அற்ப அரசியல் இலாபம் தேடும் முயற்சிக்கு வலு சேர்க்கும் காரியம் | தினகரன்

அற்ப அரசியல் இலாபம் தேடும் முயற்சிக்கு வலு சேர்க்கும் காரியம்

நாட்டில் நிலவும் தேசியப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் நிலைபேறான தீர்வைக் காண்பதோடு, நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதில் இணக்கப்பாட்டு அரசாங்கம் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றது.

இதன் நிமித்தம் பல்வேறு விதமான முற்போக்கு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் நான்கு தசாப்தங்கள் பழைமைமிகு தற்போதைய அரசியலமைப்பை மறுசீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக இந்நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் நிலைபேறான தீர்வை அடைந்து கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

அந்தவகையில் பாராளுமன்றத்தையே அரசியல் அமைப்பு பேரவையாக மாற்றியுள்ள அரசாங்கம், அதற்கான பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் முன்னெடுத்து இருக்கின்றது. இதனடிப்படையில் உத்தேச அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை செப்டம்பர் மாதம் 21ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை தொடர்பில் ஒக்டோபர் மாதம் பிற்பகுதியில் விவாதமும் நடத்தப்பட்டது.

இவ்வாறு நாட்டின் சுபீட்சத்தை இலக்காகக் கொண்ட முற்போக்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில், இவ்வரசாங்கத்தின் முன்னாள் நீதியமைச்சரான கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ அரசியலமைப்பு பேரவையை கலைத்து விடுமாறு கோரி சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் ஒரிடத்தில் "ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பேரவை அரசியல் யாப்புக்கு முரணானது, சட்டவிரோதமானது மாத்திரமல்லாமல் ஆரம்பத்திலிருந்து அது செல்லுபடியற்றது' என்று குறிப்பிட்டுள்ளதோடு, 'நடப்பிலுள்ள அரசியலமைப்பை இரத்து செய்வதற்கும் புதிய யாப்பை நிறைவேற்றுவதற்குமான நடைமுறையை தற்போதைய யாப்பின் இரண்டாவது அத்தியாயத்தின் 82 உறுப்புரை குறிப்பிட்டிருக்கின்றது" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அக்கடிதத்தின் மற்றொரு இடத்தில், 'அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையின் சில முன்மொழிவுகள் இந்நாட்டை பிளவுபடுத்த வழிவகுப்பதில் மறைமுகமாகவும், அதேபோல் நேரடியாகவும் கருவியாக அமையக் கூடும்' எனவும் தெரிவித்திருக்கின்றார்.

நீதியமைச்சராகப் பதவி வகித்த இவர், பாராளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்படுவதற்கு ஆதரவு வழங்கியவர்களில் ஒருவராவார். அத்தோடு இவர் உத்தேச அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் கூட.

இவ்வாறு பொறுப்புமிக்க பதவிகளை வகித்த இவர், நீதியமைச்சுப் பதவியை இழந்த பின்னர்தான் , அரசியலமைப்பு பேரவை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அது சட்டவிரோதமானது என்றும் குறிப்பிடுவதோடு, அவரை உறுப்பினராகக் கொண்ட குழு தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிக்கப்பட்டும் உள்ள இடைக்கால அறிக்கை தொடர்பில் இவ்வாறான கதையை கூறுகின்றார்.

இணக்கப்பாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றால் அதனை ஆரம்பத்திலேயே பகிரங்கப்படுத்தி இருக்கலாம். அது மாத்திரமல்லாமல் அவர் பங்களிப்பு நல்கிய இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்ட பின்னர் அது நாடு பிளவுபடுவதற்கு வழிவகுப்பதாகக் குறிப்பிடுகின்றார்.

இவர் அங்கம் வகித்த அரசாங்கமும் அமைச்சரவையும் சட்டத்திற்கு முரணான வகையில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றினால் அதனை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு திருத்தி இருக்க வேண்டும். அதேபோன்று அவர் அங்கம் வகித்த வழிநடத்தல் குழு, நாடு பிளவுபடக் கூடிய வகையில் இடைக்கால அறிக்கையைத் தயாரித்தால் அதனை அந்நடவடிக்கை இடம்பெறும் போதே குறிப்பிட்டு அதனைத் திருத்தி அமைத்திருக்க வேண்டும். இவை எதையும் அவர் செய்ததாகத் தெரியவில்லை.

ஆனால் அமைச்சுப் பதவியை இழந்த பின்னர்தான் அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். அவர் அங்கம் வகிக்கும் அரசாங்கம், வழிநடத்தல் குழு தவறு, பிழை செய்தால் அந்த நேரத்திலேயே சுட்டிக்காட்டி திருத்தி இருப்பதே சிறந்தது. அப்படியென்றால் அவர் குறிப்பிடும் தவறுகள் இடம்பெறுவதைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால், அரசாங்கம் நாட்டின் சுபிட்சத்துக்கும் விமோசனத்துக்கும் தடைக் கற்களாக இருக்கின்ற விடயங்களுக்கு நிலைபேறான தீர்வைக் கண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல அர்ப்பணிப்போடு செயற்படுகின்றது. அதற்கான பிரதான நடவடிக்கையாகவே புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இருந்தும் சில இனவாதக் குழுக்களும், அற்ப அரசியல் இலாபம் தேட முயற்சிக்கும் சிலரும் இந்நடவடிக்கைகளை பிழையாகவும், தவறாகவும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு வலு சேர்க்க முன்னாள் நீதியமைச்சர் எதிர்பார்ப்பதாகவே இக்கடிதம் விளங்குகின்றது.

ஆனால் நாட்டின் மீது உண்மையான பற்றுக் கொண்டவர்கள் இந்நாடு தொடர்ந்தும் பின்னடைந்து இருப்பதை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் இந்நாடு சுதந்திரமடையும் போது இந்நாட்டை விடவும் பின்தங்கிய நிலையில் இருந்த பல நாடுகள் இன்று இந்நாட்டை விடவும் பல மடங்கு முன்னேற்றமடைந்து விட்டன. அவ்வாறு அந்நாடுகள் முன்னேற்றமடைவதற்கு அந்தந்த நாட்டு மக்களின் ஒற்றுமையும், அர்ப்பணிப்புமே அடைப்படைக் காரணமாகும். இதனை கருத்திற் கொண்டுதான் தற்போதைய அரசாங்கம் நாட்டின் சுபீட்சத்துக்கும் விமோசனத்துக்கும் தடைக் கற்களாக விளங்குகின்ற விடயங்களுக்கு நிலைபேறான தீர்வை அரசியல் யாப்பினூடாக கண்டு நாட்டை துரித அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்குவர். ஆனால் நாட்டை உண்மையாக நேசிக்கும் சகலரதும் இந்நாட்டை சுபீட்சம் மிக்க நாடாகக் கட்டியெழுப்ப உதவியும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும்.அதுவே இன்றைய தேவையாகும்.


Add new comment

Or log in with...