்டுப்பாடு இடம்பெறும் என்பதை அதிகாரிகள் அறிந்து வைத்திருந்தும் அது பற்றி எவருமே முகாமைத்துவத்துக்கு அறிவித்திருக்கவில்லை." என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை, திட்டமிட்ட சதி இடம்பெற்றிருக்குமா? என்பதை அறிவதற்காக பக்கச்சார்பற்ற முறையில் தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார். "100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நான் பெற்றோலியம் அமைச்சராக இருந்தபோது 60 ஆயிரம் மெற்றிகதொன் பெற்றொல் கையிருப்பை 90 ஆயிரம் மெற்றிக்தொன்னாக அதிகரித்தேன்.

அத்துடன் லங்கா இந்தியா எண்ணெய்க் கம்பனி 15 ஆயிரம் மெற்றிக்தொன் வரை பெற்றோலைக் களஞ்சியப்படுத்தும் வசதியைக் கொண்டுள்ளது." என்றும் அவர் தெரிவித்தார். "அச்சந்தர்ப்பத்தில் அடுத்த கப்பல் வரும் வரை கையிருப்பு குறைவடைவதை நாம் நன்கு அறிந்து வைத்திருந்தோம்." விலைமனுக்கோரி பெற்றோல் கப்பலை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆகக்குறைந்தது 21 நாட்கள் தேவைப்படும்.

எனினும் கையிருப்பு குறைவடைவது பற்றி மேலதிகாரிகள் ஒக்டோபர் 17 ஆம் திகதியன்றே அறிவிக்கப்பட்டுள்ளனர். விசேட கருத்திட்டத்துக்கான அமைச்சர் டொக்டர்.சரத் அமுனுகமவால் கைச்சாத்திடப்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின்போது கையளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கடந்த வாரம் நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்களான டொக்டர்.சரத் அமுனுகம, சம்பிக்க ரணவக்க மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான தட்டுப்பாடு இடம்பெறாமல் இருக்க வேண்டுமாயின் சிறந்த களஞ்சிய வசதி அவசியமென்றும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நமது நிருபர்


Add new comment

Or log in with...