அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஜனவரியில் அதிகரிப்பு | தினகரன்

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஜனவரியில் அதிகரிப்பு

2015 சம்பள உயர்வு அடிப்படையில் அதிகரிக்க அரசு தீர்மானம்; வருடாந்தம் ரூ.12 பில். ஒதுக்கீடு

சகல அரசாங்க ஊழியர்களினதும் அடிப்படை சம்பளம் ஜனவரி முதல் 15 சத வீதத்தால் உயர்த்தப்படுமென அமைச்சர் வஜிரஅபேவர்தன் நேற்று (14) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2015 இல் அதிகரிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த உயர்வு வழங்கப்படுவதாக அவர் கூறினார்.அரசாங்கம் வழங்கிய உத்தரவாதத்தின் கீழ் 2020 வரை அரசாங்க ஊழியரின் அடப்படை சம்பளத்தில் அதிகரிப்பு செய்யப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, அரச துறையில் குறைந்த சம்பளம் பெறும் அலுவலக உதவியாளரின் அடிப்படைச் சம்பளம் 3,075 ரூபாவினாலும் கூடுதல் அடிப்படை சம்பளம் பெறும் சட்டமா அதிபரின் அடிப்படை சம்பளம் 14 ஆயிரம் ரூபாவினாலும் அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டு வரை அரச உத்தியோகஸ்தர்களின் அடிப்படை சம்பளம் பலப்படுத்தப்படும் எனவும் இதற்காக வருடாந்தம் 12 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்:

கடந்த காலத்தில் வெற்றி கொள்ள முடியாத பல துறைகளில் வெற்றியீட்டுவது குறித்து இந்த வரவு செலவுத்திட்டதினூடாக கவனம் செலுத்தப் பட்டுள்ளது. இதில் வடக்கு கிழக்கு குறித்தும் முழுக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மன்னார், வவுனியா.முல்லைத்தீவு. குருநாகல்,காலி , பொலன்நறுவை மாவட்ட மக்களின் பல பிரச்சினைகளை அரசாங்கத்தின் தலையீட்டின் கீழ் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காலி மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு இலவசமாக அடையாள அட்டை வழங்கியுள்ளோம். வவுனியா.முல்லைத்தீவு கிளிநொச்சி,பகுதிகளிலும் இவ்வாறு இலவசமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்டதில் 80 ஆயிரம் பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சியில் பெற்ற கடன் தொகை எவ்வளவு என்பதை கண்டுபிடிக்க ஒருவருடம் பிடித்தது. முதலீடுகளுக்கு உகந்த அரச காணிகளை அடையாளங்கண்டு வருகிறோம்.

அலுவலக உதவியாளரின் அடிப்படை சம்பளம் 2015 ஆம் ஆண்டில் 14 ஆயிரம் ரூபாவாக இருந்தது.நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் 2016 இல் அது 17,450 ரூபாவாக உயர்த்தப்பட்டது.2017 இல் இது 20,525 ரூபாவாக , அதிகரிக்கப்பட்டது. 2018 ஜனவரியாகும் போது அலுவலக உதவியாளரின் அடிப்படை சம்பளம் 23.600 ரூபாவாக அதிகரிக்கப்படும். இது 15 வீத உயர்வாகும். இதன் படி அடுத்த வருடத்தில் 3,075 ரூபா அடிப்படை சம்பளத்தில் அதிகரிக்கப்படுகிறது.

2015 இல் நிபுணத்துவ மருத்துவரின் அடிப்படை சம்பளம் 42 ஆயிரமாக இருந்த நிலையில், 2016 இல் அது 51,512 ஆகவும் 2017 இல் 60,634 ஆகவும் உயர்த்தப்பட்டது. 2018 ஜனவரியில் இவர்களின் அடிப்படைச் சம்பளம் 69,750 ரூபாவாக 9.122 ரூபாவால் அதிகரிக்கிறது.

அலுவலக சிற்றூழியரின் மேலதிக நேர கொடுப்பனவு மணித்தியாலத்திற்கு 50 ரூபாகவாக இருந்ததுடன் ,தற்போது 94 ரூபா வரை உயர்கிறது.

அரச துறையில் சட்டமா அதிபரே கூடுதல் அடிப்படை சம்பளத்தை பெறுகிறார். 2015 இல் இது 67,000 ஆயிரம் ரூபாவாகவும் 2016 இல் அது 81,000 ரூபாவாகவும் இருந்தது. 2017 இல் 95 ஆயிரம் ரூபாவாக அவரின் அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டது. அடுத்த வருடம் ஜனவரி முதல் இது ஒரு இலட்சத்து 10 ,ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கிறது. இது15 வீத அதிகரிப்பாகும்.

இந்த அடிப்படை சம்பள அதிகரிப்பை சீர் செய்ய வரவு செலவுத்திட்டதில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பிற்காக வருடாந்தம் 12 பில்லியன் ரூபா அவசியமாகிறது. 2020 வரை அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பலப்படுத்தப்படும். எனவே இந்த நிலையில் அரச துறையில் தன்னார்வ ஓய்வூத் திட்டம் கொண்டு வரப்பட்டாலும் எவரும் விலக மாட்டார்கள்.இதன்மூலம் ஓய்வூதியம், மேலதிக நேரக் கொடுப்பனவு,கடன்பெறும் வரையறை என்பன அதிகரிக்குமென்றும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சு உயரதிகாரியொருவர்,

2015 தேர்தலில் அளித்த 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வாக்குறுதியின் அடிப்படையிலே ஜனவரி முதல் இந்த அடிப்படை சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகிறது. இதற்கமைய 2016/03 சுற்றுநிருபம்​வெளியிடப்பட்டுள்ளது.இந்த சுற்றுநிருபத்திற்கமைய வாக்களித்த 10 ஆயிரம் ரூபாவை விட அதிக அடிப்படை சம்பள உயர்வு அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் கிடைக்கும். அரச ஊழியர்கள் தரம்பிரிக்கப்பட்டுள்ளதோடு அதற்கமைய வருடாந்தம் அடிப்படை சம்பளம் உயர்த்தப்படும்.2020 வரை இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும்.

2015 இல் 14 ஆயிரமாக இருந்த அலுவலக சிற்றூழியரின் அடிப்படை சம்பளம் 2020 ஆம் ஆண்டாகையில் 24,250 ரூபாவாக அதிகரிக்கும்.தற்பொழுது கொடுப்பனவாக வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா கட்டம் கட்டமாக அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும்.ஏனைய அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் தரம்பிரிக்கப் பட்டதற்கமைய 2020 வரை வருடாந்தம் அதிகரிக்கப்படும். 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...