ஆட்கடத்தல் வர்த்தகத்தை தடுக்க விசேட பொறிமுறை உருவாக்கம் | தினகரன்

ஆட்கடத்தல் வர்த்தகத்தை தடுக்க விசேட பொறிமுறை உருவாக்கம்

இன்டர்போலுடன் இணைந்து செயற்படவும் திட்டம்

இலங்கையின் ஆட்கடத்தல் வர்த்தகத்தை தடுப்பது மற்றும் எல்லைப் பாதுகாப்புத் தொடர்பில் சட்டம் தயாரிக்கப்படும் நிலையில் அதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவதாக, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது ஆட்கடத்தல் வர்த்தகத்தை தடுத்தல், மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாகவே விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்குப் பலமான சட்டங்கள் அவசியமெனவும் அது பலவீனமாக அமைந்தால் மேற்படி நடவடிக்கைகளை காத்திரமாக முன்னெடுக்க முடியாது போகும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்கடத்தல் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட மாநாடொன்று நேற்று (14) கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது. அந்த மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சாகல ரத்னாயக்க:

ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அதற்கு தற்போதுள்ள சட்டங்களையும், மேலதிகமாக புதிய சட்டங்களை தேவையான இடங்களில் மேற்கொள்வதும் அவசியமாகவுள்ளது. அத்தகைய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவுஸ்திரேலியாவின் மூலோபாய கொள்கை நிறுவனம் தற்போது இலங்கையில் ஆட்கடத்தல் வர்த்தகம் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. அதன் மூலம் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன் கீழ் மேற்கு மற்றும் வடமேல் கடற் பரப்பில் இடம்பெறும் வர்த்தகம் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. அத்தகைய வர்த்தகர்கள் மேற்கொள்ளும் ஊழல்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன. உதாரணமாக வெளிநாட்டு கடவுச்சீட்டை திருட்டுத்தனமாக தயாரித்தல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்குதல் போன்ற வற்றை குறிப்பிட முடியும். இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்ப்பதற்கு விரிவான நடைமுறையொன்று அவசியமாக உள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுடன் அண்மையில் இது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதற்கிணங்க அந்நாட்டுடன் புரிந்துணர்வுடன் செயற்பட எமது அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க ஆட்கடத்தல் வர்த்தகத்துடன் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளை ஒழிப்பதற்கும், அவ்வாறு அனுப்பப்படுபவர்களை மீள வரவழைப்பதற்குமான தகவல்களை இரண்டு நாடுகளுக்கிடையிலும் பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படும்.

ஆட்கடத்தல், தனிநபர் வர்த்தகம் அல்லாமல் சர்வதேச ரீதியில் இடம்பெறும் குற்றச்செயலாக தற்போது விரிவடைந்துள்ளது. இதனால் சர்வதேச பொலிஸ் ‘இன்டர்போல்’நிறுவனமுடன் இணைந்து நாம் செயற்படுவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ) 


Add new comment

Or log in with...