ஈரான்-ஈராக் எல்லை பகுதியில் பயங்கர பூகம்பம்: 348 பேர் பலி | தினகரன்

ஈரான்-ஈராக் எல்லை பகுதியில் பயங்கர பூகம்பம்: 348 பேர் பலி

ஈரான் மற்றும் ஈராக்கின் வடக்கு எல்லை பிராந்தியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற பயங்கர பூகம்பத்தில் குறைந்தது 348 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவான இந்த பூகம்பம் பிராந்தியம் எங்கும் உணரப்பட்டிருப்பதோடு மலைப்பாங்கான பகுதியில் பலரும் இடிபாடுகளில் சிக்குண்டிருப்பதாக இருநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் 336 பேர் கொல்லப்பட்டு மேலும் 3,950 க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக ஈரான் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் பதிக்கப்பட்ட ஈரானின் பின்தங்கிய பகுதிகளை மீட்பாளர்கள் எட்டும்போது உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஈரானின் பல மேற்கு பிராந்தியங்களில் இந்த பூகம்பம் உணரப்பட்டபோதும் கெர்மன்ஷாஹ் மாகாணமே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இங்கு மூன்று நாள் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் எல்லையில் இருந்து சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கெர்மன்ஷாஹ் மாகாணத்தின் சர்போலே சஹாப் மாவட்டத்தில் 236 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்த பூகம்பம் மண் வீடுகளாலான சில கிராமங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இடிந்த கட்டடங்களில் சிக்கியிருப்போரை தேடி மீட்பாளர்கள் போராடி வருகின்றனர்.

இந்த பூகம்பம் நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தி இருப்பதால் மீட்பு நடவடிக்கையை பாதித்துள்ளதாக அதிகாரிகள் ஈரான் அரச தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளனர். பூகம்பத்தால் ஈரானின் 14 மாகாணங்கள் பாதிப்புற்றிருப்பதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லாஹ் அலி கமெனெய் நேற்று தனது அனுதாபத்தை வெளியிட்டதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து அரச நிறுவனங்களும் அவசர உதவிகளை வழங்க வலியுறுத்தினார்.

குலுங்கிய கட்டடங்கள்

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது குர்திஸ்தான் மாகாணத்தின் சுலைமானியா பகுதியில் பெஞ்வின் எனுமிடத்தில் நிலை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஈராக் அரசோ நிலநடுக்கத்தின் தாக்கம் 6.5 ரிக்டர் எனக் கூறுயுள்ளது.

இந்த பூகம்பத்தில் ஈராக்கில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமடைந்திருப்பதாக குர்திஷ் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பூகம்பம் தொலைதூரத்தில் உள்ள ஈராக் தலைநகர் பக்தாதிலும் உணரப்பட்டதோடு பலரும் தமது வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து வெளியே ஓட்டம்பிடித்துள்ளனர். “எனது குழந்தைகளுடன் இரவு உணவு உட்கொண்டிருந்தபோது திடீரென்று கட்டடம் காற்றில் ஆடத் தொடங்கியது” என்று பக்தாதின் சலிஹியா மாவட்டத்தைச் சேர்ந்த அஜீதா அமீன் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தனது மூன்று குழந்தைகளுடன் வெளியே ஓடியுள்ளார்.

“ஆரம்பத்தில் பாரிய குண்டொன்று வெடித்ததாகவே நினைத்தேன். எம்மை சூழவிருந்தவர்கள் ‘பூகம்பம்’ என்று கூச்சலிடுவதை” பின்னர் கேட்டேன்” என்றும் அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.

பூகம்பம் மையம்கொண்ட பகுதிக்கு அருகாமையில் உள்ள ஈராக் குர்திஷ்தான் பிராந்திய தலைநகர் எர்பிலிலும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

குளிர் காலநிலை

பூகம்பத்தை அடுத்து ஈரான் மற்றும் ஈராக்கின் பல நகரங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அதிகர்வுகளுக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் குளிரான காலநிலைக்கு மத்தியில் தமது வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகள், பூங்காக்கள் என வெட்ட வெளிகளில் தங்கியுள்ளனர்.

பூகம்பத்திற்கு பின்னர் சுமார் 118 தடவைகள் சிறு அதிர்வுகள் பதிவாகி இருப்பதாக ஈரானிய புவியியல் மையம் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்தும் இதுபோன்ற அதிர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. 70,000க்கும் அதிகமானவர்களுக்கு அவசர தங்குமிடங்கள் தேவைப்படுவதாக ஈரானிய செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தமது வீட்டை இழந்து உயிர்தப்பிய நூற்றுக்கணக்கான ஈரானியர்களில் ஒருவரான ஹொஜ்ஜத் கரிபியன் தமது குடும்பத்தினருடன் அதிக குளிர்கொண்ட காலநிலைக்கு எதிராக போராடி வருகிறார். “பூகம்பத்தால் எனது வீடு இடிய ஆரம்பிக்கும்போது எனது இரு குழந்தைகளும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை எடுத்துக் கொண்டு நான் வீதிக்கு ஓடிவந்தேன். உதவிப் பணியாளர்கள் எம்மை பாடசாலை கட்டடம் ஒன்றுக்கு அழைத்து வரும்வரை வீதியில் பல மணி நேரம் காத்திருந்தேன்” என்று கரிபியன் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

பூகம்பம் இடம்பெற்ற பகுதிகளுக்கு ஈரான் புரட்சிப் படை காவலர்கள், துணைப் படையினர் அனுப்பப்பட்டதாக அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

சில பாதைகள் தடைப்பட்டிருக்கும் நிலையில் பின்தங்கிய பகுதிகளில் பாதிக்கப்பட்டோர் குறித்து அரசு கவலை அடைந்திருப்பதாக ஈரான் உள்துறை அமைச்சர் அப்துல்ரெசா ரஹ்மானி குறிப்பிட்டுள்ளார். இந்த பகுதியில் உள்ள எண்ணெய் குழாய்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஈரானிய எண்ணெய் துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் பகுதியில் அமைந்திருப்பதோடு 2003 ஆம் ஆண்டு இங்கு வரலாற்று நகரான பாம்மில் ஏற்பட்ட 6.5 ரிக்டர் பூகம்பத்தில் சுமார் 31,000 பேர் வரை உயிரிழந்தனர்.

இந்த பூகம்பத்தில் ஈராக் பக்கமாக சிறு நகரான டர்பன்டிகானில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இங்கும் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹலப்ஜா நகரில் பூகம்பத்தின்போது மின்சார கம்பம் விழுந்து 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

கட்டடங்களில் இருந்து மக்களை வெளியேறி இருக்கும்படி ஈராக் புவியியல் மையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

33.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, இஸ்ரேல், கட்டார் மற்றும் குவைட்டிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. 


Add new comment

Or log in with...