ஈரான், ஈராக் எல்லையில் பூகம்பம்: 348பேர் பலி | தினகரன்

ஈரான், ஈராக் எல்லையில் பூகம்பம்: 348பேர் பலி

3950 பேர் காயம், 382 பேர் கவலைக்கிடம்

ஈரான், ஈராக்கின் வடக்கு எல்லை பிராந்திய சுலைமானிய்யா பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய பூகம்பத்தில் 348 பேர் உயிரிழந்ததுடன், 3950க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் இந்த பூகம்பம் இடம்பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த பூகம்பத்தின் அதிர்வு நாடெங்கும் உணரப்பட்டது. காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடோரில் 382 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இப்பகுதி மலைப்பாங்கான பிரதேசத்தில் உள்ளதால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கித்தவிப்பதாக இருநாடுகளின் பிரதான ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

பூகம்பத்தை அடுத்து ஈரான் மற்றும் ஈராக்கின் பல நகரங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அதிகர்வுகளுக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் குளிரான காலநிலைக்கு மத்தியிலும் தமது வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகள், பூங்காக்கள் என வெட்ட வெளிகளில் தங்கியுள்ளனர்.

ஈரானின் சர்புல்லாஹ் நகரப்பகுதியிலே அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட ஈரானின் பின்தங்கிய பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியுள்ளது. இல்லாவிடின் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாமென மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டொரு தினங்களுக்குள் மீட்பு பணிகளை முடிக்காவிடின் காயமுற்றோரை, சிக்கியுள்ளோரை விரைவாக மீட்காவிட்டால் உயிரிழக்க நேரிடுமென அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் கெர்மன்ஷாஹ் மாகாணமே பூகம்பத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்த பூகம்பத்தால் ஈரானின் 14 மாகாணங்கள் பாதிப்புற்றிருப்பதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பூகம்பத்தில் ஈராக்கில் குறைந்தது ஆறுபேர் உயிரிழந்ததுடன் 50 பேர் வரை காயமடைந்திருப்பதாக குர்திஷ் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பூகம்பம் தொலைதூரத்தில் உள்ள ஈராக் தலைநகர் பக்தாதிலும் உணரப்பட்டதோடு பலரும் தமது வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து வெளியே ஓடித்தப்பியுள்ளனர்.

அடிக்கடி பூகம்பம் ஏற்படும் பகுதியில் ஈரான் அமைந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு இங்கு வரலாற்று நகரான பாம்மில் ஏற்பட்ட 6.5 ரிக்டர் பூகம்பத்தில் சுமார் 31,000 பேர் வரை உயிரிழந்தனர்.

33.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, இஸ்ரேல், கட்டார் மற்றும் குவைத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.


Add new comment

Or log in with...