10 மாதங்களின் பின் வைத்திய மாணவர்கள் பல்கலைகழத்திற்கு | தினகரன்

10 மாதங்களின் பின் வைத்திய மாணவர்கள் பல்கலைகழத்திற்கு

 

சைட்டம் தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பில் வைத்திய பீட பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுவந்த விரிவுரை பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் அனைத்து வைத்திய பீட மாணவர்களும் மீண்டும் விரிவுரைகளில் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக வைத்திய பீட மாணவ செயற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

சைட்டம் பிரச்சினைக்கு சாதகமான தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதால் மாணவர்கள் அனைவரையும் விரிவுரைகளில் கலந்துகொள்ளுமாறு, பல்கலைக்கழக உபவேந்தர்களின் சங்கத்தினால் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அரச பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பல போராட்டங்களை நடத்தி வந்திருந்ததோடு, தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக விரிவுரை பகிஷ்கரிப்பையும் மேற்கொண்டு வந்தனர்.

அரச பல்கலைக்கழக மாணவர்களால் நாடளாவிய ரீதியில் உண்ணாவிரதம், போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு, இதன்போது மாணவர்கள் பொலிஸாரின் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்கள் மாத்திரமன்றி தடியடி தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்திருந்தனர்.

பெண்கள், ஆண்கள் மற்றும் பௌத்த துறவிகள் என பலர் இதன்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைகப்பட்டார்கள்.

இறுதியாக, மருத்துவ பீட மாணவர்கள் தொடர்ச்சியாக 10 மாதங்கள் விரிவுரை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையிலேயே சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் கலைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தால் கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

சைட்டம் நிறுவன மருத்துவ பீடம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட முடிவுகளே இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில்

- சைட்டம் நிறுவனத்திற்கு புதிதாக மருத்துவ பீடத்திற்கான மாணவர்களை இணைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டது.

- சைட்டம் நிறுவனத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, இலங்கை மருத்துவசபையின் ஆலோசனைக்கமைய முடிவெடுக்கப்படும்.

- ஏற்கனவே இணைந்துள்ள சைட்டம் மாணவர்கள் அரச வைத்தியசாலைகளில் பயிற்சிகளைப் பெறுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

- மருத்துவக்கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான குறைந்தபட்ச தர நிர்ணயங்கள் அடங்கிய வர்த்தமானி, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

- சைட்டம் நிறுவனம் கலைக்கப்படுவதுடன், அதனை சட்ட ரீதியாக இலாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றப்படும்.

- சைட்டம் நிறுவனத்தின் சொத்துக்கள், பொறுப்புக்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், இலாப நோக்கத்தை கொண்டிராத புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

- குறித்த நிறுவனம் உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கப்படும்.

எனும் பரிந்துரைகள், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

 


Add new comment

Or log in with...